சுழல்பந்து வீச்சை ஆதிக்கம் செலுத்தி வந்த இந்தியா தடுமாறுகிறதா?

  • 28 மார்ச் 2017

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை, 2-1 என இந்தியா வென்ற போதிலும், அனுபவம் இல்லாத ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்தியாதொடரில்ஆதிக்கம் செலுத்த தவறியதா ? அண்மைக் காலமாக இந்திய வீரர்கள் சுழல் பந்துவீச்சில் தடுமாறுகின்றனரா ?

படத்தின் காப்புரிமை AP
Image caption பூனே, பெங்களூரு போட்டிகளில் இந்திய வீரர்களுக்கு சிம்மசொப்பனமாக விளங்கிய நேதன் லயன் மற்றும் ஸ்டீவ் ஓ கீஃப்

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இன்று செவ்வாய்கிழமை தரம்சாலாவில் முடிவடைந்த நான்காவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியில், 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி, டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது.

கேப்டனான முதல் டெஸ்டில் ரஹானேவுக்கு வெற்றி: தொடரை வென்றது இந்தியா

ஆனால், தற்போது இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி, முந்தைய ஆஸ்திரேலிய அணிகளை போல அனுபவம் இல்லாத சூழலில், இந்தியா இந்த தொடரில் எதிர்பார்த்தபடி ஆதிக்கம் செலுத்த முடிந்ததா என்பது கேள்விக்குறிதான்.

பெங்களூரு டெஸ்ட்: அஸ்வின் சுழலில் சரிந்தது ஆஸ்திரேலியா

1970 மற்றும் 80-களில் இந்திய பேட்ஸ்மேன்கள் வேகப்பந்துவீச்சில் தடுமாறினாலும், சுழல்பந்துவீச்சை திறன்பட சமாளித்தனர். 1990-களுக்கு பிறகு அணியில் இடம்பெற்ற சவுரவ் கங்குலி, சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், சேவாக் மற்றும் வி.வி.எஸ். லக்ஷ்மன் போன்ற பல முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்கள் சுழல் பந்துவீச்சை சமாளிப்பதில் ஆதிக்கம் செலுத்தி வந்தனர்.

கெளரவ டாக்டர் பட்டத்தை நிராகரித்த ராகுல் டிராவிட்

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption சுழல்பந்து வீச்சை திறம்பட சமாளித்த சச்சின், கங்குலி, டிராவிட், லக்ஷ்மன் மற்றும் சேவாக்

ஆனால், தற்போது இந்த நிலை மாறியுள்ளதோ என்ற வினா எழுந்துள்ளது. அண்மையில் முடிவடைந்த டெஸ்ட் தொடரில், பூனே டெஸ்ட் போட்டியில் 12 விக்கெட்டுகளை பெற்ற ஆஸ்திரேலிய இடதுகை சுழல் பந்துவீச்சாளர் ஸ்டீவ் ஓ கீஃப் , ஆட்டத்தின் போக்கை மாற்றி, ஆஸ்திரேலியா வெற்றி பெற வழிவகுத்தார்.

இந்திய அணியை நிலைகுலையச் செய்த ஆஸ்திரேலிய சுழல் பந்துவீச்சாளர்கள்

பெங்களூருவில் நடந்த இரண்டாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில், மற்றொரு ஆஸ்திரேலிய சுழல் பந்து வீச்சாளரான நேதன் லயன் ஒரே இன்னிங்ஸில் 8 விக்கெட்டுகளை பெற்றார். இறுதி கிரிக்கெட் டெஸ்டிலும் நேதன் லயனின் பங்களிப்பு குறிப்பிடத்தக்க அளவில் இருந்தது.

இதே போல், 2012-ஆம் ஆண்டு நடந்த தொடரில் இங்கிலாந்து பந்து வீச்சாளர்கள் கிராம் ஸ்வான் மற்றும் மாண்டி பனேசர் ஆகியோர் பல போட்டிகளில் ஆட்டத்தின் போக்கை மாற்றி தொடரை இங்கிலாந்து வெல்ல பெரிதும் உதவினர். மொயீன் அலியும் இந்திய பேட்ஸ்மேன்களை பல போட்டிகளில் தடுமாறச் செய்தார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption 2012-ஆம் ஆண்டில் நடந்த தொடரில் இந்தியாவை தடுமாறச் செய்த மாண்டி பனேசர்

இந்திய பேஸ்ட்மேன்கள் சுழல் பந்துச்சில் தடுமாறுகின்றனரா என்பது குறித்து பிபிசி தமிழிடம் உரையாடிய மூத்த பத்திரிக்கையாளர் விஜய் லோக்பாலி கூறுகையில், ''முந்தைய காலகட்டத்தில் இந்திய பேட்ஸ்மேன்கள் சிறப்பாக சுழல் பந்துவீச்சை சந்தித்தனர் என்பது உண்மையே. அதற்கு முக்கிய காரணம் அவர்கள் ரஞ்சி கோப்பை பல உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்து விளையாடினர்'' என்று தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், ''முன்பு இந்திய பேட்ஸ்மேன்கள் தங்கள் பேட்டிங் களத்தை விட்டு இறங்கி வந்து ஆடுவது வழக்கம். ஆனால், தற்போதுள்ள வீரர்கள் தற்காப்பு பாணியில் விளையாடுகின்றனர். அவர்கள் இறங்கி வந்து ஆடாத காரணத்தால், அவர்களால் சுழல் பந்துவீச்சை திறம்பட சமாளிக்க இயலவில்லை'' என்று கூறினார்.

படத்தின் காப்புரிமை AFP
Image caption சுழல் பந்து வீச்சை இறங்கி வந்து அடிப்பதில் வல்லவரான சவுரவ் கங்குலி

வேகப்பந்து பயிற்சிக்கு என பிரத்யேக அகாடமி இருப்பது போல சுழல் பந்துவீச்சுக்கும் பிரத்யேக அகாடமி உருவாக்குவது சிறந்த யோசனை தான் என்றாலும், பேட்ஸ்மேன்கள் உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவதும், சுழல் பந்துவீச்சை திறன்பட சமாளிக்க தேவையான திறமைகளை வளர்த்துக் கொள்வதும் தான் நீண்ட கால பலன்களை தரும் என்று விஜய் லோக்பாலி மேலும் தெரிவித்தார்.

விராட் கோலி மீது `பாயும்' ஆஸ்திரேலிய ஊடகங்கள்

அனில் கும்ப்ளே, ஷேன் வார்ன் மற்றும் முத்தையா முரளிதரன் போன்ற உலகத்தரம் வாய்ந்த சுழல்பந்துவீச்சாளர்கள் விளையாடிய காலத்தில், இந்திய அணியின் விக்கெட் கீப்பராக இருந்த நயன் மோங்கியா, இது குறித்து பிபிசி தமிழிடம் கூறுகையில், ''இந்திய பேட்ஸ்மேன்கள் இந்த தொடரில் சிறப்பாக விளையாடினர். சுழல் பந்துவீச்சை சமாளிப்பதில் அவர்களுக்கு திறன் குறைவு என்று கூற முடியாது'' என்று தெரிவித்தார்.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption ரவீந்திர ஜடேஜா

''சிறப்பாக பங்களித்த ஆஸ்திரேலிய சுழல் பந்துவீச்சாளர்களை நாம் பாராட்டியாக வேண்டும். சுழல் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தை அவர்கள் சிறப்பாக பயன்படுத்திக் கொண்டனர்'' என்று நயன் மோங்கியா மேலும் கூறினார்.

''அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகிய இருவருமே இத்தொடரில் சிறப்பாக பந்துவீசினர். தாங்கள் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் ஒரு பந்துவீச்சாளரால் விக்கெட் எடுக்க இயலாது'' என்று மோங்கியா குறிப்பிட்டார்.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption தரம்சாலா போட்டியில் 4 விக்கெட்டுகள் எடுத்த அஸ்வின்

அனுபவம் இல்லாத ஆஸ்திரேலிய அணியை 2-1 என போராடித்தான் இந்தியா வெற்றி பெற முடிந்தது அணியின் பலவீனமா என்று கேட்டதற்கு, இரு அணிகளும் சிறப்பாக விளையாடினர். இறுதியில், மிகவும் சிறப்பாகவும், சாதுர்யமாகவும் விளையாடிய இந்திய அணி தொடரை வென்றது என்று மோங்கியா தெரிவித்தார்.

சுழல் பந்தை இந்திய பேட்ஸ்மேன்கள் ஏன் இறங்கி வந்து ஆடுவதில்லை?

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் இந்திய அணியின் பங்களிப்பு குறித்து கிரிக்கெட் ஆலோசகரும், விளையாட்டு கட்டுரையாளருமான் முகேஷ் சுப்பிரமணியன் கூறுகையில், ''உள்ளூர் ஆடுகளம் என்பதால் இந்தியா இன்னும் சிறப்பாக இத்தொடரில் விளையாடி இருக்கலாம். பல போட்டிகளில் ஆஸ்திரேலியா இந்தியாவுக்கு கடும் சவாலை அளித்தது'' என்று தெரிவித்தார்.

''இந்திய பேட்ஸ்மேன்கள் சுழல் பந்துவீச்சை நம்பிக்கையோடு சந்திப்பதில்லை. சுழல் பந்துவீச்சை இறங்கி விடும் ஆடும் போக்கு தற்போதுள்ள வீரர்களுக்கு இல்லாததற்கு காரணம் அவர்களின் நம்பிக்கையின்மைதான்'' என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

படத்தின் காப்புரிமை AP
Image caption பூனேவில் இந்தியாவை நிலைகுலைய செய்த ஸ்டீவ் ஓ கீஃப்

ஆஸ்திரேலிய தொடரை இந்திய அணி 2-1 என்று வென்ற போதிலும், இந்திய பேட்ஸ்மேன்கள் சுழல் பந்து வீச்சை இன்னமும் சிறப்பாக விளையாட வேண்டும் என்றும், உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவது இந்திய வீரர்களுக்கு சிறந்த பயிற்சியாக இருக்கும் என்பதும் விளையாட்டு விமர்சகர்களின் கருத்தாக உள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்