மட்டையாளர்களுக்கு ஈடுகொடுத்த பந்துவீச்சாளர்கள்: இந்தியா அமோக வெற்றி

சாம்பியன்ஸ் டிராஃபி கிரிக்கெட் தொடரில், பாகிஸ்தானுக்கு எதிராக பர்மிங்ஹாம் எட்ஜ்பாஸ்டன் விளையாட்டு மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்த போட்டியில் 124 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.

பாகிஸ்தானை 124 ரன்களில் வீழ்த்தி அமோக வெற்றி பெற்ற இந்தியா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

பாகிஸ்தானை 124 ரன்களில் வீழ்த்தி அமோக வெற்றி பெற்ற இந்தியா

48 ஓவர்களில் 324 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், தனது ஆட்டத்தை துவக்கிய பாகிஸ்தான், நான்காவது ஓவரை ஆடிக்கொண்டிருந்தபோது மீண்டும் மழை குறுக்கிட்டது. இதனால் பாகிஸ்தான் அணிக்கு 41 ஓவர்களில் 289 ரன்கள் என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

பாகிஸ்தான் இன்னிங்ஸின் 9-ஆவது ஓவரில் அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் அஹ்மத் ஷேஷாட் 12 ரன்கள் எடுத்த நிலையில், இந்திய பந்துவீச்சாளர் புவனேஸ்வர் குமாரின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

அரைச்சதம் எடுத்த அஸார் அலி

அடுத்து களமிறங்கிய பாபர் அஜாம் ஒற்றை இழக்க ரன்களில் ஆட்டமிழக்க, அனுபவம் மிகுந்த ஆட்டக்காரரான முகமத் ஹஃபீஸ், தொடக்க ஆட்டக்காரர் அஸார் அலியுடன் ஜோடி சேர்ந்தார். நன்றாக ஆடிக் கொண்டிருந்த அஸார் அலி, அரைசதம் எடுத்த நிலையில், அடுத்த பந்திலேயே பாண்ட்யா கேட்ச் பிடிக்க ஆட்டமிழந்தார்.

பட மூலாதாரம், Getty Images

தொடர்ந்த வந்த அனுபவம் மிகுந்த ஷோயிப் மாலிக்கும் நீண்ட நேரம் களத்தில் நீடிக்கவில்லை. பின்னர் களமிறங்கிய இமாத் வாஸிம் ரன் எடுக்காமல் ஹர்திக் பாண்ட்யா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

அடுத்தடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் வீரர்கள் யாரும் சோபிக்காத காரணத்தால் 33.4 ஓவர்களில் 164 ரன்களை மட்டும் எடுத்து 9 விக்கெட்டுகளை பாகிஸ்தான் இழந்தது. அந்த அணியின் வஹாப் ரியாஸ் களமிறங்காத காரணத்தால் பாகிஸ்தானை 124 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்றது.

இந்திய வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுக்களையும், ஹர்திக் பாண்ட்யா மற்றும் ரவீந்தர ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும் எடுத்தனர். யுவராஜ்சிங் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

முன்னதாக, முதலில் பேட்டிங் செய்ய செய்த இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மா மற்றும் ஷிகர் தவான் ஆகிய இருவரும் ஆரம்பத்தில் நிதானமாக விளையாடினர். 10 ஓவர்களின் நிறைவில் விக்கெட் இழப்பின்றி 46 ரன்களை மட்டுமே இந்திய அணி எடுத்திருந்தது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

ரோகித் சர்மா

இந்திய தொடக்க ஆட்டக்காரரர்களை பிரிக்க பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் எடுத்த முயற்சிகள் வெற்றி பெறவில்லை. ஷிகர் தவான் 68 ரன்களையும், ரோகித் சர்மா 91 ரன்களையும் எடுத்தனர்.

யுவராஜ்சிங், கோலி அதிரடி

39 ஓவர்கள் நிறைவடைந்த நிலையில் எடுக்கப்பட்ட பவர் ப்ளேயில், இந்திய வீரர்கள் கோலி மற்றும் யுவராஜ்சிங் ஆகிய இருவரும் பாகிஸ்தானின் பந்துவீச்சை மைதானத்தின் அனைத்து திசைகளுக்கும் விரட்டியடித்தனர்.

இதனால் மளமளவென்று இந்திய அணியின் ரன் எண்ணிக்கை உயர்ந்தது. கோலி மற்றும் யுவராஜ்சிங் ஆகிய இருவரும் அடுத்தடுத்து தங்களது அரைசதத்தை எட்டினர்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

குறைந்த பந்துகளில் அரைச்சதம் எடுத்த யுவராஜ்சிங்

32 பந்துகளில் 53 ரன்களை யுவராஜ்சிங் எடுக்க, 81 ரன்களுடன் விராட் கோலி இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இறுதியில், 3 விக்கெட்டுக்களை மட்டும் இழந்து நிர்ணயிக்கப்பட்ட 48 ஓவர்களில் 319 ரன்களை இந்திய அணி எடுத்தது.

இதையும் படிக்கலாம்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்