சாம்பியன்ஸ் கோப்பை உச்சகட்ட மோதலில் இந்தியா - பாகிஸ்தான்

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் வியாழக்கிழமை நடந்த இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில், வங்கதேச அணியை 9 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வென்று, இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ள இந்திய அணி, ஞாயிற்றுக்கிழமை நடக்கவுள்ள இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் அணியை சந்திக்கவுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption அதிரடி சதமடித்த ரோகித் சர்மா

இந்திய அணித் தலைவர் விராத் கோலி மற்றும் துவக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால், இந்தியா எளிதாக வெற்றி இலக்கை எட்டியது.

265 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், களத்தில் இறங்கிய இந்திய அணி, தொடக்கம் முதலே நன்கு அடித்தாடியது.

'ஆரம்பமே அதிரடிதான்'

இந்திய இன்னிங்ஸின் இரண்டாவது ஓவரில் ஷிகர் தவான் 2 பவுண்டரிகளையும், அடுத்த ஓவரில் ரோகித்சர்மா 3 பவுண்டரிகளையும் விளாசி, வங்கதேச பந்துவீச்சாளர்களுக்கு எதிராக விரைவாக ரன் குவிக்கும் தங்கள் எண்ணத்தை வெளிப்படுத்தினர்.

இந்திய தொடக்க ஆட்டகக்காரரர்களை பிரிக்க பல பந்துவீச்சாளர்களை மாற்றியும் வங்கதேசத்தால் இந்திய அணியின் ரன் குவிப்பையும் கட்டுப்படுத்த முடியவில்லை; தொடக்க ஜோடியையும் பிரிக்க முடியவில்லை.

தவான் ஆட்டமிழப்பு: சதமடித்த ரோகித்சர்மா

அணியின் என்ணிக்கை 83-ஆக இருந்தபோது, 46 ரன்கள் எடுத்திருந்த ஷிகர் தவான் முர்தஸாவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

மறுமுனையில் சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த ரோகித் சர்மா விரைவாக அரைச்சதம் எடுத்தார். அணித்தலைவர் கோலியுடன் இணைந்து விளையாடிய ரோகித் சர்மா, 111 பந்துகளில் ஒரு சிக்ஸர் மற்றும் 12 பவுண்டர்களுடன் சதமடித்தார்.

படத்தின் காப்புரிமை Rex Features

அதிரடியாக விளையாடிய விராத் கோலி 42 பந்துகளில் அரைச்சதம் எடுத்தார். இறுதியில் 40. 1 ஓவர்களில் 1 விக்கெட்மட்டுமே இழந்து 265 ரன்கள் எடுத்து இந்தியா மகத்தான வெற்றி பெற்றது. ரோகித் சர்மா 123 ரன்களுடனும், விராத் கோலி 96 ரன்களுடனும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்

264 ரன்கள் எடுத்த வங்கதேசம்

முன்னதாக, முதலில் பேட் செய்த வங்கதேசம் 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 264 ரன்கள் எடுத்துள்ளது.

வங்கதேச அணியில், அதிகபட்சமாக, தமிம் இக்பால் 70 ரன்களையும், முஷ்ஃபிகர் ரஹீம் 61 ரன்களையும் எடுத்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption சிறப்பாக பந்துவீசிய புவனேஷ்வர் குமார்

இந்திய அணியின் வேகப் பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார், பூம்ரா மற்றும் கேதார் ஜாதவ்ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.

அரையிறுதி போட்டியில் வென்றுள்ள இந்தியா, வரும் ஞாயிற்றுக்கிழமை ஓவல் மைதானத்தில் நடைபெறும் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.

இந்தப் போட்டி, இப்போதே கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்பான செய்திகள்:

இங்கிலாந்துக்கு அதிர்ச்சி; இறுதிப் போட்டியில் பாகிஸ்தான்

சாம்பியன்ஸ் டிராஃபி கிரிக்கெட்: 'வாழ்வா-சாவா' போட்டியில் எப்படி சாதித்தது இந்தியா?

பாகிஸ்தானை 124 ரன்களில் வீழ்த்தி இந்தியா அமோக வெற்றி

இந்தியா - பாக்., கிரிக்கெட்: இந்திய வெற்றிக்கு காரணமான 5 முக்கிய திருப்புமுனைகள்

சாம்பியன்ஸ் டிராஃபி கிரிக்கெட்: இலங்கையிடம் இந்தியா தோற்றது எதனால்?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்