கிரிக்கெட்: தரவரிசையில் முதலிடத்தை பிடித்த இந்தியா - உள்ளூரில் புலி, வெளியூரில் எலியா?

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே ஞாயிற்றுக்கிழமை நடந்த மூன்றாவது ஒருநாள் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்தியா, 3-0 என்று தொடரை வென்றது.

படத்தின் காப்புரிமை TWITTER/BCCI
Image caption ஐசிசி தரவரிசையில் முதலிடத்தை பிடித்த இந்தியா

இதன் மூலம் ஐசிசியின் (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) ஒருநாள் போட்டிகளுக்கான அணிகளின் தரவரிசைப்பட்டியலில் இந்தியா முதலிடத்தை பெற்றுள்ளது. ஏற்கனவே ஐசிசியின் டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசைப்பட்டியலில் முதலிடத்தில் இந்தியா உள்ளது.

தரவரிசை பட்டியலில் முதலிடத்தை பிடித்த இந்திய கிரிக்கெட் அணி பாராட்டுகளையும், சில விமர்சனங்களையும் பெற்றுள்ளது.

இலங்கை, மேற்கிந்திய தீவுகள் போன்ற அணிகள் சிறப்பாக விளையாடாத காரணத்தாலும், பெரும்பாலான போட்டிகள் உள்ளூரில் நடந்ததாலும் மட்டுமே இந்தியாவால் வெல்ல முடிந்தது என்று சில விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

2019-ஆம் ஆண்டு இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் ஒருநாள் போட்டிகளுக்கான உலகக்கோப்பை ஆட்டங்கள் நடக்கவுள்ள சூழலில், ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் முதலிடத்தை பெற்றுள்ள இந்தியா அந்த இடத்தை தக்கவைத்துக் கொள்ள முடியுமா என்பது குறித்து மூத்த பத்திரிக்கையாளர் விஜய் லோக்பாலி பிபிசி தமிழிடம் உரையாடினார்.

''ஐசிசி தரவரிசை பட்டியல் அணிகளின் உண்மையான திறமையை பிரதிபலிக்கும் என்று எடுத்துக் கொள்ள முடியாது. ஆனால், கடந்த 8 மாதங்களாக இந்திய அணியின் பங்களிப்பு மிக சிறப்பாக இருந்தது'' என்று விஜய் லோக்பாலி கூறினார்.

படத்தின் காப்புரிமை ICC
Image caption ஐசிசி தரவரிசைப் பட்டியல்

ஆஸ்திரேலியா போன்ற மிகச் சிறந்த அணியை வென்று தரவரிசை பட்டியலில் முதலிடத்தை பெற்ற இந்தியா, இலங்கை, மேற்கிந்திய தீவுகள் போன்ற சாதாரண அணிகளை அண்மைய காலகட்டத்தில் வென்றுள்ளது என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும் என்று விஜய் லோக்பாலி குறிப்பிட்டார்.

''ஆனால், தற்போது நல்ல நிலையில் இந்தியா அடுத்தபடியாக தென் ஆப்ரிக்காவுக்கு செல்லும் போது அங்கு சிறப்பாக விளையாடும் என்று நம்புகிறேன்'' என்று விஜய் லோக்பாலி தெரிவித்தார்.

இளம் வீரர்களின் அதிரடி பாணி

குல்தீப் யாதவ், மனிஷ் பாண்டே மற்றும் ஹர்திக் பாண்டியா போன்ற இளம் வீரர்கள் சிறப்பாக விளையாடி வருகின்றனர். இவர்கள் வெளிநாட்டு மண்ணிலும் சிறப்பாக விளையாடுவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்த அவர், மேலும் கூறுகையில், பூம்ரா மற்றும் புவனேஷ் குமார் போன்ற பந்துவீச்சாளர்கள் அச்சமின்றி பந்துவீசி வருவது அணிக்கு நன்மை பயக்கும் என்று கூறினார்.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption 'கணிக்க முடியாத குல்தீப் யாதவ்'

கடந்த ஓர் ஆண்டில் இந்திய பந்துவீச்சாளர்களில் மிகவும் வியப்பூட்டியவர் குல்தீப் யாதவ்தான். அவரின் பந்துவீச்சை, நுணுக்கத்தை இன்னமும் பல மட்டைவீச்சாளர்களால் புரிந்து கொள்ளமுடியவில்லை. அவர் இந்தியாவுக்கு ஒரு நீண்ட கால வரமாக அமையக்கூடும் என்று அவர் மேலும் கூறினார்.

'கணிக்க முடியாத குல்தீப் யாதவ்'

ஐசிசி தரவரிசையில் முதலிடத்தை பெற்ற இந்தியா பலமிக்க அணிகளுடன் வெளிநாடுகளில் விளையாடும் போது அதன் பங்களிப்பும் , தாக்கமும் மாறுமா என்று கேட்டதற்கு முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரான சடகோபன் ரமேஷ் கூறுகையில், ''நிச்சயமாக மாறும்; தென் ஆப்ரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவில் விளையாடும்போது சூழல் பெரிதும் மாறும். மேலும், ரசிகர்களின் ஆதரவும் இந்தியாவில் விளையாடும் போது கிடைப்பது போல் கிடைக்காது'' என்று கூறினார்.

2001-ஆம் ஆண்டு நடந்த தொடர் போல, தற்போதும்இந்தியாவில் வெல்வோம் என்ற நம்பிக்கை ஆஸ்திரேலியாவுக்கு வரவில்லை என்று ரமேஷ் மேலும் தெரிவித்தார்.

''எளிதில் கணிக்க முடியாத அளவு குல்தீப் யாதவ் மிக சிறப்பாக பந்துவீசி வருகிறார். சஹல் மற்றொரு சிறப்பான சுழல் பந்துவீ ச்சாளராக திகழ்கிறார். இங்கிலாந்தில் நடக்கும் உலக கோப்பையில் சுழல் பந்துவீ ச்சாளர்களின் பங்கு மிகவும் முக்கியமாக அமையும் என்று ரமேஷ் கூறினார்.

'கடந்த கால தவறுகள் களையப்படலாம்'

படத்தின் காப்புரிமை Reuters
Image caption அணியை சிறப்பாக வழிநடத்திய விராட் கோலி

ஐசிசி தரவரிசையில் முதலிடத்தை பெற்ற இந்தியா அவ்விடத்துக்கு தகுதியான அணிதானா என்று பிபிசி தமிழிடம் உரையாடிய முன்னாள் இந்திய இந்திய அணி வீரரும், விக்கெட்கீப்பருமான நயன் மோங்கியா கூறுகையில், ''நிச்சயமாக ஐசிசி தரவரிசையில் முதலிடத்தை பெற இந்தியா தகுதியான அணிதான். ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போது இந்த அணி தொடர்ந்து சிறப்பாக விளையாடும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

கடந்த காலங்களில் ஐசிசி தரவரிசையில் முதலிடத்தில் இருந்த இந்தியா, அதன் பின்னர் நடந்த ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து தொடர்களில் கடுமையாக சறுக்கியது குறித்து கேட்டதற்கு, ''கடந்த காலம் ஒரு வரலாறு; தற்போது இந்திய அணி வீரர்கள் மிகவும் நம்பிக்கையுடன் உள்ளனர். அதனால் கடந்த காலத்துடன் ஒப்பிட முடியாது'' என்று நயன் மோங்கியா குறிப்பிட்டார்.

தென் ஆப்ரிக்காவில் இந்தியா மேற்கொள்ளும் சுற்றுப்பயணத்தில் வேகப்பந்துவீச்சாளர்கள் தங்கள் பந்துவீச்சில் சில மாறுதல்களை மேற்கொள்ள வேண்டும். அங்குள்ள சூழல் மாறுபடும். அதனால் முன்பு செய்த தவறுகளை இந்திய பந்துவீச்சாளர்கள் செய்ய மாட்டார்கள் என்று மோங்கியா நம்பிக்கை தெரிவித்தார்.

ஹர்திக் பாண்டியா 'அடுத்த கபில்தேவா'?

கடந்த சில போட்டிகளில் சிறப்பாக விளையாடிய இந்தியாவின் அடுத்த கபில்தேவாக உருவெடுக்கக்கூடும் என்று சிலர் ஊடகங்களில் கருத்து தெரிவித்துள்ள நிலையில், அவரது பேட்டிங் மற்றும் பந்துவீச்சு ஆகிய இரண்டும் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படுகிறது.

படத்தின் காப்புரிமை AFP/GETTY IMAGES

இந்தியாவின் 'ஆல்ரவுண்டர்' தேடுதலுக்கான விடையா ஹர்திக் பாண்டியா என்று கேட்டதற்கு விஜய் லோக்பாலி பதிலளிக்கையில், ''ஹர்திக் பாண்டியா சிறந்த ஆல்-ரவுண்டர் தான். ஆனால், அவர் அடுத்த கபில்தேவ் என்று சிலர் ஒப்பிடுவது அபத்தமானது. கபில்தேவ் போல பல டெஸ்ட் போட்டிகளில் விளையாடியவர் அல்ல பாண்டியா, பல்வேறு சவாலான சூழல்களை அவர் இன்னமும் எதிர்கொள்ளவில்லை'' என்று கூறினார்.

வெளிநாடுகளில் நடக்கும் டெஸ்ட் போட்டிகளில் மிக சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களை எதிர்கொண்டு தனது நிலையை ஹர்திக் பாண்டியா உறுதி செய்ய வேண்டும் என்று விஜய் லோக்பாலி மேலும் கூறினார்.

இதுகுறித்து சடகோபன் ரமேஷ் கூறுகையில், '' நீண்ட காலமாக டெஸ்ட் மற்றும் ஒருநாள் ஆகிய இரு வடிவங்களிலும் கபில் தேவ் மிக சிறந்த ஆல்-ரவுண்டராக திகழ்ந்தார். பாண்டியா தற்போதுதான் சிறப்பாக விளையாடி வருகிறார். அதற்குள் இருவரையும் ஒப்பிடுவது தவறு'' என்று கூறினார்.

'பாண்டியா செல்ல வேண்டிய தொலைவு அதிகமுள்ளது'

தன் மீதான புதிய எதிர்பார்ப்புகளை ஹர்திக் பாண்டியா எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என்று ரமேஷ் குறிப்பிட்டார்.

படத்தின் காப்புரிமை AFP/GETTY IMAGES

ஹர்திக் பாண்டியா விளையாடி வரும் பரோடா அணியில் முன்பு விளையாடிய மோங்கியா கூறுகையில், ''ஹர்திக் பாண்டியா இதுவரை சிறப்பாக விளையாடி வருகிறார். அவர் இன்னமும் செல்ல வேண்டிய தொலைவு அதிகமுள்ளது. டெஸ்ட் போட்டிகளில் அதிகம் விளையாடி அவர் தன்னை நிரூபிப்பது அவசியம்'' என்று மோங்கியா தெரிவித்தார்.

கடந்த ஓர் ஆண்டாக சிறப்பாக விளையாடி வரும் இந்திய அணியும், ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ் போன்ற இளம் வீரர்களும் வெளிநாட்டு மண்ணில் சவாலான சூழலில் விளையாடும் விதத்தை வைத்துதான் அணியின் எதிர்காலத்தை நிர்ணயிக்க முடியும் மற்றும் முதலிடத்தை தக்கவைக்கமுடியும் என்பது கிரிக்கெட் நிபுணர்கள் கருத்தாக உள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :