கிரிக்கெட்: இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்தியா அபார வெற்றி

  • 29 ஜூலை 2017
படத்தின் காப்புரிமை Getty Images
Image caption அபார வெற்றி பெற்ற இந்தியா

இலங்கையில் உள்ள காலே மைதானத்தில், இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் கிரிக்கெட் டெஸ்டில், 304 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.

இரண்டாவது இன்னிங்சில் 550 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் துவங்கிய இலங்கை அணி, தொடக்கம் முதலே மிகவும் தடுமாறியது.

இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர் தரங்கா, இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஷமி பந்துவீச்சில் 10 ரன்களில் ஆட்டமிழந்தார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption ஆரவாரத்துடன் காணப்படும் கோலி

தொடர்ந்து விக்கெட்டுக்களை இழந்து கொண்டிருந்த இலங்கை அணிக்கு, கருணாரத்ன மற்றும் டிக்வெல்லாவின் ஆட்டம் சற்று கைகொடுத்தது.

இந்திய பந்துவீச்சாளர்களுக்கு ஈடுகொடுத்து போராடி வந்த டிக்வெல்லா 67 ரன்னில் அஸ்வினின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.. இதன் பின்னர் மீண்டும் இந்தியாவின் கை ஓங்கியது.

இந்திய சுழல் பந்துவீச்சாளர்கள் ஜடேஜா மற்றும் அஸ்வின் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

படத்தின் காப்புரிமை Getty Images

இறுதியில் 245 ரன்களுக்கு இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழக்க, இந்தியா 304 ரன்கள் வித்தியாசத்தில் சாதனை வெற்றி பெற்றுள்ளது. வெளிநாட்டு மண்னில் இந்திய அணி அதிக ரன்கள் வித்தியாசத்தில் பெற்ற மிகப்பெரிய வெற்றியாக இது பார்க்கப்படுகிறது.

தவான், புஜாரா சதம்

முன்னதாக, இப்போட்டியில் முதலாவதாக பேட் செய்த இந்தியா, தனது முதல் இன்னிங்சில் இந்தியா 600 ரன்களை எடுத்தது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரார் ஷிகர் தவான் 190 ரன்களையும், புஜாரா 153 ரன்களையும் எடுத்தனர்.

இலங்கை பந்துவீச்சாளர் பிரதீப் 6 விக்கெட்டுகளை எடுத்தார்.

தனது முதல் இன்னிங்சில், இலங்கை அணியால் 291 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. ஜடேஜா 3 விக்கெட்டுகளையும் , ஷமி 2 விக்கெட்டுகளையும் எடுத்தனர்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption 190 ரன்கள் எடுத்த தவான்

விரைவாக சதமடித்த கோலி

பின்னர், தனது இரண்டாவது இன்னிங்க்ஸை தொடங்கிய இந்தியா நன்கு அடித்தாடியது. தவான் மற்றும் புஜாரா சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தாலும், அணித்தலைவர் விராட் கோலி சிறப்பாக விளையாடி ஆட்டமிழக்காமல் 103 ரன்கள் எடுத்தார்.

முன்னதாக, இலங்கை சென்றுள்ள இந்திய அணி, 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இவ்விரு அணிகளும் மோதிய முதல் டெஸ்ட் போட்டி காலேவில் கடந்த புதன்கிழமை தொடங்கியது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்