ஆண் ஆட்டக்காரர்களுடன் மோதினால் செரினா திணறுவார்: சர்ச்சையைக் கிளப்புகிறார் மெக்கன்ரோ

டென்னிஸ் போட்டிகளில் ஆண்களுக்கான பிரிவில் போட்டியிட்டால், உலக தரவரிசை பட்டியலில் 700-வது இடத்தை பிடிக்கக் கூட செரீனா திணறுவார் என முன்னாள் டென்னிஸ் வீரர் ஜான் மெக்கன்ரோ தெரிவித்துள்ள கருத்திற்கு செரினா வில்லியம்ஸ் பதிலடி கொடுத்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption செரீனா

ஆடவருக்கான உலக டென்னிஸ் தர வரிசைப் பட்டியலில் 701-வது இடத்தில் இருக்கும் வீரரான டிமிட்ரி டர்சுனொவ், செரினாவை தன்னால் தோற்கடிக்க முடியும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

`அவர் ஆண்களுக்கான பிரிவில் விளையாடினால், தரவரிசையில் 700-வது இடத்துக்குத் தள்ளப்படுவார் .`என டென்னிஸ் போட்டிகளில் தற்போது முதலிடம் வகிக்கும் வீராங்கனையும், தற்போதைய தொழில் முறை டென்னிஸ் போட்டி சகாப்தத்தில் 23 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை பெற்றவருமான செரினா வில்லியம்ஸ் குறித்து, அமெரிக்காவின் என்.பி.ஆர் வானொலி நிலையத்திற்கு அளித்த பேட்டியில் ஏழு முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற முன்னாள் டென்னிஸ் வீரரான ஜான் மெக்கன்ரோ கூறியுள்ளார்.

`இதற்கு செரினா ஒரு பிரமிக்கத்தக்க வீராங்கனை என நான் நினைக்கவில்லை என்பதாக அர்த்தமில்லை. எதுவுமே சாத்தியம்தான். சில தருணங்களில் ஒரு பெண் டென்னிஸ் வீராங்கனை, மற்ற எவரையும் விட சிறப்பானவராக இருக்கலாம்.`எனக் கூறி தனது கருத்துக்கு சில நிபந்தனைகளை சேர்த்துள்ளார்.

ஆனால் மெக்கன்ரோ மேலும் கூறுகையில், ` ஒரு வேளை செரினா ஆடவருக்கான டென்னிஸ் போட்டியில் கலந்து கொண்டால், அது முற்றிலும் வித்தியாசமான ஒரு கதையாக இருக்கும். இது போன்ற ஒன்றை இதுவரை நான் எந்த விளையாட்டிலும் பார்த்ததில்லை. டென்னிசிலும் பார்த்ததில்லை.` என்றார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption ஜான் மெக்கென்ரோ

மெக்கன்ரோவின் இந்த கருத்துக்கு பின்னர் டிவிட்டர் வாயிலாக பதிலளித்துள்ள வில்லியம்ஸ், ``மதிப்பிற்குரிய ஜான், உங்களை வணங்குகிறேன் ;மதிக்கிறேன். ஆனால் அடிப்படை உண்மை இல்லாத உங்கள் கருத்துக்களில் தயவு செய்து என்னை இழுக்காதீர்கள்.` என தெரிவித்துள்ளார்.

''அந்த தரவரிசை பட்டியலில் (ஆடவர்களுக்கான தரவரிசை பட்டியல்) இருக்கும் யாருடனும் இது வரை நான் விளையாடியதில்லை, எனக்கு அதற்கான நேரமும் இல்லை. நான் தற்போது கர்ப்பிணியாக இருப்பதால், என்னையும் என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையையும் மதியுங்கள். இந்த நாள் சிறந்த நாளாக அமையட்டும்.''

''அவர்தான் கர்ப்பிணியாக உள்ளார், நான் இல்லை''

34 வயதான டர்சுனோவ் இதுவரை அதிகபட்சமாக ஆடவர் டென்னிஸ் தரவரிசையில் பட்டியலில், ஒருமுறை 20-வது இடம் பிடித்திருக்கிறார்.

மகளிருக்கான டென்னிஸ் விளையாட்டை மெக்கன்ரோ தாழ்த்திப் பேசவில்லை என நினைப்பதாகவும்,பெண்களை விட ஆண்கள் வலுவானவர்கள் என்ற பொதுவான உண்மையை அவர் கூறியுள்ளதாகவும் ரஷ்ய டென்னிஸ் வீரரான டர்சுனோவ், பிபிசி உலக சேவையின் விளையாட்டுத்துறை பிரிவிடம் தெரிவித்துள்ளார்.

`என்னால் செரினாவை வீழ்த்த முடியும் என நம்புகிறேன்.`என அவர் கூறியுள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption பிரெஞ்சு ஓபனில் சகோதரி வீனஸின் ஆட்டத்தை ரசிக்கும் செரீனா

``யாரால் வேகமாக ஓட முடியும், வேகமான பெண்ணா அல்லது வேகமான ஆணா? என்பதைப் போல இந்த விவாதமும் இருக்கலாம். டென்னிஸ் விளையாட்டு அதிக உடல் வலு தேவைப்படும் விளையாட்டாக மாறி வருகிறது. எனவே ஒரு பெண், ஆணை வீழ்த்துவது மிகக்கடினமான ஒன்றாக இருக்கும்`` என்றார் அவர் .

இது கருப்பு, வெள்ளை என்று எளிதில் வேறுபடுத்திச் சொல்லக்கூடிய விஷயம் அல்ல . கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டிய பல காரணிகள் இருக்கின்றன. உடல் ரீதியாக, என் வாழ்க்கையில் நான் சிறந்த வடிவத்தை கொண்டிருக்காமல் இருக்கலாம். ஆனால் ஒட்டுமொத்தமாக, என் தரவரிசை கூறுவதை காட்டிலும், நான் மிகச்சிறப்பாகத்தான் இருக்கிறேன். செரினாதான் கர்ப்பமாக இருக்கிறார். நான் இல்லை.` என டர்சுனோவ் கூறியுள்ளார்.

`ஜான் கூறியது முட்டாள்தனமானது என யாரும் கூறியதாக நான் இதுவரை கேட்கவில்லை. தன்னுடைய திறமை என்ன என்பதை அவர் அறிவார். செரினா ஒரு நிகரில்லாத வீராங்கனையாக இருப்பதாக அவர் கூறியுள்ளது சரிதான்.அவர் அபாயகரமான , சக்திவாய்ந்த வீராங்கனைதான். அதற்காக அவர் கடுமையாக உழைத்துள்ளார். ஆனாலும் அவரை வெல்வேன் என நான் நம்புகிறேன்.`` என்றார் டர்சுனோவ்.

பாலினப் போர்

ஆடவர் மற்றும் மகளிர் மோதிய டென்னிஸ் போட்டிகள் முன்னர் நடைபெற்றுள்ளன. அவற்றில் குறிப்பிடத்தகுந்ததாக , 1973-ஆம் ஆண்டு அமெரிக்க வீராங்கனையான பில்லி ஜீன் கிங்கிற்கும், சக நாட்டு வீரரான பாபி ரிக்ஸுக்கும் இடையிலான போட்டியை கூறலாம்.

Image caption 1973-ல், பில்லி ஜீன் கீங்கும் பாபி ரிக்ஸும் ஹூஸ்டனில் மோதியதை 30 ஆயிரம் ரசிகர்கள் பார்த்தனர்

1940-ஆம் ஆண்டில் உலகின் முதல் நிலை வீரராக இருந்த ரிக்ஸ், 1951-ஆம் ஆண்டு டென்னிஸ் விளையாட்டிலிருந்து ஓய்வு பெற்றார். தன்னுடைய 55-வது வயதில்,எந்த முன்னணி வீராங்கனையையும் தோற்கடிக்க முடியும் என அவர் நம்பினார்.

ரிக்ஸுடன் மோத கிங் மறுப்பு தெரிவித்ததால், அந்த காலகட்டத்தில் முன்னணி டென்னிஸ் வீராங்கனையாக இருந்த ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மார்க்கரெட் கோர்ட், ரிக்சுடன் மோதினார். இந்த ஆட்டத்தில் 6-2 6-1 என்ற நேர் செட் கணக்கில் ரிக்ஸ் வெற்றி பெற்றார்.

ஆனால் அதே ஆண்டின் பிற்பகுதியில், ஹூஸ்டன் ஆஸ்ட்ரோடோமில் நடைபெற்ற கண்காட்சி போட்டியில், அப்போது உலகின் முன்னணி வீராங்கனையாக இருந்த 29 வயதான கிங், தன்னை விட 26 ஆண்டுகள் மூத்தவரான ரிக்சை 6-4 6-3 6-3 என்ற நேர் செட் கணக்கில் தோற்கடித்தார்.

மூன்றாவது `பாலினப் போர்` போட்டியானது, உலகின் முதல் நிலை வீரராக திகழ்ந்த,அப்போது தனது 40-வது வயதில் இருந்த முன்னாள் அமெரிக்க டென்னிஸ் வீரரான ஜிம்மி கானர்ஸ், செக் மற்றும் அமெரிக்க வீராங்கனையான, அப்போது 35 வயதிருந்த மார்ட்டினா நவரட்டிலோவா இடையே நடைபெற்றது.

விளையாட்டை கடுமையாக்குவதற்காக, இந்த போட்டி சில சிறப்பு விதிமுறைகளுக்கு கீழ் நடத்தப்பட்ட்து. அதன்படி கார்னர் ஒரு புள்ளிக்கு ஒரு முறை மட்டுமே சர்வீஸ் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. நவ்ரட்டிலோவா டென்னிஸ் கோர்ட்டின் பாதி அளவை தாண்டிச் சென்று பந்தை அடிக்க அனுமதி அளிக்கப்பட்டது. இந்த போட்டியில் கானர்ஸ் 7-5 6-2 என்ற புள்ளிகள் கணக்கில் நேர் செட்களில் வென்றார்.

இதையும் படிக்கலாம்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்