ஐபிஎல் கிரிக்கெட்: யாருக்கு லாபம்?

கிரிக்கெட் விளையாட்டில் உலக அளவில் அதிக ரசிகர்களால் மிகுந்த ஆர்வத்துடன் கவனிக்கப்படும் ஐபிஎல் எனப்படும் இந்தியன் பிரிமியர் லீக் - டி20 கிரிக்கெட்டின் 10-வது தொடர் ஏப்ரல் 5-ஆம் தேதி (புதன்கிழமை) ஹைதராபாத்தில் தொடங்கியுள்ளது.

படத்தின் காப்புரிமை AFP
Image caption ஐபிஎல் போட்டிக்கு ரசிகர்கள் ஆதரவு பெருமளவில் உள்ளது

56 லீக் ஆட்டங்கள், ஃபிளே ஆப் சுற்றில் 3 ஆட்டங்கள் மற்றும் இறுதிப் போட்டி என மொத்தம் 60 ஆட்டங்கள் 2017 ஐபிஎல் தொடரில் நடைபெறுகின்றன.

ஐபிஎல் ஏலத்தில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரரானார் இங்கிலாந்தின் ஸ்டோக்ஸ்

இந்த தொடரில், சன் ரைசர்ஸ் ஹைதராபாத், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, கொல்கத்தா நைட் ரைடர்ஸ், டெல்லி டேர்டேவில்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட், மும்பை இந்தியன்ஸ், குஜராத் லயன்ஸ் ஆகிய 8 அணிகள் விளையாடுகின்றன.

வாய்ப்பில்லாதவர்களுக்கு ஒரு வரம்

இந்தியாவுக்காக விளையாட வாய்ப்பு கிடைக்காத பல இளைஞர்களுக்கு, ஐபிஎல் ஒரு வரப்பிரசாதமாக கருதப்படுகிறது. மேலும், கிரிக்கெட் விளையாட்டை உலகெங்கும் பிரபலப்படுத்த ஐபிஎல் போன்ற தொடர்களால் மட்டுமே முடியும் என்று சில கிரிக்கெட் வல்லுனர்கள் கருதுகின்றனர். அதே வேளையில், நாளடைவில் ஐபிஎல் தொடர் , கிரிக்கெட் விளையாட்டின் மீதிருந்த விருப்பம் மற்றும் நாட்டுக்காக விளையாட வேண்டும் என்ற இளைஞர்களின் ஆர்வம் ஆகியவற்றை குறைக்கிறது என்பது போன்ற விமர்சனங்களும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர்கள் மீது வைக்கப்படுகின்றன.

படத்தின் காப்புரிமை BBC Sport
Image caption நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக விலைக்கு ஸ்டோக்ஸ் வாங்கப்பட்டார்

ஐபிஎல் தொடர் மீது கூறப்படும் நிறை, குறைகள் குறித்து பிபிசி தமிழிடம் பேசிய முன்னாள் கிரிக்கெட் வீரரும், கிரிக்கெட் வல்லுனருமான சக்தி கூறுகையில், ''ஆரம்பத்தில், 15 வயதுகுட்பட்ட மாணவர்கள் மற்றும் இளையோரின் நலனுக்காகவும், கிரிக்கெட் விளையாட்டை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லவும் ஐபிஎல் தொடர்கள் தொடங்கப்பட்டதாக நான் கருதினேன்'' என்று குறிப்பிட்டார்.

'ஐபிஎல்லில் விளையாடினால் பணத்தை அள்ளிச் செல்வார் பென் ஸ்டோக்ஸ்'

மேலும், அவர் கூறுகையில், ''ஆனால், தொடர்ந்து நடந்த முதல் 3 ஐபிஎல் தொடர்களில், சர்வதேச வீரர்கள், முன்னணி இந்திய வீரர்கள் மற்றும் ஓய்வுபெற்ற வீரர்கள் ஆகியோருக்கு பெரும்பாலும் வாய்ப்புகள் தரப்பட்டன. உலக அளவில் சிறந்த கிரிக்கெட் வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாடினால்தான், இத்தொடரை மக்கள் மத்தியில் பிரபலமாக்க முடியும் என்று காரணங்கள் சொல்லப்பட்டது '' என்று நினைவு கூர்ந்தார்.

டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களால் சாதிக்க முடியுமா?

''பின்னர் வந்த ஐபிஎல் தொடர்கள் சில சிறந்த டெஸ்ட் வீரர்களை உருவாக்கியது. டெஸ்ட் வீரர்களாலும் ஐபிஎல் தொடரில் சாதிக்க முடியும் என்பதற்கு முரளி விஜய் போன்ற வீரர்களே சிறந்த உதாரணமாகும்'' என்று சக்தி குறிப்பிட்டார்.

''ஆரம்பத்தில், ஐபிஎல் தொடரில் சில குறைகள் காணப்பட்டாலும், அதில் உள்ள நிறைகளையும் புறந்தள்ள முடியாது'' என்று சக்தி மேலும் குறிப்பிட்டார்.

அதே நேரத்தில், ஆஷிஷ் நெஹ்ரா, தாம்பே, பிராட் ஹாட்ஜ் போன்ற பல மூத்த வீரர்கள், டி20 போட்டிகளில் மட்டுமே விளையாடி கிரிக்கெட் களத்தில் நீடித்து நிலைப்பதற்கு ஐபிஎல் தொடர்களே காரணம் என்று சக்தி தெரிவித்தார்.

கேப்டனான முதல் டெஸ்டில் ரஹானேவுக்கு வெற்றி: தொடரை வென்றது இந்தியா

''ஆரம்பத்தில், ரஞ்சி கோப்பை, துலீப் கோப்பை, விஜய் ஹசாரே கோப்பை போட்டிகளில் சிறப்பாக விளையாடினால் மட்டுமே இளைய வீரர்களால் இந்திய அணியில் இடம்பெற முடியும். தற்போது, நாடு முழுவதிலும் பிரபலமாக உள்ள ஐபிஎல் தொடர் , பலரின் வருத்தங்கள் மற்றும் ஏக்கங்களை களைவதாக அமைகிறது'' என்று சக்தி கூறினார்.

இந்திய அணிக்கு கிடைத்த கொடைகள்

முரளி விஜய், ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகிய வீரர்கள் ஐபிஎல் மூலம் இந்திய அணிக்கு கிடைத்த கொடைகள் என குறிப்பிடலாம் என்று சக்தி குறிப்பிட்டார்.

படத்தின் காப்புரிமை Empics
Image caption முரளி விஜய்

பல வெளிநாட்டு வீரர்களும், ஐபிஎல் தொடர்களில் விளையாடி, இந்திய ஆடுகளத்தின் தன்மை மற்றும் இந்திய பந்துவீச்சாளர்களை எளிதில் கணிக்க முடிகிறது. அதனால், அண்மைக் காலமாக இந்திய மண்ணில் நடக்கும் போட்டிகளில் வெளிநாட்டு வீரர்களால் நன்கு விளையாட முடிகிறது. இது எதிர்காலத்தில் இந்தியாவுக்கு பாதகமாக அமையும் என்று பல கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ரசிகர்களின் கருத்தாக உள்ளது.

கெளரவ டாக்டர் பட்டத்தை நிராகரித்த ராகுல் டிராவிட்

உண்மையான கிரிக்கெட் போட்டியா?

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள், டெஸ்ட் கிரிக்கெட்டை மரணமடைய செய்து விடும் என்று கூறப்படுவது குறித்து பிபிசி தமிழிடம் உரையாடிய கிரிக்கெட் வீரர் மற்றும் பயிற்சியாளர் ரகுராமன் கூறுகையில், ''20-20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் ரசிகர்களுக்கு ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு பிறகு அலுப்பை ஏற்படுத்தி விடும்'' என்று கூறினார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption ஐபிஎல் அணி உரிமையாளர்களான முகேஷ், நீதா அம்பானி மற்றும் பாலிவுட் நடிகர் ஷாருக்கான்

''ஊறுகாய் சாதம் என்றாவது ஒருநாள் சாப்பிட முடியும், தினமும், அதனை உண்ண முடியாது. அது போல தான் ஐபிஎல் தொடரும். டெஸ்ட் கிரிக்கெட் மட்டுமே உண்மையான, நிலைத்து நிற்கும் கிரிக்கெட் போட்டியாகும்'' என்று ரகுராமன் மேலும் குறிப்பிட்டார்.

இந்திய ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர்: இந்திய வெற்றி திடமானதா?

யார் இந்த அண்டர்டேக்கர்?

''இந்திய வீரர்களின் பீல்டிங் முன்னேற்றம் அடைந்ததற்கு ஐபிஎல் தொடர்கள் ஒரு குறிப்பிட்ட காரணம் என சொல்லலாம்'' என்று ஐபிஎல் தொடரால் விளைந்த நன்மைகள் குறித்து குறிப்பிட்ட ரகுராமன், ''ரோகித் ஷர்மா ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடினாலும், டெஸ்ட் போட்டிகளில், அவரால் சிறப்பாக விளையாட முடியவில்லை. மேலும், அடிக்கடி நடக்கும் ஐபிஎல் தொடர்களால் வெளிநாட்டு அணிகள் இந்திய மண்ணில் டெஸ்ட் போட்டிகளை வெல்லவும், சமன் செய்யவும் முடிகிறது'' என்று கூறினார்.

விளையாட்டா? கேளிக்கையா?

கிரிக்கெட் விளையாட்டை கேளிக்கையாக பார்க்க கூடாது, இரண்டையும் ஒன்றாக கலந்தால் பாதகமான முடிவுகளே ஏற்படும் என்று ரகுராமன் எச்சரித்தார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption ஐபிஎல் மற்றும் இந்திய அணியில் சிறப்பாக பங்களிக்கும் ரவிச்சந்திரன் அஸ்வின்

ஆதாரங்கள் இல்லையென்றாலும், ஐபிஎல் தொடர்களில் சூதாட்டம் நடக்க வாய்ப்பு இருக்கிறது என்றும் ரகுராமன் மேலும் தெரிவித்தார்.

படத்தின் காப்புரிமை PTI
Image caption ஐபிஎல் போட்டிகள் முற்றாக பொழுதுபோக்கு அம்சமாகவே பார்க்கப்படுகிறது.

முரளி விஜய், ரவீந்திர ஜடேஜா, யூசுப் பதான், ஃ பாப் டு பிளஸ்ஸிஸ் மற்றும் மிட்சல் ஜான்சன் போன்ற வீரர்கள் ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக விளையாடி அதன் பின்னர் தேசிய அணிகளில் சிறப்பாக பங்களித்த வீரர்கள் என்று ரகுராமன் கூறினார்.

பெங்களூரு டெஸ்ட்: அஸ்வின் சுழலில் சரிந்தது ஆஸ்திரேலியா

இந்திய அணியில் இடம்பெற முடியாத பல இளைய வீரர்களுக்கு ஐபிஎல் தொடர் போட்டிகள் வாய்ப்புக்களை அளிக்கிறது, ரசிகர்களுக்கு சிறந்த பொழுதுபோக்காகவும் அமைகிறது என்பது கிரிக்கெட் ஆர்வலர்கள் மற்றும் நிபுணர்களின் கருத்தாக உள்ளது.

விராட் கோலி மீது `பாயும்' ஆஸ்திரேலிய ஊடகங்கள்

அதே வேளையில், இங்கிலாந்து போன்ற பல நாடுகளில் உள்ள கால்பந்து கிளப்களில் சிறப்பாக விளையாடும் வீரர்கள் தங்கள் நாட்டுக்காக அர்ப்பணிப்புடன் விளையாடுவதில்லை என்ற விமர்சனம் அவர்கள் மீது வைக்கப்படுகிறது. அதே போன்ற விமர்சனங்களை இந்திய வீரர்கள் மற்றும் ஐபிஎல் தொடரில் விளையாடும் வெளிநாட்டு வீரர்கள் மீது வைக்கப்படும் சாத்தியம் எதிர்காலத்தில் ஏற்படலாம் என்று கிரிக்கெட் நிபுணர்கள் ஐயம் வெளிப்படுத்தியுள்ளனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்