செரீனா குறித்து மெக்கன்ரோ கூறியது ஆண் ஆதிக்க மனநிலை: கொதிக்கும் வீராங்கனைகள்

டென்னிஸ் போட்டிகளில் ஆண்களுக்கான பிரிவில் போட்டியிட்டால், உலக தரவரிசை பட்டியலில் 700-வது இடத்தை பிடிக்கக் கூட செரீனா திணறுவார் என முன்னாள் டென்னிஸ் வீரர் ஜான் மெக்கன்ரோ தெரிவித்தார். அவரது இந்தக் கருத்து குறித்தும் , விளையாட்டு உலகில் வீராங்கனைகளுக்கு போதுமான அங்கீகாரம் மற்றும் பரிசுப்பணம் ஆகியவை வழங்கப்படுகிறதா என்பது குறித்தும் முன்னணி வீராங்கனைகள் சிலர் பிபிசி தமிழிடம் தங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொண்டனர்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption செரீனா வில்லியம்ஸ்

மெக்கன்ரோவின் விமர்சனம் குறித்து பிபிசி தமிழிடம் பேசிய இளைய டென்னிஸ் வீராங்கனையான ரம்யா, ''விளையாட்டு உலகில் ஆண் மற்றும் பெண் இடையே ஒப்பீடு இருக்கக்கூடாது என்றே நான் கருதுகிறேன். இருவரும் வெவ்வேறு நிலையில் விளையாடுபவர்கள்'' என்று கூறினார்.

''குறிப்பாக செரீனா போல டென்னிஸ் உலகில் நீண்ட காலம் யாராலும் ஆதிக்கம் செலுத்த முடியாது. ஆண்கள் பிரிவில் ரோஜர் பெடரர் கூட நீண்ட காலம் ஆதிக்கம் செலுத்த முடியவில்லை. ஜான் மெக்கன்ரோவும் இதை ஏற்றுக் கொண்டார்'' என்று ரம்யா மேலும் தெரிவித்தார்.

Image caption ரம்யா

செரீனா போன்ற பல வீராங்கனைகள் 5 செட்கள் கொண்ட ஆட்டத்தில் விளையாட முடியும், அவ்வாறு விளையாட வீராங்கனைகளை அனுமதிக்க வேண்டும் என்று கோரி வருகின்றனர் என்று தெரிவித்த ரம்யா, ''விளையாட்டு உலகில் ஆண் வீரர்களுக்கு இணையாக வீராங்கனைகளும் கடுமையாக பயிற்சி எடுக்கின்றனர். போராடி வருகின்றார்கள். அதனால், வீராங்கனைகளுக்கும், ஆண் வீரர்களுக்கு இணையாக பரிசுத் தொகை மற்றும் போட்டி பணம் போன்றவை தரப்பட வேண்டும்'' என்று ரம்யா வலியுறுத்தினார்.

' ஜான் மெக்கன்ரோவுக்கு பொழுது போகவில்லை'

செரீனா குறித்து மெக்கன்ரோ தெரிவித்த கருத்து பற்றி முன்னாள் கிரிக்கெட் வீராங்கனையும், பிசிசிஐயின் (இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்) வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றவருமான சாந்தா ரங்கசாமி கூறுகையில், ''இது தேவையில்லாத கருத்து. ஜான் மெக்கன்ரோவுக்கு பொழுது போகவில்லை என்று நான் நினைக்கிறேன்.'' என்று தெரிவித்தார்.

''ஆண் ஆதிக்க மனோ நிலையின் வெளிப்பாடுதான் ஜான் மெக்கன்ரோவின் கருத்து. கடவுளின் படைப்பில் பெண்கள் வித்தியாசமானவர்கள். அதைப் புரிந்து கொள்ள வேண்டும்'' என சாந்தா ரங்கசாமி தெரிவித்தார்.

படத்தின் காப்புரிமை SHANTHA RANGASWAMY/FACEBOOK
Image caption வாழ்நாள் சாதனையாளர் - சாந்தா ரங்கசாமி

விளையாட்டு உலகில், பெண்களுக்கு போதுமான அங்கீகாரம் மற்றும் மரியாதை உள்ளதா என்று கேட்டதற்கு, ''இல்லை; ஆனால், இதற்கு ஆண்களை மட்டும் குறை சொல்ல முடியாது. சமூகமும் இதற்கு பொறுப்பு கூற வேண்டும். பெண்களும் தங்கள் பங்கினை சமூகத்தில் கேட்டு, போராடி பெற பழகிக் கொள்ள வேண்டும்'' என்று சாந்தா ரங்கசாமி குறிப்பிட்டார்.

பெண்கள் விளையாட்டுக்கு ரசிகர்களிடம் எந்தளவு பணம் கிடைக்கிறது, ஆதரவு கிடைக்கிறது என்பதை பொருத்தும் பெண்கள் விளையாட்டும், வீராங்கனைகளும் அங்கீகரிக்கப்படுகின்றனர் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

அங்கீகாரம் குறைவு

படத்தின் காப்புரிமை TWITTER/@Guttajwala
Image caption 'வீராங்கனைகளுக்கு ஏன் இந்த பாகுபாடு?'' -ஜுவாலா

''கர்ப்பமாக இருந்த போது ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் பட்டத்தை செரீனா வில்லியம்ஸ் வென்றுள்ளார். இது சாதாரண சாதனையல்ல. எப்படி ஜான் மெக்கன்ரோ இவ்வாறான கருத்தை வெளியிட்டார் என்று தெரியவில்லை என்று முன்னணி பேட்மிண்டன் வீராங்கனையான ஜுவாலா குட்டா பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

''நிச்சயமாக இது ஒரு பொறுப்பற்ற கருத்துதான். பெண்கள் விளையாட்டுக்கும் ஆண்கள் விளையாட்டுக்கும் சமமான மதிப்பு மற்றும் அங்கீகாரம் தரப்பட வேண்டும். ஏன் வீராங்கனைகளை குறைவாகவும், வீரர்களை சாதனையாளராகவும் பார்க்க வேண்டும்? ஏன் இந்த பாகுபாடு?'' என்று ஜுவாலா கேள்வி எழுப்பினார்.

வீராங்கனைகளுக்கு ஏன் சமமான பரிசுத் தொகை தரப்படவில்லை என்று தெரியவில்லை. மாதவிடாய், ஹார்மோன் ரீதியான பிரச்சனை, கர்ப்பமடைவது என பல தடைகள் மற்றும் இடர்பாடுகளை தாண்டித்தான் வீராங்கனைகள் இங்கு சாதிக்கின்றனர் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்த ஜுவாலா, இது குறித்து தன்னால் முடிந்தபோதெல்லாம் குரல் எழுப்பி வருவதாகவும் குறிப்பிட்டார்.

படத்தின் காப்புரிமை Getty Images

ஒப்பீடு செய்வது தவறு

செரீனா குறித்து ஜான் மெக்கன்ரோ தெரிவித்த கருத்து குறித்து பிபிசி தமிழிடம் பேசிய முன்னாள் இந்திய ஹாக்கி அணித்தலைவர் அர்ஜுன் ஹாலப்பா, ''விளையாட்டுகளையும், வீரர் மற்றும் வீராங்கனைகளையம ஒப்பீடு செய்வது தவறு. வீராங்கனைகளை மதித்து அவர்களின் சாதனைகளுக்கு அங்கீகாரம் வழங்க வேண்டும்'' என்று கூறினார்.

''செரீனா போன்ற வீராங்கனைகளின் சாதனைகள் மிகவும் போற்றப்பட வேண்டியவை. கர்ப்பமாக இருந்த போது ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் போட்டியை வென்றவர் செரீனா என்பதை மறக்க முடியாது'' என்று தெரிவித்த அர்ஜுன் ஹாலப்பா, தன்னைப் பொறுத்தவரை விளையாட்டு உலகில் பெண்கள் நிகழ்த்தும் சாதனைகளை மதித்து வருவதாக குறிப்பிட்டார்.

தொடர்பான செய்திகள்:

இதையும் படிக்கலாம்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்