இரண்டு விக்கெட்டுகளை இழந்த இந்தியா வெற்றி பெறுமா? நிபுணர்கள் கருத்து

லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் இறுதியாட்டத்தில் தனது வெற்றி இலக்கான 229 ரன்களை நோக்கி பேட் செய்து வரும் இந்தியா 5 ரன்கள் எடுத்த நிலையில் முதல் விக்கெட்டை இழந்தது.

இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு எப்படி?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு எப்படி?

இந்திய இன்னிங்ஸின் இரண்டாவது ஓவரில் அணியின் தொடக்க ஆட்டக்காரர் மந்தானா ரன் எதுவும் எடுக்காத நிலையில் ஆட்டமிழந்தார்.

இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு குறித்து மூத்த பத்திரிக்கையாளரான விஜய் லோக்பாலி கூறுகையில், ''இந்திய அணி முதல் விக்கெட்டை இழந்துள்ளது. ஆனாலும், கேப்டன் மித்தாலி ராஜ் உள்ளிட்ட மற்ற வீராங்கனைகள் சிறப்பாக விளையாடுவர் என்று எதிர்பார்க்கலாம்'' என்று தெரிவித்தார்.

''தற்போதைய நிலையில் ஆக்ரோஷமாக அடித்தாட தேவையில்லை. வலுவான அடித்தளம் அமைத்து அதன் பின்னர் அடித்தாடுவது அணிக்கு வெற்றியை ஈட்டும்'' என்று விஜய் லோக்பாலி தெரிவித்தார்.

பட மூலாதாரம், VIJAY LOKPALLY

இன்றைய போட்டியில் வென்றால், 1983-ஆம் ஆண்டு லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த ஆண்கள் உலக கோப்பை இறுதியாட்டத்திற்கு பிறகு வெளிநாட்டு மண்ணில் இந்திய அணிக்கு பெரும் வெற்றியாக அமையும் என்று தெரிவித்த விஜய் லோக்பாலி, சாம்பியன்ஸ் கோப்பை போன்ற பல தொடர்களை ஆண்கள் கிரிக்கெட் அணி வென்றுள்ளதால், மகளிர் கிரிக்கெட் அணிக்கு வெளிநாட்டில் இது பெரும் வெற்றியாக அமையலாம் என்று குறிப்பிட்டார்.

இந்திய அணி பொறுமையாக விளையாடினால் வெற்றி பெறுவது சாத்தியம்தான் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

51:49 இந்தியாவின் வெற்றிவாய்ப்பு

இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு பற்றி முன்னாள் கிரிக்கெட் வீராங்கனையும், பிசிசிஐயின் (இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்) வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றவருமான சாந்தா ரங்கசாமி கூறுகையில், 'ஆரம்பத்தில் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு 60:40 என்ற நிலையில் இருப்பதாக நான் கணித்தேன்'' என்று தெரிவித்தார்.

பட மூலாதாரம், படத்தின் காப்புரிமைSHANTHA RANGASWAMY/FACEBOOK

படக்குறிப்பு,

சாந்தா ரங்கசாமி

''ஆனால் தற்போது இங்கிலாந்து வீராங்கனைகளின் பந்துவீச்சு நன்றாக உள்ளது. இந்திய அணியும் முதல் விக்கெட்டை விரைவாக இழந்துவிட்டது. அதனால் 51:49 என்ற நிலையில் இந்தியாவின் வெற்றிவாய்ப்பு இருப்பதாக கருதுகிறேன்'' என்று சாந்தா ரங்கசாமி தெரிவித்தார்.

நேர்த்தியாகவும், சாதுர்யமாகவும் விளையாடினால் இந்திய அணி மகளிர் உலக கோப்பையை கைப்பற்றுவது நிச்சயம் என்று சாந்தா ரங்கசாமி கருத்து தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்