'இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் அடுத்த இலக்கு உலகக்கோப்பை'

இந்தியா, தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் அயர்லாந்து கலந்து கொண்ட மகளிர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி வாகை சூடியது.

படத்தின் காப்புரிமை DEEPTI SHARMA
Image caption 'இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் அடுத்த இலக்கு உலகக்கோப்பை'

தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற போட்டித்தொடரில், 19 வயதான தீப்தி சர்மா அயர்லாந்துக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் சிறப்பாக மட்டை வீசினார்.

முதல் விக்கெட்டாக களம் இறங்கிய தீப்தி ஷர்மாவும், பூனம் ராவத்தும் புதிய சாதனையை நிகழ்த்தினார்கள். இருவரும் இணைந்து 320 ரன்களை குவித்தனர். தீப்தி 188 ரன்களும், பூனம் 109 ரன்களும் எடுத்தனர்.

மூன்று மாதங்களுக்கு முன்பு, ஐசிசி பெண்கள் உலகக் கோப்பைப் போட்டிக்காக இங்கிலாந்தில் நடைபெற்ற தகுதிச்சுற்றில் இந்திய அணி தகுதிபெற்றது.

அதிக விக்கெட் எடுத்த வீராங்கனை

அதைத் தொடர்ந்து சில வாரங்களில் மகளிர் ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட் எடுத்த வீராங்கனை என்ற சிறப்[பை ஜூலன் கோஸ்வாமி பெற்றார். அதன்பிறகு, ஒருநாள் போட்டியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய தீப்தியும், பூனமும் புதிய சாதனையை நிகழ்த்தினார்கள்.

என்னைப் போன்ற இளைஞிகள் தற்போது கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டுவருகிறோம். இந்திய கிரிக்கெட் வீராங்கனைகள் தொடர்ந்து சாதனை செய்வது அணியின் மனோபலத்தை அதிகரித்திருப்பதாக கூறும் தீப்தி, இந்த உத்வேகத்தை உலகக்கோப்பையாக மாற்றுவோம் என்கிறார்.

படத்தின் காப்புரிமை POONAM RAUT
Image caption சாதிக்கும் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியினர்

அதேபோல், ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அயர்லாந்துக்கு எதிராக சாதனை நிகழ்த்திய பூனம் ராவத் தனது முதல் சதத்தை அடித்தார். அந்தப் போட்டியில் 109 ரன்கள் எடுத்த பூனம் காயத்தினால் வெளியேறினார் என்பதை விட, பிற வீராங்கனைகளுக்கு வாய்ப்பு கிடைக்கவேண்டும் என்னும் எண்ணத்தில் பெவிலியனுக்கு திரும்பினார் என்றே சொல்லலாம்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக ஞாயிறன்று நடைபெற்ற போட்டியில் பூனம் 70 ரன்கள் குவித்தார்.

தீப்தி மற்றும் தன்னைப் போன்ற இளைஞிகளின் வருகையால் மிதாலி ராஜ் போன்ற மூத்த வீராங்கனைகள் மீதான அழுத்தம் குறைந்திருப்பதாக பூனம் கருதுகிறார்.

"மிதாலி ராஜ் சிறந்த ஆட்டக்காரர், பல ஆண்டுகளாக இந்திய மகளிர் அணியை நன்றாக வழி நடத்திச் செல்லும் அவர், பிறரின் எதிர்பார்ப்புகளுக்கு ஈடுகொடுக்க வேண்டிய அழுத்தம் இருந்தது. ஆனால் இப்போது, பல திறமைமிக்க பெண்கள் அணியில் இடம்பெற்றுள்ளதால், அவர் மீதான அழுத்தம் குறைந்துள்ளது" என்று பூனம் கூறுகிறார்.

"தற்போது பிசிசிஐ எங்கள் மீது கவனம் செலுத்துகிறது. தரவரிசை முறைமையில் (கிரேடிங் சிஸ்டம்) எங்களையும் இணைத்துக் கொண்டுள்ளது. அதனால் எங்களுக்கு மேலும் ஊக்கம் கிடைத்துள்ளது. எதிர்வரும் உலகக்கோப்பைப் போட்டியில் கோப்பையை வெல்வதுதான் எங்கள் தற்போதைய லட்சியம்" என்கிறார் பூனம்.

கிரிக்கெட்டில் பல ஆண்டுகளாக ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளின் ஆதிக்கமே மேலோங்கி இருந்தது. இந்திய ஆண்கள் அணி அந்த நிலைமையை மாற்றுவதில் வெற்றிபெற்றது.

இனி இந்திய பெண்கள் அணி, ஆடவர் அணியைப் போல் தனக்கென கிரிக்கெட்டில் ஒரு சிறந்த இடத்தை தக்கவைத்துக் கொள்ளுமா? என்ற கேள்விக்கு கண்டிப்பாக முடியும் என்கிறார் பூனம்.

படத்தின் காப்புரிமை POONAM RAUR

"ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் முன்னணியில் இருந்தாலும், இந்திய அணி மிகவும் பின்தங்கிய நிலையில் இல்லை, இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் மாற்றம் வந்துள்ளது. திட்டமிட்டு செயல்பட்டால் முதலிடத்தை பிடிப்பது சாத்தியமே. திட்டமிடுதல் இல்லையெனில், பெரிய போட்டிகளில் வெற்றி பெறமுடியாது."

பூனமும், தீப்தியும், இந்தியாவின் சிறந்த ஃபீல்டர்களில் முக்கிய இடம் பிடித்துள்ளனர். டைவிங் அடித்தோ, சறுக்கியோ பந்தை பிடிக்க பெண் கிரிக்கெட்டர்கள் தயங்கிய காலம் மலையேறிவிட்டது என்கிறார் தீப்தி.

"டைவ் கற்றுக் கொள்ளவேண்டும், அல்லது ஸ்லைட் கற்றுக் கொள்ளவேண்டும் என்று பெண் கிரிக்கெட்டர்கள் தானாகவே முன் வந்து கேட்கும் காலம் இது. இப்போது பெண்கள் பயப்படுவதில்லை, முழு முயற்சியுடன் களத்தில் இறங்கி போராடத் தயாராக இருக்கிறார்கள்" என்கிறார் தீப்தி.

படத்தின் காப்புரிமை DEEPTI SHARMA
Image caption தீப்தி

"மிதாலி ராஜ், வேதா கிருஷ்ணமூர்த்தி, தீப்தி என பலர் நன்றாக டைவ் செய்வார்கள்… கிட்டத்தட்ட எல்லா வீராங்கனைகளுமே ஃபீல்டிங்கில் சிறப்பானவர்கள் தான். அணியில் இளம் வீராங்கனைகள் நிறைந்திருப்பதால் நல்ல ஊக்கமான அணியாக இருக்கிறோம்" என்கிறார் பூனம்.

போட்டிக்காக களத்தில் இறங்கிவிட்டால், ரன் எடுப்பதை தடுக்கவேண்டும், விக்கெட்டை வீழ்த்தவேண்டும் என்பதில் மட்டுமே குறியாக இருப்போம். போட்டியில் வெற்றி பெறவேண்டும் என்ற முனைப்பில் காயமோ, அடியோ, வலியோ எதுவும் எங்களுக்கு தெரியாது என்கிறார். அணியின் பயிற்சியாளர் துஷார் அரோடே, மிகவும் சிறப்பாக ஆனால் கடினமான பயிற்சிகளை அளிப்பதாக தீப்தி கூறுகிறார்.

படத்தின் காப்புரிமை POONAM RAUT

இந்திய வீராங்கனைகள் கிரிக்கெட்டில் மட்டும் கெட்டியல்ல, விளையாட்டிலும் சுட்டிகள் தான்.

மற்றவர்களை போல் பேசுவது, மிமிக்ரி செய்வது என ஒரே ஆட்டமும்-பாட்டமுமாக ஜாலியாக இருக்கிறது எங்கள் அணி என்று சொல்லும் தீப்தி, தனக்கு மிமிக்ரி வராது என்றும் சொல்கிறார்.

திரைப்படம் பார்க்கும் ஆவல் இல்லை என்று சொல்லும் தீப்திக்கு இசை கேட்பதும், பேட்மிண்டன் விளையாட்டும் விருப்பமான பொழுதுபோக்கு.

இந்தியா, தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் அயர்லாந்து கலந்து கொண்ட மகளிர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் வெற்றி, அதன் வெற்றிப்பாதையின் தொடக்கமே, பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி கிரிக்கெட்டில் முதலிடத்தை பெற வேண்டிய சவால் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியினரின் முன் உள்ளது. சவாலை சமாளிக்கும் உறுதி இளம் வீராங்கனைகளிடம் இருக்கிறது.

தொடர்பான செய்திகள்:

வாழ்நாள் சாதனையாளர் விருது பெறும் சாந்தா ரங்கசாமி புதிய யோசனை

பரபரப்பான 1 ரன் வெற்றி: மும்பை அணிக்கு ஐபிஎல் கோப்பை சாத்தியமானது எப்படி?

இதையும் படிக்கலாம் :

3 முதல்வர்கள், பிளவுபட்ட கட்சி, எண்ணற்ற போராட்டங்கள்: ஓராண்டில் அதிமுக சாதித்தது என்ன ?

புற்றுநோயை எதிர்த்து போராடிய 'ஜேம்ஸ் பாண்ட்' கதாநாயகன் மரணம்

புற்றுநோயை எதிர்த்து போராடிய 'ஜேம்ஸ் பாண்ட்' கதாநாயகன் மரணம்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்