சாம்பியன்ஸ் டிராஃபி கிரிக்கெட்: இலங்கையிடம் இந்தியா தோற்றது எதனால்?

  • 9 ஜூன் 2017

சாம்பியன்ஸ் டிராஃபி கிரிக்கெட் தொடரில், இன்று வியாழக்கிழமையன்று லண்டன் ஓவல் மைதானத்தில் இந்தியா மற்றும் இலங்கை இடையே நடந்த போட்டியில் 7 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் இலங்கை வென்றது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption சாம்பியன்ஸ் டிராஃபி கிரிக்கெட்: இந்தியா தோற்றது ஏன்?

பாகிஸ்தானுக்கு எதிராக மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கடந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி, வியாழக்கிழமையன்று இலங்கைக்கு எதிராக நடத்த போட்டியில் 321 ரன்களை குவித்தும் தோல்வியை சந்தித்தது ஏன் என்று இந்த அலசல் விவரிக்கிறது.

  • 321 ரன்கள் போதுமான இலக்குதானா?

பொதுவாக ஓவல் மைதானத்தில் அதிக ரன்கள் குவிக்கப்படுவது வழக்கம். இந்நிலையில், இந்திய அணி 321 ரன்கள் எடுத்தும் அந்த இலக்கு வெற்றி இலக்காக அமையவில்லை.

ஒரு கட்டத்தில் இந்திய அணி 350 ரன்கள் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கோலி , யுவராஜ்சிங் மற்றும் பாண்ட்யா போன்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால், இந்திய அணியால் எதிர்பார்த்த அளவு ரன்கள் குவிக்க முடியவில்லை.

350 ரன்களுக்கு மேல் இந்தியா குவித்திருக்க வேண்டும் என்று இந்திய அணித்தலைவர் கோலியும் கருத்து வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption '321 ரன்கள் போதாது; 350 ரன்கள் எடுத்திருக்க வேண்டும்'
  • இலங்கை வீரர்களின் தன்னம்பிக்கை

322 ரன்கள் என்ற இமாலய இலக்கை துரத்திய போதிலும், இலங்கை மட்டைவீச்சாளர்கள் இந்திய பந்துவீச்சாளர்களை தன்னம்பிக்கையுடன் எதிர்கொண்டனர். முதல் விக்கெட்டை 5-ஆவது ஓவரில் பறிகொடுத்தாலும், மெண்டிஸ் மற்றும் குணதிலக ஆகிய இரு இலங்கை வீரர்களும் நன்கு அடித்து விளையாடினர்.

அதிரடியாக விளையாடி மெண்டிஸ் 89 ரன்களையும், குணதிலக 76 ரன்களையும் குவித்தனர். இவர்களை பிரிக்க இந்திய பந்துவீச்சாளர்கள் மேற்கொண்ட முயற்சிகள் எதுவும் பலிக்கவில்லை.

பின்னர் களமிறங்கிய பெரேரா, குணரத்ன மற்றும் இலங்கை கேப்டன் மாத்யூஸ் ஆகியோர் பொறுப்பாக விளையாடி இலங்கையின் வெற்றியை உறுதி செய்தனர்.

படத்தின் காப்புரிமை PA
Image caption மெண்டிஸின் அதிரடி ஆட்டத்தால் வென்றது இலங்கை
  • சோபிக்காத இந்திய அணியின் பந்துவீச்சு

பாகிஸ்தானுக்கு எதிராக சிறப்பாக மற்றும் நேர்த்தியாக பந்துவீசிய இந்திய பந்துவீச்சாளர்கள் இந்தப் போட்டியில். நேர்த்தியான பந்துவீச்சை வெளிப்படுத்தவில்லை. ஏராளமான ரன்களை இந்திய பந்துவீச்சாளர்கள் விட்டுக் கொடுத்தனர்.

அதே போல், இந்திய பீல்டர்கள் பல கேட்ச்களை பிடிக்க தவறியதால், அதுவும் இந்தியாவின் தோல்விக்கு வழிவகுத்தது.

படத்தின் காப்புரிமை Reuters
  • அஸ்வின் இல்லாத சுழல் பந்துவீச்சு பாதிப்பா?

பாகிஸ்தான் மற்றும் இலங்கைக்கு எதிராக நடந்த இரு போட்டிகளிலும் முன்னணி இந்திய சுழல் பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் விளையாடாத சூழலில், பிரதான சுழல்பந்துவீச்சாளர் ரவீந்திர ஜடேஜாவின் பந்துவீச்சு இந்த போட்டியில் எடுபடவில்லை. ஜடேஜா தான் வீசிய 6 ஓவர்களில் 52 ரன்களை விட்டுக்கொடுத்தார். இது இந்திய அணியின் தோல்விக்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்தது.

அதே போல், அனுபவம் மிகுந்து இடதுகை பந்துவீச்சாளரான யுவராஜ் சிங் ஒரு ஓவர் கூட பந்துவீசாதது இந்திய அணிக்கு கைகொடுக்கவில்லை.

இதனால், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிர்த்த அடுத்த போட்டியில் அஸ்வின் அணியில் இடம்பெறுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

  • பலனளிக்காத வியூகங்கள்

இலங்கை மட்டை வீச்சாளர்கள் மளமளவென்று ரன்கள் குவித்துக் கொண்டிருந்த வேளையில், அவர்களை கட்டுப்படுத்த இந்திய பந்துவீச்சாளர்கள் எடுத்த முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை.

அதே போல் இந்திய அணித்தலைவர் கோலி, அணிக்கு தேவையான விக்கெட்டை எடுக்க ஓவ்வொரு கட்டத்திலும் பாண்ட்யா, உமேஷ் யாதவ், ஜடேஜா என பந்துவீச்சாளர்களை மாற்றியும், அவர்களால் விக்கெட் எதுவும் எடுக்க முடியவில்லை. மாறாக, அவர்கள் ரன்களை வாரி வழங்கி இலங்கை அணியின் வெற்றியை எளிதாக்கினார்.

படத்தின் காப்புரிமை AFP/GETTY
Image caption பலனளிக்காத வியூகங்கள்

மேலும், கேதர் ஜாதவ் மற்றும் விராட் கோலி போன்ற பகுதி நேர பந்துவீச்சாளர்களாலும் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முடியவில்லை.

இலங்கை இப்போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் பி பிரிவில் அரையிறுதி வாய்ப்பு பெறும் அணி எவை என்பது இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது. இந்தியா தென் ஆப்பிரிக்காவையும், இலங்கை பாகிஸ்தானையும் கடைசி லீக் ஆட்டங்களில் எதிர்கொள்ளும். அப்போட்டிகளில் வெல்லும் இரு அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.

பிற செய்திகள்:

இலங்கை மட்டைவீச்சாளர்களின் அதிரடியில் வீழ்ந்தது இந்தியா

இந்தியா - பாக்., கிரிக்கெட்: இந்திய வெற்றிக்கு காரணமான 5 முக்கிய திருப்புமுனைகள்

பாகிஸ்தானை 124 ரன்களில் வீழ்த்தி இந்தியா அமோக வெற்றி எட்ஜ்பாஸ்டனில் இந்திய வீரர்கள் 'சரவெடி': பாகிஸ்தானுக்கு 289 வெற்றி இலக்கு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்