மகளிர் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரைத் துவக்க வாழ்நாள் சாதனையாளர் விருது பெறும் சாந்தா ரங்கசாமி யோசனை

  • 2 மார்ச் 2017

பிசிசிஐ (இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்) வழங்கும் வாழ்நாள் சாதனையாளர் விருதை பெறும் முதல் வீராங்கனை என்ற பெருமையை சாந்தா ரங்கசாமி பெற்றுள்ளார்.

படத்தின் காப்புரிமை SHANTHA RANGASWAMY/FACEBOOK
Image caption வாழ்நாள் சாதனையாளர் - சாந்தா ரங்கசாமி

முன்னாள் கிரிக்கெட் வீரர்களைக் கௌரவிக்கும் வகையில், வாழ்நாள் சாதனையாளர் விருதை பிசிசிஐ அமைப்பு வழங்கி வருகிறது. இந்நிலையில், இந்த ஆண்டு இவ்விருதை முதல்முறையாக பெறும் வீராங்கனை என்ற பெருமையை முன்னாள் மகளிர் கிரிக்கெட் கேப்டன் சாந்தா ரங்கசாமி பெறுகிறார்.

தனக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது கிடைத்தது குறித்து பிபிசி தமிழோசையிடம் சாந்தா ரங்கசாமி கருத்து தெரிவிக்கையில், ''இதன் மூலம் பெண்கள் கிரிக்கெட்டுக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது. இனி வரும் ஆண்டுகளிலும், ஒரு முன்னாள் கிரிக்கெட் வீராங்கனைக்கு இந்த விருது கிடைக்கும் என்பது மிகவும் உத்வேகம் அளிக்கும்'' என்று தெரிவித்தார்.

மேலும், அவர் கூறுகையில், ''பெண்கள் கிரிக்கெட் அமைப்பை பிசிசிஐ ஆரம்பித்து 10 வருடங்களாகி விட்டது. இது வரையில் யாருக்கும் இந்த விருது தராதது நிச்சயம் தாமதம்தான். எனக்கென்று இல்லை, யாருக்காவது இந்த விருதை தந்திருக்கலாம். ஆனால், இது குறித்து குறை கூறுவதை விட, இனி வரும் ஆண்டுகளில் இது போன்ற விருதுகள், அங்கீகாரங்கள் பெண் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு கிடைக்கும் என்பதில் மகிழ்ச்சிதான்'' என்று சாந்தா ரங்கசாமி குறிப்பிட்டார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption 'மகளிர் கிரிக்கெட்டுக்கு இன்னமும் அங்கீகாரம் வேண்டும்'

மகளிர் கிரிக்கெட்டுக்கு அங்கீகாரம் மற்றும் விளம்பரம் கிடைக்கிறதா என்ற வினாவுக்கு பதிலளித்த சாந்தா ரங்கசாமி, ''நான் விளையாடிய காலத்தில் மகளிர் கிரிக்கெட்டுக்கு பத்திரிக்கைகள் மூலம் தற்காலத்தில் ஆண்கள் கிரிக்கெட்டுக்கு கிடைக்கும் அங்கீகாரம் கிடைத்தது. தற்போது மகளிர் கிரிக்கெட்டின் நிலை உயர்ந்தாலும், மகளிர் கிரிக்கெட் அமைப்பு பிசிசிஐயின் கட்டுப்பாட்டுக்கு வந்த பின்னர், மகளிர் கிரிக்கெட்டுக்கு கிடைக்க வேண்டிய அங்கீகாரம் மற்றும் விளம்பரம் ஆகியவை கிடைக்கவில்லை'' என்று தெரிவித்தார்.

'ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மகளிர் பிரிவு தொடங்கப்பட வேண்டும்'

ஐபிஎல் போல ஆஸ்திரேலியாவில் பிக்பாஷ் லீக் உருவானது. அதே போல், அங்கு உடனடியாக மகளிர் கிரிக்கெட்டர்களுக்கும் பிக்பாஷ் லீக் ஆரம்பிக்கப்பட்டது. இதே போல் ஐபிஎல் மகளிர் கிரிக்கெட் தொடர் ஆரம்பிக்கப்பட்டால், இது மகளிர் கிரிக்கெட் அமைப்புக்கு மிகவும் நன்மை பயக்கும் என்று சாந்தா ரங்கசாமி குறிப்பிட்டார்.

உள்ளூர் கிரிக்கெட் விளையாட்டை ஊக்குவிக்க வேண்டியது மிகவும் கட்டாயம் என்று குறிப்பிட்ட சாந்தா ரங்கசாமி, பெண்கள் கிரிக்கெட் முன்னேற ஊடகங்களும் உதவுவது அவசியம் என்று தெரிவித்தார்.

படத்தின் காப்புரிமை Getty Images

நாட்டின் ஓவ்வொரு மையத்திலும் ஊடக ஒருங்கிணைப்பாளரை நியமித்து, மகளிர் கிரிக்கெட்டுக்கு போதுமான விளம்பரம் மற்றும் அங்கீகாரம் தந்தால், அடுத்த 5 ஆண்டுகளில் மகளிர் கிரிக்கெட் நாடெங்கும் பிரபலமாகும் என்று அவர் மேலும் கூறினார்.

அர்ஜுனா விருது வென்ற சாந்தா ரங்கசாமி

16 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 19 ஒருநாள் சர்வதேச போட்டிகள் விளையாடியுள்ள சாந்தா ரங்கசாமி, தான் விளையாடிய காலத்தில் தனக்கு அர்ஜுனா விருது கிடைத்தது குறித்து கூறுகையில், ''எனது 22-ஆவது வயதில் எந்த பரிந்துரையும் இல்லாமல் அர்ஜுனா விருது வென்றேன். அப்போது, அது எனக்கு மிகவும் மகிழ்வையளித்தது'' என்று தெரிவித்தார்.

''தற்போது நான் வென்றுள்ள வாழ்நாள் சாதனையாளர் விருது எனக்கானது மட்டுமல்ல, ஒட்டுமொத்த மகளிர் கிரிக்கெட்டுக்கும் உரியதாகும்'' என்று அவர் மேலும் கூறினார்.

சர்வதேச மகளிர் தினமான மார்ச் 8-ஆம் தேதியன்று வாழ்நாள் சாதனையாளர் விருதை பெறவுள்ள சாந்தா ரங்கசாமி இளைய வீராங்கனைகளுக்கு விடுத்துள்ள செய்தியில், ''அனைத்து வீராங்கனைகளும் கடுமையான பயிற்சி மேற்கொள்ள வேண்டும். நேர்மையாக உழைத்தால் அவர்கள் எதிர்பார்க்கும் வெற்றி தானாக வந்து சேரும்'' என்று தெரிவித்தார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்