டிராவிட், ஜாகீர்கான் அவமானப்படுத்தப்படுவதாக தொடரும் கண்டனக் குரல்கள்

  • 16 ஜூலை 2017

இந்திய கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக ஜாகீர் கானும், வெளிநாட்டு சுற்றுப் பயணங்களுக்கான பேட்டிங் ஆலோசகராக ராகுல் டிராவிட்டும் நியமனம் செய்யப்பட்டது தொடர்பா குழப்பம் தொடர்ந்து நீடித்து வருகிறது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption டிராவிட் மற்றும் ஜாகீர்

இந்திய கிரிக்கெட் அணி தொடர்பான ஆலோசனை கமிட்டியில் சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலி மற்றும் விவிஎஸ் லட்சுமணன் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர்.

கடந்த ஜுலை 11-ஆம் தேதியன்று இந்த கமிட்டி இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரியையும், அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக ஜாகீர் கானையும், வெளிநாடு சுற்றுப் பயணங்களுக்கான பேட்டிங் ஆலோசகராக ராகுல் டிராவிட்டையும் நியமித்தது.

இந்நிலையில், நேற்று (சனிக்கிழமை) இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி நியமனத்தை தவிர பிற இரு பயிற்சியாளர்கள் நியமனத்தையும் நிர்வாகிகள் கமிட்டி தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

பிசிசிஐ நிர்வாகிகள் கமிட்டியின் இந்த திடீர் முடிவு குறித்து பலரும் சமூகவலைத்தளத்தில் கருத்து தெரிவித்துள்ள சூழலில், இது குறித்து பிரபல வரலாற்றாசிரியர் ராமச்சந்திர குஹா தனது டிவிட்டர் வலைதளத்தில் கடுமையாக விமர்சித்துள்ளார்.

''முன்பு அனில் கும்ப்ளே மிகவும் மோசமாக நடத்தப்பட்டார். தற்போது ஜாகீர் கான் மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோர் அவமானப்படுத்தும் விதத்தில் நடத்தப்பட்டுள்ளனர். அனில் கும்ப்ளே, ஜாகீர் கான் மற்றும் ராகுல் டிராவிட் மிகச் சிறந்த விளையாட்டு வீரர்கள். பொதுவெளியில் அவர்கள் இப்படி நடத்தப்படுவது தவறு'' என்று ராமச்சந்திர குஹா தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Twitter
Image caption டிவிட்டர் பதிவு

விளையாட்டுக்காகவும், அணிக்காகவும் தங்களை முழுமையாக அர்ப்பணித்த டிராவிட் மற்றும் ஜாஹீருக்கு பொதுவெளியில் ஏற்பட்ட இந்த அவமானம் தேவையில்லாத ஒன்று என்று குஹா மேலும் கூறியுள்ளார்.

நிர்வாகிகள் கமிட்டிக்கும் ஆலோசனை கமிட்டிக்கும் மோதலா?

உச்ச நீதிமன்றத்தால் பிசிசிஐயின் செயல்பாடுகளை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட நிர்வாகிகள் குழுவில் ராமச்சந்திர குஹாவும் முன்பு இடம்பெற்றார். ஆனால், பிசிசிஐயின் சில முடிவுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் இக்குழுவில் இருந்து விலகிவிட்டார்.

ஜாகீர் கான் மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோரின் நியமனத்தில், அணியின் பயிற்சியாளரான ரவிசாஸ்திரிக்கு அதிருப்தி உள்ளதாகவும், அவர் இது குறித்து புகார் செய்ததாகவும் சில ஊடக தகவல்கள் தெரிவித்துள்ளன.

இந்த புகாருக்கு பதிலளிக்கும் வகையில், சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலி மற்றும் விவிஎஸ் லட்சுமணன் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ள கிரிக்கெட் ஆலோசனை கமிட்டி நிர்வாகிகள் கமிட்டிக்கு அனுப்பிய கடிதத்தில் ஜாகீர் கான் மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோரின் நியமனம் குறித்து தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரியுடன் கலந்து ஆலோசிக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளனர்.

ஆனாலும், ஜாகீர் கான் மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோரின் நியமனம் குறித்த சர்ச்சை இன்னமும் தீரவில்லை.

ரவிசாஸ்திரியின் நியமனத்துக்கு ஓப்புதல் அளித்துள்ள நிர்வாகிகள் கமிட்டி ஜாகீர் கான் மற்றும் டிராவிட் ஆகியோரின் நியமனம் குறித்து திடமான முடிவு எதுவும் தெரிவிக்கவில்லை. இவர்களின் நியமனம் குறித்து தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரியுடன் ஆலோசிக்கப்பட்டு முடிவு செய்யப்படும் என்று தெரிவித்துள்ளது.

இந்நிலையில், பிசிசிஐ கமிட்டியின் இந்த நிலைப்பாடு குறித்து ராமச்சந்திர குஹா கடுமையாக சாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாம்:

ஐ.எஸ். குழுவின் எதிர்காலம் என்ன?

டிவிட்டர் டிரெண்டிங்கில் தொடர்ந்து இடம்பெறும் 'கமலை சுற்றும் சர்ச்சை'

டெல்லி: பிரதமர் வீட்டு முன் தமிழக விவசாயிகள் தர்ணாவில் ஈடுபட முயற்சி

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரி நியமனம்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்