மகளிர் உலக கோப்பை: பரபரப்பான போட்டியில் நூலிழையில் கோப்பையை தவறவிட்ட இந்தியா

லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் இறுதியாட்டத்தில் 9 ரன்கள் வித்தியாசாத்தில் வென்ற இங்கிலாந்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

சாம்பியன் பட்டத்தை வென்ற இங்கிலாந்து

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

சாம்பியன் பட்டத்தை வென்ற இங்கிலாந்து

தொடக்கத்திலேயே அதிர்ச்சி

தனது வெற்றி இலக்கான 229 ரன்களை நோக்கி பேட் செய்ய தொடங்கிய இந்தியா இரண்டாவது ஓவரிலேயே 5 ரன்கள் எடுத்த நிலையில் முதல் விக்கெட்டை இழந்தது. இந்திய தொடக்க ஆட்டக்காரர் மந்தானா ரன் எதுவும் எடுக்காத நிலையில் ஆட்டமிழந்தார்.

இதன் பின்னர் களமிறங்கிய அணித்தலைவர் மித்தாலி ராஜ் பொறுப்பாக விளையாடினாலும் 17 ரன்கள் எடுத்த நிலையில் எதிர்பாராதவிதமாக ரன் அவுட் ஆனார்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

அரைச்சதம் எடுத்த பூனம் ராவத், ஹர்மன்ப்ரீத் கவுர்

அரைச்சதம் எடுத்த பூனம் ராவுத், ஹர்மன்ப்ரீத் கவுர்

இரண்டு விக்கெட்டுக்களை இந்தியா இழந்த நிலையில், பூனம் ராவத் மற்றும் ஹர்மன்ப்ரீத் கவுர் ஆகியோர் நேர்த்தியாகவும், அவ்வப்போது அடித்தாடியும் இந்திய அணிக்கு சிறப்பான அடித்தளத்தை ஏற்படுத்தினர்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

86 ரன்கள் எடுத்த பூனம்

இரண்டு சிக்ஸர்களின் உதவியோடு 80 பந்துகளில் 51 ரன்கள் எடுத்த நிலையில் ஹர்மன்ப்ரீத் கவுர் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து விளையாடிய பூனம் ராவத், மிக சிறப்பாக விளையாடி 115 பந்துகளில் 86 ரன்கள் எடுத்தார். மறுமுனையில் வேதா கிருஷ்ணமூர்த்தி பொறுப்பாக விளையாடி 35 ரன்கள் எடுத்தார்.

ஆனால், ஒரு கட்டத்தில் வேதா கிருஷ்ணமூர்த்தி, ஜுலன் கோஸ்வாமி ஆகியோர் தொடர்ந்து ஆட்டமிழக்க ஆட்டம் பரபரப்பு தொற்றிக்கொண்டது.

4-ஆவது முறையாக உலக கோப்பையை வென்ற இங்கிலாந்து

இறுதியில் 48.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்த இந்தியா 219 ரன்களை மட்டுமே எடுத்தது.

இதனால் 9 ரன்கள் வித்தியாசாத்தில் இறுதியாட்டத்தில் வென்ற இங்கிலாந்து அணி நான்காவது முறையாக மகளிர் உலக கோப்பையை வென்றது.

இறுதியாட்டத்தில், முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் இறுதியில் 7 விக்கெட்டுக்கள் இழப்புக்கு 228 ரன்கள் எடுத்து இந்தியாவுக்கு 229 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

இந்திய அணிக்கு 229 வெற்றி இலக்கு

இன்றைய போட்டியின் தொடக்கத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் நைட், இங்கிலாந்து அணி முதலில் பேட் செய்யும் என்று அறிவித்தார்.

வின்ஃபீல்ட்டின் விக்கெட்டை இடதுகை சுழல் பந்துவீச்சாளர் ராஜேஸ்வரி காயக்வாட் எடுத்தார்.

பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணியின் கேப்டன் நைட் 1 ரன்னில் எதிர்பாராத விதமாக ஆட்டமிழந்தார். இந்திய பந்துவீச்சாளர் பூனம் யாதவ் 2 விக்கெட்டுக்களை எடுத்தார்.

பட மூலாதாரம், ICC

படக்குறிப்பு,

அரைச்சதம் அடித்த ஸ்கிவர்

துல்லியமான பந்துவீச்சு

இங்கிலாந்து அணி ஒரு பக்கம் விக்கெட்டுக்களை இழந்து கொண்டிருந்தாலும், அந்த அணியின் ஸ்கிவர் மற்றும் பிரண்ட் ஆகியோர் நன்கு அடித்தாடினர்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

துல்லியமாக பந்துவீசிய ஜுலன் கோஸ்வாமி

ஆனால், இந்திய பந்துவீச்சாளரான ஜுலான் கோஸ்வாமியின் துல்லியமான மற்றும் நேர்த்தியான பந்துவீச்சால் இங்கிலாந்து அணியால் விரைவாக ரன்கள் குவிக்க முடியவில்லை. தான் பந்துவீசிய 10 ஓவர்களில் 23 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து மூன்று விக்கெட்டுகளை ஜுலான் கோஸ்வாமி எடுத்தார்.

இறுதியில் 7 விக்கெட்டுக்கள் இழப்புக்கு 228 ரன்கள் எடுத்த இங்கிலாந்து அணி 229 ரன்களை இந்தியாவுக்கு வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்