சாம்பியன்ஸ் டிராஃபி : தென் ஆப்ரிக்காவை வீழ்த்தி அரையிறுதிக்கு இந்தியா தகுதி

  • 11 ஜூன் 2017
படத்தின் காப்புரிமை BCCI

சாம்பியன்ஸ் டிராஃபி கிரிக்கெட் தொடரில், ஞாயிற்றுக்கிழமையன்று லண்டன் ஓவல் மைதானத்தில் இந்தியா மற்றும் தென் ஆப்ரிக்கா அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் 8 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்தியா இத்தொடரின் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.

192 ரன்கள் எடுத்தல் வெற்றி என்ற எளிய இலக்குடன் களத்தில் இறங்கிய இந்திய அணி தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மாவை விரைவாக இழந்தது. இலங்கைக்கு எதிராக நடந்த கடந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய சதமடித்த ஷிகர் தவான் இந்த போட்டியிலும் சிறப்பாக விளையாடினார்.

மீண்டும் தவான் அற்புத ஆட்டம்

ஆரம்பம் முதலே சிறப்பாக விளையாடிய தவான், ரோகித் சர்மா ஆட்டமிழந்தவுடன் களத்தில் இறங்கிய அணித்தலைவர் விராட் கோலியுடன் ஜோடி சேர்ந்து இந்திய அணி வெற்றி பெறுவதையும், அரையிறுதி போட்டிக்கு தகுதி பெறுவதையும் உறுதி செய்தார்.

83 பந்துகளில் 12 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சருடன் ஷிகர் தவான் 78 ரன்கள் எடுத்தார்.

தவான் ஆட்டமிழந்தாலும், மறுமுனையில் விளையாடி வந்த இந்திய அணித்தலைவர் விராட் கோலி சிறப்பாக விளையாடி இறுதிவரை ஆட்டமிழக்காமல் 76 ரன்கள் எடுத்தார்.

38 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை மட்டும் இழந்து 193 ரன்களை பெற்ற இந்திய அணி, 8 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், இத்தொடரின் அரையிறுதியில் விளையாட இந்தியா தகுதி பெற்றுள்ளது.

படத்தின் காப்புரிமை AFP
Image caption தென் ஆப்ரிக்காவை வீழ்த்தி அரையிறுதிக்கு இந்தியா தகுதி

முதல் விக்கெட்டுக்கு 76 ரன்கள்

முன்னதாக, இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி, தென் ஆப்ரிக்க அணி முதலில் பேட்டிங் செய்ய பணித்தது. தொடக்கத்தில் தென் ஆப்ரிக்க மட்டைவீச்சாளர்கள் மிகச் சிறப்பாக விளையாடினர். முதல் விக்கெட்டுக்கு 76 ரன்கள் ஜோடி சேர்ந்த நிலையில், அனுபவம் மிகுந்த தொடக்க ஆட்டக்காரரான ஆம்லாவின் விக்கெட்டை இந்திய சுழல் பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் வீழ்த்தினார்.

மறுமுனையில் விளையாடிய குயின்டன் டி காக் அரைச்சதமடித்த நிலையில், ஜடேஜாவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். தென் ஆப்ரிக்க கேப்டன் ஏ பி டிவில்லியர்ஸ் எதிர்பாராதவிதமாக ரன் அவுட்டாக, பின்னர் களமிறங்கிய தென் ஆப்ரிக்க வீரர்களால் எதிர்பார்த்த அளவு ரன்கள் குவிக்க முடியவில்லை.

படத்தின் காப்புரிமை BCCI
Image caption சிறப்பான பீல்டிங்கால் இந்திய அணி வெற்றி

நிச்சயமாக வென்றே ஆக வேண்டும் என்ற நிலையில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக களமிறங்கிய இந்திய அணியினர், இந்த போட்டியில் மிகச் சிறப்பாக பீல்டிங் செய்தனர். மூன்று தென் ஆப்ரிக்க வீரர்களை இந்திய அணி ரன் அவுட் செய்ததால் தென் ஆப்ரிக்க அணி அனைத்து விக்கெட்டுக்களையம் இழந்து 191 ரன்களை மட்டுமே பெற்றது.

இந்திய தரப்பில், புவனேஸ்வர் குமார் மற்றும் பூம்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஹர்திக் பாண்ட்யா, ஜடேஜா மற்றும் அஸ்வின் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

தொடர்பான செய்திகள்:

பாகிஸ்தானை 124 ரன்களில் வீழ்த்தி இந்தியா அமோக வெற்றி

இந்தியா - பாக்., கிரிக்கெட்: இந்திய வெற்றிக்கு காரணமான 5 முக்கிய திருப்புமுனைகள்

சாம்பியன்ஸ் டிராஃபி கிரிக்கெட்: இலங்கையிடம் இந்தியா தோற்றது எதனால்?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்