மூர்க்கத்தனமான குற்றச்சாட்டு: விராட் கோலியை `விளாசும்' ஆஸ்திரேலிய ஊடகங்கள்

  • 8 மார்ச் 2017

ஆட்டக்களத்தில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி கேப்டன் மற்றும் அணியினர் நடந்துகொண்ட விதம் குறித்து விமர்சித்த இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட்கோலியின் குற்றச்சாட்டுக்கள் மூர்க்கத்தனமானவை என்று ஆஸ்திரேலிய ஊடகங்கள் கடுமையாக விமர்சனம் செய்துள்ளன.

படத்தின் காப்புரிமை Reuters

நேற்று செவ்வாய்க்கிழமைமுடிவடைந்த டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் ஸ்மித், எல்.பி.டபிள்யு முறையில் அவுட் ஆனார். அவர் எதிர்முனை வீரரை கலந்தாலோசித்த பிறகு, ஆஸ்திரேலிய வீரர்கள் ஓய்வெடுக்கும் அறையை நோக்கி தான் ஆட்டமிழந்தது தொடர்பாக மறுபரிசீலனை செய்யலாமா என்று சைகையில் கேட்டதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.

இது பெரும் சர்ச்சையைத் தொடங்கி வைத்துள்ளது.

ஆஸ்திரேலிய வீரர்கள் மீதான கோலியின் விமர்சனம்

இந்நிலையில், போட்டி முடிந்தபின், செய்தியாளர்களிடம் பேசிய இந்திய அணித்தலைவர் விராட் கோலி, ''நான் பேட்டிங் செய்த போதே அவர்கள் இவ்வாறு இருமுறை செய்ததைப் பார்த்தேன். . அதாவது டி.ஆர்.எஸ். கேட்க ஓய்வறையை ஆஸ்திரேலிய வீரர்கள் பார்ப்பதை நான் இருமுறை கண்டேன். அதனால்தான் நடுவர் ஸ்மித்தை நோக்கி வந்து அவரை அனுப்பி வைத்தார்'' என்று கூறினார்.

''கடந்த 3 நாட்களாகவே ஆஸ்திரேலியர்கள் ஓய்வறை உதவியை நாடி வந்ததைக் குறிப்பிட்டேன். ஆஸ்திரேலிய அணித்தலைவர் ஸ்மித் தனது எல்லையை மீறி விட்டார்'' என்று மேலும் தெரிவித்தார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption டிஆர்எஸ் முடிவெடுக்க ஓய்வறையின் கருத்தை அறிய முற்பட்டாரா ஸ்மித்?

ஆஸ்திரேலிய ஊடகங்களின் மறுப்பும், விமர்சனமும்

விராட் கோலியின் இந்த விமர்சனம் குறித்து கருத்துத் தெரிவித்த ஆஸ்திரேலிய ஊடகஙகள், இந்தியாவுக்கு வருகை புரிந்து டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் வெளிநாட்டு அணி மீது கடுமையான குற்றச்சாட்டுக்களை கோலி கூறுவதாக தெரிவித்துள்ளன.

'தி சிட்னி மார்னிங் ஹெரால்ட்' பத்திரிக்கை தனது தலைப்புச் செய்தியில், ''வரலாற்றுப் புகழ் மிக்க இந்தியாவின் வெற்றிக்கு பிறகு, ஏமாற்றுவதாக ஆஸ்திரேலியா மீது குற்றம் சாட்டுகிறார் கோலி'' என்று குறிப்பிட்டுள்ளது.

இதே போல, வேறு சில ஆஸ்திரேலிய பத்திரிக்கைகளும், இந்திய கேப்டன் விராட் கோலி கடுமையான கருத்தை வெளியிட்டதாக விமர்சித்துள்ளன..

ஆஸ்திரேலியா மீதான குற்றச்சாட்டுக்கள் ''மூர்க்கத்தனமானது''

நேர்மையற்ற முறையில் ஆஸ்திரேலியா விளையாடியதாக தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் ''மூர்க்கத்தனமானவை'' என்று கிரிக்கெட் ஆஸ்திரேலியா அமைப்பின் தலைமை நிர்வாகியான ஜேம்ஸ் சதர்லேண்ட் கருத்து தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை AP
Image caption கோலி மீது ஆஸ்திரேலிய பத்திரிக்கைகள் விமர்சனம்

கடந்த 2007-2008 காலகட்டத்தில், ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில், இந்திய சுழல் பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங், ஆஸ்திரேலிய வீரரான சைமண்ட்ஸ் குறித்து குரங்கு போல் இருப்பதாக கேலி செய்தார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அதனை ஹர்பஜன் சிங்கும், அப்போது களத்தில் இருந்த மற்ற இந்திய வீரர்களும் மறுத்தனர்.

இதற்கு பிறகு, தற்போது ஸ்மித் மற்றும் ஆஸ்திரேலிய வீரர்கள் குறித்து தெரிவித்த கருத்துக்களும், அதற்கு ஆஸ்திரேலிய ஊடகங்களின் எதிர்வினை கருத்துக்களும், மீண்டும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ரசிகர்களிடையே மோதலை உருவாக்குமா என்ற ஐயம் ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, இந்திய கிரிக்கெட் அணி கேப்டன், விராட் கோலி, நேர்த்தியாகவும், அதேசமயம் முதிர்ச்சியுடனும் செயல்படுவதாக, பிசிசிஐ எனப்படும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியம் கோலிக்கு ஆதரவுக்கரம் நீட்டியுள்ளது.

முன்னதாக, நேற்று முடிவடைந்த பெங்களூரு கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில், பரபரப்பான ஆட்டத்தில் இந்தியா 75 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வென்றது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்