ஒருநாள் போட்டி தொடரை வென்றது இந்தியா: 5 முக்கிய காரணங்கள்

  • 28 ஆகஸ்ட் 2017

இலங்கை அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் 3-0 என்று வென்ற இந்தியா தொடரை கைப்பற்றியுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

ஒருநாள் போட்டி தொடரை 3-0 என்று இந்தியா வென்றதற்கான 5 முக்கிய காரணங்கள் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளது.

  • தொடரும் டெஸ்ட் தொடரின் பாதிப்பு

3 டெஸ்ட் போட்டிகளை சிறப்பாக வென்றிருந்த இந்திய அணி, முதல் ஒருநாள் போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption 3-0 என்று டெஸ்ட் தொடரை ஒயிட்வாஷ் செய்த இந்திய அணி

முதல்முறையாக இலங்கை மண்ணில் 3-0 என்று டெஸ்ட் தொடரை ஒயிட்வாஷ் செய்த இந்திய அணிக்கு, டெஸ்ட் தொடரின் மகத்தான வெற்றி ஒருநாள் போட்டி தொடரை நம்பிக்கையுடன் தொடங்க உதவியது.

டெஸ்ட் தொடரை மோசமாக தோற்றதால் அது இலங்கை அணியின் நம்பிக்கையை மிகவும் குலைத்து, ஒருநாள் தொடரிலும் பிரதிபலித்தது.

அதிரடியும், நிதானமும் கலந்த இந்திய மட்டைவீச்சாளர்கள்

மூன்று ஒருநாள் போட்டிகளிலும் வெவ்வேறு இந்திய மட்டைவீச்சாளார்கள் சிறப்பாக பங்களித்துள்ளனர். முதல் போட்டியில் தவானின் அற்புத சதமும், கோலியின் அதிரடி ஆட்டமும் போட்டியை வெல்ல உதவியது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption முதல் ஒருநாள் போட்டியில் தவான் மற்றும் கோலிஅதிரடி

இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஒருகட்டத்தில் பல விக்கெட்டுக்களை இழந்து தடுமாறிக் கொண்டிருந்த போது, புவனேஸ்வர்குமார் மற்றும் டோனியின் நிதான ஆட்டம் வெற்றியை ஈட்டியது.

அதே போல், 3-ஆவது ஒருநாள் போட்டியில் 4 விக்கெட்டுக்களை இழந்த இந்தியாவுக்கு ரோகித் சர்மா மற்றும் டோனியின் நிதான மற்றும் அதிரடி ஆட்டம் பெரிதும் உதவியது.

இலங்கையை குலைத்த இந்திய பந்துவீ ச்சாளர்கள்

மூன்று ஒருநாள் போட்டிகளிலும் இந்தியா இரண்டாவதாக பேட் செய்த நிலையில், குறைந்த அளவு இலக்கு நிர்ணயிக்க முடிந்ததற்கு முக்கிய காரணம் இந்திய பந்துவீச்சாளர்கள்தான்.

படத்தின் காப்புரிமை Icc/ twitter

அணியின் வேகப்பந்துவீ ச்சாளர்களும், சுழல் பந்துவீ ச்சாளர்களும் வெவ்வேறு தருணங்களில் சிறப்பாக செயல்பட்டு அணிக்கு வெற்றி தேடித்தந்துள்ளனர்.

முதல் போட்டியில் அக்சர் பட்டேல், கேதர் ஜாதவ் மற்றும் பூம்ரா ஆகியோர் சிறப்ப பந்துவீசினர். 2-ஆவது போட்டியில் பூம்ரா மற்றும் சாஹல் நன்றாக பந்துவீசி இலங்கை அணியை நிலைகுலைய வைத்தனர்.

மூன்றாவது போட்டியில் மிகவும் சிறப்பாக பந்துவீசிய பூம்ரா 5 விக்கெட்டுக்களை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு பெரிதும் உதவினார்.

சோபிக்காத இலங்கை மட்டைவீச்சாளர்கள்

முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணியின் மட்டைவீச்சாளர்கள் விக்கெட் இழப்பின்றி 14 ஓவர்களில் 74 ரன்கள் சேர்த்து வலுவான நிலையில் இருந்தனர்.

ஆனால், அந்த வலுவான நிலையை பின்னர் களமிறங்கிய வீரர்கள் வீணடித்துவிட்டனர். இதே போல் மற்ற இரு போட்டிகளிலும் நிலைத்து விளையாடாத இலங்கை மட்டைவீச்சாளர்களால் பெரும் எண்ணிக்கையை குவிக்கமுடியவில்லை.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption சோபிக்காத இலங்கை மட்டைவீச்சாளர்கள்

அணியின் முக்கிய வீரர்களில் ஓரிருவரை தவிர மற்ற யாரும் இந்த தொடரில் சிறப்பாக பங்களிக்கவில்லை.

நம்பிக்கை குறைந்த நிலையில் காணப்படும் இலங்கை பந்துவீச்சாளர்கள்

மூன்று போட்டிகளிலும் இலங்கை பந்துவீச்சாளர்களில் தனஞ்ஜயவை தவிர மற்ற யாரும் எந்த தாக்கமும் ஏற்படுத்தவில்லை.

முதல் ஒருநாள் போட்டியில், ஆறு பந்துவீச்சாளர்களை இலங்கை அணி பந்துவீச்சில் அமர்த்தியபோதும் அவர்களால் ஒரு விக்கெட்டை மட்டுமே பெற முடிந்தது. அதுவே ரன்-அவுட் மூலமே கிடைத்தது.

இரண்டாவது மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டிகளில் நம்பிக்கை குறைந்த நிலையில் காணப்பட்ட இலங்கை பந்துவீச்சளர்களால் தங்கள் அணிக்கு கிடைத்த வலுவான நிலையை பயன்படுத்த முடியவில்லை.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்