எட்ஜ்பாஸ்டனில் இந்திய வீரர்கள் 'சரவெடி': பாகிஸ்தானுக்கு 289 வெற்றி இலக்கு

பர்மிங்ஹாம் எட்ஜ்பாஸ்டன் விளையாட்டு மைதானத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இடையே நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் டிராஃபி கிரிக்கெட் போட்டியில், முதலில் பேட் செய்த இந்திய அணி, 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 319 ரன்கள் எடுத்துள்ளது.

எட்ஜ்பாஸ்டனில் இந்திய வீரர்கள் 'சரவெடி': பாகிஸ்தானுக்கு 320 வெற்றி இலக்கு

பட மூலாதாரம், Getty Images

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி இந்திய அணியை முதலில் பேட்டிங் செய்ய பணிக்க, இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மா மற்றும் ஷிகர் தவான் ஆகிய இருவரும் ஆரம்பத்தில் நிதானமாக விளையாடினர். 10 ஓவர்களின் நிறைவில் விக்கெட் இழப்பின்றி 46 ரன்களை மட்டுமே இந்திய அணி எடுத்திருந்தது.

இந்திய தொடக்க ஆட்டக்காரரர்களை பிரிக்க பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் எடுத்த முயற்சிகள் வெற்றி பெறவில்லை.

65 பந்துகளில் 68 ரன்கள் எடுத்த ஷிகர் தவான், ஷதாப் கானின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பின்னர் ரோகித்சர்மாவுடன் அணித்தலைவர் விராட் கோலி ஜோடி சேர்ந்தார்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

அரைச்சதம் எடுத்த தவான்

இதனிடையே, 119 பந்துகளில் 91 ரன்கள் எடுத்த ரோகித் சர்மா எதிர்ப்பாராத விதமாக 'ரன் அவுட்'டாக, யுவராஜ் சிங் மற்றும் கோலி ஜோடி பாகிஸ்தானின் பந்துவீச்சை நம்பிக்கையுடன் எதிர்கொண்டது.

39 ஓவர்கள் நிறைவடைந்த நிலையில் எடுக்கப்பட்ட பவர் ப்ளேயில், இந்திய வீரர்கள் கோலி மற்றும் யுவராஜ்சிங் ஆகிய இருவரும் பாகிஸ்தானின் பந்துவீச்சை மைதானத்தின் அனைத்து திசைகளுக்கும் விரட்டியடித்தனர்.

இதனால் மளமளவென்று இந்திய அணியின் ரன் எண்ணிக்கை உயர்ந்தது. கோலி மற்றும் யுவராஜ்சிங் ஆகிய இருவரும் அடுத்தடுத்து தங்களது அரைசதத்தை எட்டினர்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

குறைந்த பந்துகளில் அரைச்சதம் எடுத்த யுவராஜ்சிங்

ஒரு சிக்ஸர் மற்றும் 8 பவுண்டரிகளின் உதவியோடு, 32 பந்துகளில் 53 ரன்களை எடுத்த யுவராஜ்சிங், ஹாசன் அலி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

பின்னர் களமிறங்கிய ஹர்திக் பாண்ட்யா இறுதி ஓவரில் அடுத்தடுத்து மூன்று சிக்ஸர்கள் அடித்து இந்திய அணி வலுவான ஸ்கோர் எடுக்க உதவினார்.

81 ரன்களுடன் விராட் கோலி இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருக்க, இந்திய அணி 3 விக்கெட்டுக்களை மட்டும் இழந்து நிர்ணயிக்கப்பட்ட 48 ஓவர்களில் 319 ரன்கள் எடுத்துள்ளது.

மழையின் காரணமாக ஏற்பட்ட தாமதத்தால் பாகிஸ்தான் அணிக்கு 41 ஓவர்களில் 289 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்கலாம்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்