நான்கே பந்துகளில் 92 ரன்களை அள்ளிக்கொடுத்த `வள்ளல்"

ஒரு கிரிக்கெட் ஓவரில் 20 ரன்கள் (ஓட்டங்கள்) எடுப்பதே எளிதான காரியம் இல்லை. ஆனால், நான்கே பந்துகளில் 92 ரன்கள் குவிக்கப்பட்டு ஆட்டம் முடிவடைந்தது என்பதை நம்ப முடிகிறதா?

நான்கே பந்துகளில் 92 ரன்கள்: வாரி வழங்கிய பந்துவீச்சாளர்

பட மூலாதாரம், FACEBOOK.COM/LALMATIACRICKETCLUB

ஆனால், நான்கு பந்துகளில் 92 ரன்கள் குவிக்கப்பட்டது பேட்ஸ்மேனின் பங்களிப்பால் நிகழ்ந்தது அல்ல; பந்துவீச்சாளர் விட்டுக் கொடுத்ததே இந்த ரன் மழைக்குக் காரணம்.

வங்கதேசத்தில் நடைபெற்று வரும் டாக்கா இரண்டாம் பிரிவு கிரிக்கெட் லீக் போட்டி ஒன்றில்தான் இந்த அதிசயம் நிகழ்ந்தது. சிட்டி கிளப் கிரிக்கெட் மைதானத்தில் எக்ஸ்சியோம் மற்றும் லால்மாட்டியா கிளப்களுக்கு இடையே நடந்த போட்டி பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

லால்மாட்டியா அணியின் சார்பாக முதலில் பந்துவீசிய சுஜன் மஹ்மூத், வீசிய ஓவரில் நான்கே பந்துகளில் 92 ரன்கள் குவிக்கப்பட்டன. இதில் 13 வைட் பால்கள் (wide balls), மூன்று நோ-பால்கள் (no-balls) வீசப்பட்டன. வைட் பால்கள் மூலம் 65 ரன்கள் குவிக்கப்பட்டன. மூன்று நோ பால்களில் 15 ரன்கள் எடுக்கப்பட்டன.

மேலும் பேட்ஸ்மேன் 12 ரன்களை குவிக்க, 92 ரன்களை நான்கே பந்துகளில் எடுத்த எக்ஸ்சியோம் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முன்னதாக, 50 ஓவர்கள் கொண்ட இந்த போட்டியில் முதலில் பேட் செய்த லால்மாட்டியா அணி 14 ஓவர்களில் 88 ரன்களை மட்டுமே பெற்றது.

ஆனால், களத்தில் இருந்த நடுவர்கள் நியாயமான முடிவுகளை எடுக்கவில்லை என்று லால்மாட்டியா அணி புகார் தெரிவித்துள்ளது.

பட மூலாதாரம், इमेज कॉपीरइटGETTY IMAGES

இது குறித்து லால்மாட்டியா அணியின் பொது செயலாளர் அட்னான் ரஹ்மான் டிப்போன் கூறுகையில், ''ஆட்டத்தின் துவக்கத்தில் டாஸ் போடப்பட்டதில் இருந்தே தவறுகள் நடந்தன. எங்கள் அணியின் கேப்டன் டாஸ் போட பயன்படுத்தப்பட்ட நாணயத்தை பார்க்க அனுமதிக்கப்படவில்லை'' என்று தெரிவித்தார்.

மேலும், அவர் கூறுகையில், ''ஆட்ட நடுவர்களின் முடிவுகள் எங்களுக்கு எதிராகவே அமைந்தது. 17, 18 அல்லது 19 வயதாகும் மிக இளம் வயது வீரர்களை கொண்ட எங்கள் அணியினரால் இந்த அநீதியை தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதனால், நான்கே பந்துகளில் அவர்கள் 92 ரன்களை கொடுத்து விட்டனர்'' என்று குறிப்பிட்டார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்