ஆட்டிசம் குறைபாடுள்ள சிறுவன் 'பின்பால்' விளையாட்டு சாம்பியனான கதை

  • 1 ஜூன் 2017

பின்பால் விளையாட்டு சாம்பியனான ராபர்ட் காக்னோ, ஆட்டிசம் எனப்படும் கற்றல் குறைபாடு, தன்னை பின்பால் விளையாட்டில் சிறந்த வீரராக உருவெடுக்க உதவியதாக குறிப்பிடுகிறார்.

Image caption ராபர்ட் காக்னோ

ஆட்டிசம் குறைபாடுடன் வாழ மற்றும் எதிர்த்து போராட பின்பால் விளையாட்டுதான் ராபர்ட் காக்னோவுக்கு பெரிதும் உதவியுள்ளது.

கண்ணாடியால் மூடப்பட்ட பின்பால் இயந்திரத்தில் உள்ள பந்துகளை கொண்டு வீரர்கள் அதிக புள்ளிகள் பெறும் ஆட்டம் தான் பின்பால் விளையாட்டாகும்.

விளையாட்டு திறனால் மக்களை ஈர்த்த ராபர்ட்

தனது குடியிருப்பு வளாகத்தில் ராபர்ட் காக்னோ பின்பால் விளையாடும் தருணங்களில், அவரது விளையாட்டை பார்க்க ஒரு கூட்டம் கூடிவிடும்.

கனடாவாசியான ராபர்ட் அந்நாட்டின் மேற்கு பிராந்தியமான பிரிட்டிஷ் கொலம்பியா அருகே வாழ்ந்து வருகிறார். பின்பால் விளையாட்டில் பயன்படுத்தப்படும் உலோக பந்தை ஒரு மணி நேரம் அளவுக்கு தாக்கு பிடிக்குமாறு தனது கட்டுப்பாட்டில் அவரால் ஆட்டத்தை வைத்திருக்க முடியும்.

பின்பால் விளையாட்டில் எந்திர சாதனைகளை ராபர்ட் காக்னோ தொடர்ந்து முறியடிப்பது வழக்கம்.

''நான் வேடிக்கைக்காக விளையாடினால் ஆபத்து இல்லாத ஷாட்களை மட்டுமே திரும்ப திரும்ப அடித்திருப்பேன். இத்தனை நாட்கள் இந்த விளையாட்டை விளையாடியதால் எந்த ஷாட்களால் அதிக புள்ளிகள் பெறமுடியும் என்பதை நன்கு அறிந்து கொண்டேன்'' என்கிறார் 27 வயதாகும் ராபர்ட்.

பின்பால் விளையாட்டு இயந்திரத்தின் மேலே கிட்டதட்ட கிடைமட்டமாக படுத்தவாறு, ஆடுகளத்தில் பந்தை உயர அடிக்கும் முன்னர், பின்பால் இயந்திரத்தில் உள்ள பிணைக்கப்பட்ட கை போன்ற பகுதியின் ஊடாக பந்தை லாவகமாக ராபர்ட் தட்டி விடுகிறார்.

Image caption பின்பால் விளையாட்டு களத்தில் ராபர்ட்

ஓவ்வொரு முறையும் அவர் பந்தை அடிக்கும் போது எலக்டிரானிக் கருவிகளில் ஒலி எழுகிறது. விளக்குகள் எரிவதால் உண்டான வெளிச்சம் அவர் அணிந்திருக்கும் கண்ணாடியில் பிரதிபலிக்கிறது. ஆட்டிசம் குறைபாடுள்ள ராப்ரட், இந்த ஒலியும், ஒளியும்தான் தன்னை இந்த விளையாட்டை நோக்கி ஈர்த்தது என்று கூறினார்.

ராபர்ட்டின் ஆரம்ப நாட்கள்

ராபர் பின்பால் விளையாட ஆரம்பித்த நாளை அவரது தந்தை மௌரிஜியோ நினைவுகூர்கிறார்.

''நான் ராபர்ட்டை ஹாம்பர்கர் (மாட்டு இறைச்சி பர்கர் ) விற்கும் கடைக்கும் அழைத்துச் சென்றேன். அங்கே ஒரு மூலையில் ஒரு பின்பால் விளையாட்டு இயந்திரம் இருந்தது'' என்று தெரிவித்த மௌரிஜியோ மேலும் கூறுகையில், ''சாப்பாட்டைவிட ராபர்ட்டுக்கு பின்பால் விளையாடுவதில்தான் அப்போது ஆர்வம் இருந்தது'' என்று கூறினார்.

'' ராபர்ட் விளையாடும்போது, நானும், எனது மனைவி கேத்தியும் சற்று நேரம் உட்கார முடியும், ஓய்வாக இளைப்பாற முடியும் என்று புரிந்து கொண்டோம்'' என்று அவர் மேலும் தெரிவித்தார்.

ஆரம்பத்தில், தனது மகன் மற்ற குழந்தைகளைவிட மாறுபட்டவனாக இருந்ததை கேத்தி புரிந்து கொண்டார். பின்பால் விளையாட்டில் இருந்த பல அடையாளங்கள், வளையங்கள் போன்றவையால் ராபர்ட் ஈர்க்கப்பட்டது தெரியவந்துள்ளது.

ஆட்டிசம் குறைப்பாடு

''ராபர்ட்டுக்கு மூன்று வயதான போதுதான் அவனுக்கு ஆட்டிசம் குறைப்பாடு இருந்தது முதலில் தெரியவந்தது'' என்று கேத்தி குறிப்பிட்டார்.

''அக்காலகட்டத்தில் இக்குறைபாடு குறித்து பெரிய அளவில் விவரங்கள் தெரியாது. நூலகத்தில் இருந்த புத்தகங்களில் இது குறித்து இருந்த குறிப்புகள் கடும் சொற்களை போதித்தன. அதில் இருந்த எந்த பொருளையும் நான் எடுத்துக்கொள்ளவில்லை'' என்று கேத்தி மேலும் தெரிவித்தார்.

மற்றவர்களை விட ராபர்ட்டுக்கு பேசுவதற்கு நீண்ட காலம் தேவைப்பட்டது. மேலும், அவரது வார்த்தைகள் ஒழுங்கில்லாமல் இருந்தது. தன்னால் மற்றவர்கள் கூறுவதை புரிந்து கொள்ள முடியவில்லையே என ராபர்ட் விரக்தியடைந்துள்ளார்.

படத்தின் காப்புரிமை KATHY GAGNO
Image caption சிறுவயது ராபர்ட்

குழப்பமான ஒரு உலகத்தில் இருந்து ராபர்ட்டுக்கு பின்பால் விளையாட்டுதான் ஒரு சரணாலயமாக இருந்துள்ளது.

வேர்ல்வின்ட் எனப்படும் பின்பால் விளையாட்டு இயந்திரத்தை ராபர்ட்டுக்கு அவரது பெற்றோர் வாங்கித் தந்துள்ளனர். தனக்கு 10 வயதான போது, இந்த இயந்திரத்தில் ஓவ்வொரு நாளும் பல மணிநேரங்கள் செலவழித்து தனது விளையாட்டு திறமையை ராபர்ட் வளர்த்துக் கொண்டார்.

வான்கூவர் நகருக்கு வெளியே பர்னபி பகுதியில் ராபர்ட் குடும்பத்தார் இருக்கும் வீட்டில் உள்ள வாகன கொட்டகையில் பல் டஜன் பின்பால் விளையாட்டு இயந்திரங்கள் உள்ளன.

பின்பால் விளையாட்டு ஒன்றே ராபர்ட்டின் குறிக்கோள்

ராபர்ட்டின் விளையாட்டு மேம்பட ஆரம்பித்த பிறகு, அவரது தன்னம்பிக்கையும் அதிகரித்துள்ளது. பிறகு, பந்துகள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் விளையாட்டுக் கூடங்கள் போன்ற வெளிப்புற இடங்களிலும் ராபர்ட் விளையாட ஆரம்பித்துள்ளார்.

இந்த விளையாட்டு பயிற்சிகள் புதிய நண்பர்களை ராபர்ட்டுக்கு அறிமுகம் செய்தன.

தனக்கு 19 வயதாகும்போது பின்பால் போட்டிகளில் ராபர்ட் பங்கேற்க ஆரம்பித்தார். தற்போது கனடாவின் முன்னணி பின்பால் வீரராகவும், உலகின் தலைசிறந்த 10 பின்பால் வீரர்களில் ஒருவராகவும் ராபர்ட் திகழ்கிறார்.

Image caption உலகின் தலைசிறந்த பின்பால் வீரர்களில் ஒருவரான ராபர்ட்

ஆட்டிசம் குறைபாடு தனது விளையாட்டுத் திறனை மெருகேற்றியதாக ராபர்ட் கருதுகிறார்.

''நீண்ட நேரம் ஒரு விஷயம் குறித்து என்னால் கவனம் செலுத்த முடியும் என்பதையும், நான் கண்ட காட்சிகளை என்னால் நினைவில் கொள்ள முடிகிறது என்பதையும் நான் அறிந்தேன். அதனால், ஒரு இயந்திரத்தில் ஒருமுறை விளையாடினாலே ஆட்டத்தின் போக்கை என்னால் நினைவு கொள்ள முடிந்தது'' என்று ராபர்ட் தெரிவித்தார்.

ஆனால், ராபர்ட்டுக்கு இருந்த ஆட்டிசம் குறைபாடால் சில தீமைகளும் விளைந்தன. விளையாட்டின் போது சகவீரர்களை, மற்றவர்களை எப்போது நட்பாக அணைப்பது போன்ற சமூக குறிப்புகளை அறிந்து கொள்வது தொடர்பாக ராபர்ட் அவதியுற்றுள்ளார்.

''எப்போது பேச வேண்டும், எப்போது பேசக்கூடாது மற்றும் நான் சந்திக்கும் நபர்களை எவ்வாறு அழைக்க வேண்டும் போன்றவற்றை புரிந்துகொள்வதில் நான் மிகவும் சிரமப்பட்டேன்'' என்று ராபர்ட் நினைவுகூர்ந்தார்.

ராபர்ட்டின் தந்தை மௌரிஜியோ அவரது பயிற்சியாளராக உள்ளார். ராபர்ட் நிதானம் இழக்காமல் அமைதியாக இருக்கவும், மோசமான ஆட்டங்களை மறந்து அடுத்த கட்டத்துக்கு செல்லவும் ராபர்ட்டின் தந்தை அவருக்கு உதவுகிறார்.

ஐரோப்பா, கனடா மற்றும் அமெரிக்காவில் பின்பால் போட்டிகள் நடக்கும். ஆனால், தொழில்ரீதியான மற்றும் அமெச்சூர் பின்பால் சங்கம் (பிஏபிஏ) பென்சில்வேனியாவில் நடத்தும் உலக பின்பால் சாம்பியன்ஷிப் போட்டிகள்தான் மிகவும் பெருமைமிக்க போட்டிகளாகும். இதில் வெல்பவர் உலக சாம்பியனாக அறிவிக்கப்படுவார்.

கடந்த ஆண்டு இந்த தொடரில் நுழைந்த ராபர்ட் ஆரம்ப சுற்றுகளை எளிதாக வென்றார்.

இறுதி ஆட்டத்தில் அவர் முன்னணி வீரரான ஜாக் ஷார்ப்பை எதிர்கொண்டார். ஃபிளாஷ் கார்டன் என்ற தாங்கள் விளையாடப் போகும் விளையாட்டு இயந்திரத்தை ஷார்ப் தேர்ந்தெடுத்தார்.

நம்பமுடியாத வகையில் தனது இரண்டாவது பந்திலேயே மிகப் பெரிய அளவில் ராபர்ட் புள்ளிகள் பெற்றார். அவர் பெற்ற புள்ளிகள் தோற்கடிக்க முடியாத அளவு இருந்தது. சில நிமிடங்களில் அவர் வெற்றிக் கோப்பையை கையில் ஏந்திய போது, தனது கண்களில் நீர் வழிய அவரது தந்தை ராபர்ட்டை பார்த்துக் கொண்டிருந்தார்.

Image caption ராபர்ட்டின் தந்தை மௌரிஜியோ அவரது பயிற்சியாளராக உள்ளார்.

''பிஏபிஏ கோப்பையை வென்றது எனக்கு பெருமையாகவும், உற்சாகமாகவும், மகிழ்ச்சியளிப்பதக்கவும் இருந்தது'' என்று கூறிய ராபர்ட், ''என்னை பற்றிய மற்றவர்களின் கணிப்பு தவறானது என்று நிரூபிப்பதை விரும்புகிறேன்'' என்று தெரிவித்தார்.

ராபர்ட்டால் பெருமையடைந்த அவரது பெற்றவர் தொடர்ந்து அவறது செயல்களை ஊக்குவிக்கின்றனர்.

''ராபர்ட் பார்ப்பதற்கு நன்றாக இருக்கும் இளைஞன். டேட்டிங் வலைத்தளங்களில் உறுப்பினராக அவனை நான் ஊக்குவித்தேன்'' என்று தெரிவித்த அவரது ராபர்ட்டின் தந்தை, ''எந்த தடையும் ராபர்ட்டுக்கு இருப்பதையோ அல்லது அவரது வாழ்வில் கட்டுப்படுத்தப்படுவதாக உணர்வதையோ நான் விரும்பவில்லை'' என்று குறிப்பிட்டார்.

இதையும் படிக்கலாம்:

மாட்டிறைச்சித் தடை: `திராவிட நாடு` கோரும் மலையாளிகள் !

மோதி அரசின் மூன்றாண்டு - எங்கே அந்த நல்ல நாட்கள்?

மாட்டிறைச்சிக்கு தடை போட மத்திய அரசுக்கு அதிகாரம் இல்லை?

துயரங்களை ஓவியமாக வெளிப்படுத்திய காஷ்மீர் குழந்தைகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்