'கறுப்பின பெண்களுக்கு சம ஊதியம் வேண்டும்': வலியுறுத்தும் செரீனா வில்லியம்ஸ்

  • 2 ஆகஸ்ட் 2017
கறுப்பினப் பெண்களுக்கு சம ஊதியம் கேட்கும் டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸ் படத்தின் காப்புரிமை Getty Images

கறுப்பினப் பெண்களுக்கு சம ஊதியம் வேண்டும் என்பதை கடுமையாக வலியுறுத்தி டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார்.

கறுப்பினப் பெண்களுக்கு சம ஊதியம் வழங்குவதை வலியுறுத்தி அமெரிக்காவில் அனுசரிக்கப்படும் தினத்தையொட்டி, "கறுப்பினப் பெண்கள் எவ்வாறு ஊதிய வேறுபாட்டைக் களைய முடியும்" என்னும் தலைப்பில் கட்டுரை எழுதியுள்ளார்.

"ஊதிய இடைவெளி கறுப்பினப் பெண்களை மிகவும் மோசமாக பாதிக்கிறது," என்று எழுதியுள்ள அவர் "நான் வளரும்போது, நான் ஒரு பெண் என்பதாலும், என் தோலின் நிறத்தாலும் என் கனவுகளை என்னால் அடைய முடியாது என்று என்னிடம் கூறப்பட்டது," என்று கூறியுள்ளார்.

போர்ப்ஸ் சஞ்சிகையில் எழுதியுள்ள கட்டுரையில், அமைப்பு ரீதியான சமநிலையின்மை எவ்வாறு எல்லா வகையான வேலைகளையும் செய்யும் கறுப்பினப் பெண்களையும் பாதிக்கிறது, என்பதைப்பற்றி அந்த 35 வயாதான டென்னிஸ் வீராங்கனை விவரிக்கிறார்.

"இந்த விவகாரம் கறுப்பினப் பெண்கள் குறைந்த ஊதியமே வழங்கப்படும் வேலைகளைச் செய்கிறார்கள் என்பதல்ல. தொழில்நுட்ம், நிதி, பொழுதுபோக்கு, சட்டம், மருத்துவம் ஆகிய துறைகளிலும் அவர்கள் குறைந்த ஊதியமே பெறுகிறார்கள்," என்று செரீனா எழுதியுள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images

அக்கட்டுரையில், "பட்டப் படிப்பு முடித்துள்ள கறுப்பினப் பெண்கள் எல்லா நிலைகளிலும் குறைவான ஊதியமே பெறுகிறார்கள்", என்றும், "சிலிக்கான் பள்ளத்தாக்கில் இருப்பதுபோன்ற இந்த நிலையே பிற நகரங்களிலும் நிலவுகிறது," என்றும் கூறியுள்ளார்.

விளையாட்டு வரலாற்றில் ஒரு மிகவும் வெற்றிகரமான ஒரு நிலையைத் தன் வாழ்வில் அடைந்துள்ளதை ஒப்புக்கொண்டுள்ள அவர், "என் கற்பனைக்கு அப்பாற்பட்ட, அரிதானதொரு பொருளாதார வெற்றியை நான் அடைந்துள்ளேன். ஆனால் இந்த நாள் என்னைப்பற்றியதல்ல. அமெரிக்காவில் இருக்கும் 24 மில்லியன் கறுப்பினப் பெண்களைப்பற்றியது," என்று தெரிவித்துள்ளார்.

"டென்னிஸ் ராக்கெட்டை கைகளில் எடுத்திருக்காவிட்டால், நானும் அப்பெண்களில் ஒருத்தியாகவே இருந்திருப்பேன். வறுமை, பாகுபாடு, பாலின பேதம் ஆகிய சுழல்களை நொறுக்குவது, கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வெல்வதைவிடக் கடினமானது," என்று எழுதியுள்ளார்.

"இந்நிலையைப் போக்க அர்ப்பணிப்புடன் கூடிய செயல்பாடு, சட்டங்கள், பணியமர்த்துபவரின் அங்கீகாரம் மற்றும் அதிக ஊதியம் கேட்பதற்கான பணியாளரின் துணிச்சல்," ஆகியவை வேண்டும் என்று செரீனா கூறியுள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption ஜனவரியில் நடந்த ஆஸ்திரேலியன் ஓபனில் செரீனா பட்டம் வென்றார். அவர் அப்போது கருவுற்றிருந்தது பின்னர் தெரிய வந்தது.

"சுருக்கமாகச் சொன்னால், இதை நாம் அனைவரும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். நிறம், இனம், மதம் ஆகிய வேறுபாடுகளைக் கடந்து ஆண்களும் பெண்களும் இதை ஒரு அநீதி என்பதை உணர வேண்டும்," என்று கோரியுள்ளார்.

"கறுப்பினப் பெண்களே! துணிச்சல் மிக்கவர்களாக இருங்கள். சம ஊதியத்திற்காக வெளிப்டையாகக் குரல் கொடுங்கள். ஓவ்வொரு முறையும் நீங்கள் அதைச் செய்யும்போது, உங்களுக்குப் பின்னால் வரும் பெண்களின் போராட்டம் சுலபமாகும்," என்றும் "எல்லாவற்றுக்கும் மேலாக, நீங்கள் அந்த ஊதியத்தைப் பெறத் தகுதியானவர்கள் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்" என்று செரீனா அக்கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

பிபிசியின் பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :