இந்தியா - பாகிஸ்தான் இன்று இறுதி மோதல்: கோப்பை வெல்ல யாருக்கு வாய்ப்பு அதிகம்?

படத்தின் காப்புரிமை AFP
Image caption யார் கைக்கு வரப்போகிறது?

கால்பந்து விளையாட்டில் வலிமையான இரு அணிகளுக்கு இடையே நடக்கும் போட்டிகளாகவும், ரசிகர்கள் விரும்பிப் பார்க்கும் போட்டிகளாகவும் பிரேசில்-ர்ஜென்டினா , இங்கிலாந்து - பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி-இத்தாலி அணிகளுக்கு இடையே நடக்கும் போட்டிகள்கருதப்படும்.

இதே போல், கிரிக்கெட்டில் இந்தியா -பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டிகள், ரசிகர்களை இருக்கை நுனியில் உட்கார வைக்கும் அளவு பரபரப்பை உருவாக்குவதுடன், இரு நாட்டு மக்களின் கவனத்தை அதிக அளவில் ஈர்க்கும் சிறப்புமிக்கவையாகும்.

லண்டன் ஓவல் மைதானத்தில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே ஞாயிற்றுக்கிழமை நடக்கும் சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப்போட்டியை, கிட்டத்தட்ட 10 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் உலகெங்கும் தொலைக்காட்சியில் காண்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

படத்தின் காப்புரிமை AFP

மிகவும் பரபரப்பான போட்டியாகவும், அதிக எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள போட்டியாகவும் கருதப்படும் இந்தியா-பாகிஸ்தான் போட்டி குறித்து முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், 1999-ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடியவருமான சடகோபன் ரமேஷ், பிபிசி தமிழிடம் தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.

'பரபரப்பு தொடங்குவது ரசிர்களிடம்தான்'

''இந்தியா-பாகிஸ்தான் போட்டிகளில் அதிக அளவு பரபரப்பும், எதிர்பார்ப்பும் ஏற்படுவது இயற்கைதான். ஒவ்வொரு முறையும், ஆரம்பத்தில் ரசிகர்களிடம் இருக்கும் பரபரப்பு போட்டி துவங்குவதற்கு முன் வீரர்களையும் தொற்றிவிடும்'' என்று சடகோபன் ரமேஷ் நினைவுகூர்ந்தார்.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளின் சாதகங்கள் மற்றும் வாய்ப்புகள் குறித்து ரமேஷ் கூறுகையில், ''இந்தியா லீக் போட்டிகளில் சிறப்பாக விளையாடியது. ஆனால், அதே சமயம் கடுமையாக போராடி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ள பாகிஸ்தான் அணியையும் எளிதாக புறந்தள்ளி விடமுடியாது'' என்று குறிப்பிட்டார்.

சோயீப் மாலிக் போன்ற அனுபவம் மிகுந்த பாகிஸ்தான் வீரர், இதுவரை பெரிய அளவில் பங்களிப்பு செய்யவில்லையென்றால், இறுதிப்போட்டியில் இவரது பங்களிப்பு நன்றாக அமையலாம் என்று தெரிவித்த ரமேஷ், ''இந்தியாவுக்கு பக்கபலம் அதன் பேட்டிங். அதே சமயம் பாகிஸ்தானுக்கு பக்கபலம் அதன் பவுலிங். இந்த இரண்டில் எது மிகச் சிறப்பாக அமைகிறதோ அந்த அணியே வெல்லும்'' என்று குறிப்பிட்டார்.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடந்த முந்தைய போட்டிகள் குறித்த சில முக்கிய தகவல்களை தற்போது காண்போம்.

படத்தின் காப்புரிமை Getty Images

இந்தியா -பாகிஸ்தான் இதுவரை:-

  • இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே இதுவரை 128 ஒருநாள் சர்வதேச போட்டிகள் நடந்துள்ளன. அதில், இந்தியா 52 முறையும், பாகிஸ்தான் 72 முறையும் வென்றுள்ளன. 4 போட்டிகளில் எந்த முடிவும் ஏற்படவில்லை.
  • 2017-ஆம் ஆண்டின் சாம்பியன்ஸ் கோப்பை இறுதியாட்டத்துக்கு தகுதி பெற்றதன் மூலம், இதுவரை சாம்பியன்ஸ் கோப்பையில் நான்கு இறுதியாட்டங்களில் விளையாடிய ஒரே அணி என்ற பெருமையை இந்தியா பெறும்.
  • சாம்பியன்ஸ் கோப்பையில் பாகிஸ்தான் விளையாடும் முதல் இறுதிப்போட்டி, ஞாயிறுக்கிழமையன்று இந்தியாவுக்கு எதிராக நடக்கும் போட்டியாகும்.
  • சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலால் நடத்தப்பட்ட பெரிய போட்டி தொடர்களான உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் கோப்பை மற்றும் 20-20 உலகக் கோப்பை போன்றவற்றின் நாக்-அவுட் போட்டிகளான காலிறுதி, அரையிறுதி, மற்றும் இறுதி போட்டிகளில் இந்தியா -பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டிகள் அனைத்திலும் இந்தியாவே வென்றுள்ளது.
  • 2007-ஆம் ஆண்டு நடந்த 20-20 உலகக் கோப்பை இறுதியாட்டம்தான் இவ்விரு அணிகளும் மோதிய கடைசி ஐசிசி தொடர் இறுதிபோட்டியாகும். பரபரப்பான இந்த போட்டியில் இந்தியா வென்றது.

'ஆட்ட பரபரப்பை நிதானத்துடன் கையாள்பவரே வெல்வார்'

இந்தியா -பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடக்கும் சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப்போட்டியில், எந்த அணியால் பரபரப்பு மற்றும் ஆட்ட நெருக்குதலை திறம்பட சமாளிக்க முடிகிறதோ, அந்த அணியே போட்டியை வெல்ல முடியும் என்று மூத்த பத்திரிக்கையாளரான விஜய் லோக்பாலி பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

பாகிஸ்தான் அணியை எளிதில் கணித்துவிடமுடியாது. குறிப்பாக பாகிஸ்தான் அணியின் வேகப் பந்துவீச்சாளர்கள் கடந்த காலங்களில் எதிர்பாராத அளவு இந்தியாவுக்கு அதிர்ச்சி அளித்துள்ளனர். அதனை எப்போதும் இந்தியா நினைவில் கொள்ள வேண்டும் என்று விஜய் லோக்பாலி மேலும் தெரிவித்தார்.

''இந்தியாவின் மட்டைவீச்சாளர்கள் நல்ல முறையில் விளையாடி வருகின்றனர். அதே போல், பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சாளர்களும் கடுமையாக போராடக்கூடியவர்கள்தான். இந்த இரு தரப்புக்கும் இடையே நடக்கும் ஆக்ரோஷமான போட்டி, ரசிகர்களுக்கு விருந்தாக அமையும்'' என்று விஜய் லோக்பாலி குறிப்பிட்டார்.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர் இந்திய மட்டைவீச்சாளர்களுக்கு அச்சுறுத்தலா?

'பாகிஸ்தான் அணியை குறைத்து மதிப்பிட முடியாது'

இதனிடையே, லண்டன் ஓவல் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடக்கவுள்ள இந்தியா -பாகிஸ்தான் இறுதிப்போட்டி குறித்து இந்திய அணித்தலைவர் விராத் கோலி கூறுகையில், சமூகவலைதளங்களில் செலவழித்து வந்த நேரத்தை குறைத்துக் கொண்டதால்தான், தற்போது இந்திய அணிக்கான தனது பங்களிப்பு நன்றாக உள்ளது என்று தெரிவித்தார்.

மேலும் விராத் கோலி கூறுகையில், ''மற்றவர்களிடம் இருந்து வரும் அதிகப்படியான ஆலோசனைகள் மற்றும் விமர்சனங்களை கேட்டுக் கொண்டிருந்தால், விளையாட்டு வீரனின் கவனம் சிதறிவிடும். அணிக்கு தேவையான பங்களிப்பை மேற்கொள்வது குறித்தே, விளையாட்டு வீரரின் கவனம் இருக்க வேண்டும்'' என்று குறிப்பிட்டார்.

மேலும், நடப்பு சாம்பியன்ஸ் கோப்பை லீக் போட்டியில், பாகிஸ்தான் அணியை இந்தியா 124 ரன்களில் வென்றதை வைத்து, அந்த அணியை குறைத்து மதிப்பிட முடியாது என்று கோலி தெரிவித்தார்.

படத்தின் காப்புரிமை Reuters

தொடர்பான செய்திகள்:

இந்திய வெற்றிப் பயணத்தின் 5 முக்கிய அம்சங்கள்

இங்கிலாந்துக்கு அதிர்ச்சி; இறுதிப் போட்டியில் பாகிஸ்தான்

சாம்பியன்ஸ் டிராஃபி கிரிக்கெட்: 'வாழ்வா-சாவா' போட்டியில் எப்படி சாதித்தது இந்தியா?

பாகிஸ்தானை 124 ரன்களில் வீழ்த்தி இந்தியா அமோக வெற்றி

இந்தியா - பாக்., கிரிக்கெட்: இந்திய வெற்றிக்கு காரணமான 5 முக்கிய திருப்புமுனைகள்

இதையும் படிக்கலாம்:

வாடகையாக செக்ஸ் மட்டும் போதும்!

பெண்களின் மார்பைத் தொடுவதற்காக தந்திர வித்தைக்காரராக காட்டிக்கொண்டவர்

இரான் பெண்கள் புதன்கிழமை தலையில் வெள்ளைத்துணி அணிவது ஏன்?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்