டென்னிஸில் பெண்களும் ஆண்களைப் போன்றே தியாகங்களை செய்கிறார்கள்: ஆண்டி மர்ரி

  • 27 செப்டம்பர் 2017

ஆண்டி மர்ரி டென்னிஸ் விளையாடத் தொடங்கிய காலத்தில் ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய இரு பாலருக்கும் எதிராக விளையாடி பயிற்சி பெற்றார். கலப்பு இரட்டையர் போட்டிகளில் தரவரிசையில் உலகின் முன்னணியில் இருக்கும் டென்னிஸ் வீராங்கனைகள் சிலருடன் தொடர்ந்து விளையாடினார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption 2016 ஹாப்மன் கோப்பை போட்டியின்போது ஹெதர் வாட்சனுடன் ஆண்டி மர்ரி

விளையாட்டுகளில் பெண்கள் பற்றிய கருத்து, பாலினப் பாகுபாடு தொடர்பான ஒரு பத்திரிகையாளரின் கருத்தை சரிசெய்ய முற்பட்டது போன்றவற்றால் அவர் தலைப்புச் செய்திகளில் இடம்பெற்றார். டென்னிஸில் பெண்களுக்கான வாய்ப்பு பற்றி பேசுகிறார் ஆண்டி மர்ரி.

நான் எப்போதுமே பெண்களின் சமத்துவத்திற்கான பேச்சாளராக இருந்ததில்லை.

அமேலி மௌரெஸ்மோ (Amelie Mauresmo) உடன் பணிபுரிந்த அனுபவம், விளையாட்டுத் துறையில் இருக்கும் பெண்களைப் பற்றிய ஒரு சிறிய பார்வையை அளித்தது. டென்னிஸ் வீரர் ஒருவர் பெண் பயிற்சியாளரிடம் பயிற்சி பெறுவது வழக்கத்திற்கு மாறானது. இது தொடர்பான கேள்விகளை நான் அடிக்கடி எதிர்கொண்டேன்.

அமேலியுடன் பணிபுரிவது எனக்கு மிகவும் பிடித்தமானது, ஏனெனில் இதில் பாலினம் பற்றிய கேள்வியே இல்லை, பயிற்சியாளர் வேலைக்கு அவர் சரியான நபர். இருந்தாலும், பயிற்சியாளர் பணியில் ஈடுபட்டிருக்கும் ஆண்களைப் போன்று அவர் ஒருபோதும் நடத்தப்படவில்லை என்பது எனக்கு தெளிவாகத் தெரிந்தது, எனவே அதைப் பற்றி பேச வேண்டும் என்று நினைத்தேன்.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption ஆண்டிமர்ரி

அப்போதிருந்து, பெண்களின் சமத்துவத்தைப் பற்றி என்னிடம் கேட்கப்படுகிறது. என் மனதில் உள்ளதை பேசவில்லை என்றால், டென்னிஸில் முன்னணி வீராங்கனைகளின் முகத்தில் விழிப்பதே எனக்குக் கடினமாகிவிடும்.

முன்னணி டென்னிஸ் வீரராவதற்கு ஒருவர் மேற்கொள்ளும் முயற்சிகளை மக்கள் பெரும்பாலும் குறைத்தே மதிப்பிடுகின்றனர். அது ஆணோ பெண்ணோ இருபாலருக்கும் பொருந்தும்.

விளையாட்டுக்கு தேவையான உடல் பலம், மனோபலத்தை திடமாக்குவதற்காக உடற்பயிற்சி, விளையாட்டு பயிற்சி, பிசியோதெரபி, பயணங்கள் மேற்கொள்வது, போட்டிகளில் பங்கேற்பது, டென்னிஸ் போட்டிகளை பார்த்து ஆய்வு செய்வது, எதிரில் விளையாடுபவர்களை கணிப்பது என்று பல மணி நேரங்களை செலவிடவேண்டும். நிச்சயமாக அதற்காக பல தியாகங்களையும் செய்யவேண்டியிருக்கும்.

படத்தின் காப்புரிமை AFP/Getty Images
Image caption தனது முன்னாள் பயிற்சியாளர் அமேலி மௌரெஸ்மோவுடன் மர்ரி

போட்டிகளில் வெற்றிபெற ஒரு முன்னணி டென்னிஸ் வீரர் உத்வேகத்துடன் உறுதியுடன் மேற்கொள்ளும் பல்வேறு தியாகங்களை முன்னணி டென்னிஸ் வீராங்கனைகளும் செய்திருப்பார்கள் என்பதை அவர்களுடன் சிறிது நேரம் செலவழித்தவர்களால் புரிந்துகொள்ள முடியும்.

"வளர் இளம்பருவம் வரை சிறுவர்களும், சிறுமிகளும் ஒன்றாக விளையாட்டுகளில் ஈடுபடுவதை பற்றிய எனது கருத்தை பிபிசி கேட்டபோது 'இது மிகவும் நல்ல யோசனை' என்பதே என்னுடைய நேர்மையான நேரடியான பதிலாக இருந்தது".

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
விளையாட்டு பொம்மைகளில் பாலினம் பார்க்கப்படுகிறதா?

டென்னிஸில் இது பயனுள்ளதாகவே இருக்கும். டென்னிஸில் கலப்பு இரட்டையர்கள் போட்டிகளும் இருக்கிறதே? எனவே டென்னிஸ் விளையாடும் சிறுவர்களும், சிறுமிகளும் இந்த யோசனைக்கு பரிச்சயமானவர்கள்.

ஆஸ்திரேலியாவில் ஹாப்பன் கோப்பை மற்றும் ஒலிம்பிக் போட்டிகளில் ஹெதர் வாட்சன் மற்றும் லாரா ராப்சனுடன் கலப்பு இரட்டையர் போட்டியில் விளையாடும்போது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. இருந்தாலும், அனேகமாக என்னுடன் விளையாடியதைப் பற்றி அவர்களுடைய கருத்து மாறுபட்டிருக்கலாம்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption 2017 ஆஸ்திரேலியன் டென்னிஸ் பட்டப்போட்டியில் மகளிர் ஒற்றையர் பட்டம்வென்ற செரீனா வில்லியம்சுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வீனஸ்

டன்பிளேய்ன் நகரில் வளர்ந்த என்னை அங்கிருந்த டென்னிஸ் கிளப்பில் சிறுமிகளுக்கு எதிராக விளையாட, பயிற்சி பெற எனது பெற்றோர்கள் தொடர்ந்து ஊக்கம் கொடுத்தார்கள்.

பார்சிலோனாவில் பயிற்சி பெற்றபோது ஸ்வெட்லனா குஸ்னெட்சோவாவுடன் பயிற்சி செய்திருக்கிறேன்.

கலப்பு போட்டிகளில் விளையாடுவதால், நட்புகளை உருவாக்குவது, நம்பிக்கை ஏற்படுவது, பள்ளிகளுக்கும், கிளப்புகளுக்கும் பணத்தை சேமிப்பது உள்பட பல நன்மைகள் ஏற்படும்.

சிறு வயதில் பயிற்சி பெறுவதால், பந்து தொடர்பான திறன்கள், கைகளும் கண்களும் ஒருங்கிணைந்து பணியாற்றுவது, போட்டி மனப்பான்மையை உருவாக்குவது ஆகியன சாத்தியமாகும். இங்கு வலிமை, பலம் அல்லது வேகத்தைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. இந்தத் திறன்களை ஒரேசமயத்தில் சிறுவர்களுக்கும், சிறுமிகளுக்கும் பயிற்றுவிப்பது பயனளிக்கும் என்று நினைக்கிறேன்.

படத்தின் காப்புரிமை The Murray family
Image caption மூன்று வயதிலேயே டென்னிஸ் விளையாடத் தொடங்கிய சிறுவன் ஆண்டி மர்ரி (வலது) ஸ்விங் பால் விளையாடும்போது

விளையாட்டுத் துறையில் ஆர்வமுள்ள என் தாய், என்னை டென்னிஸில் மிகவும் ஊக்குவித்தார். அப்படிப்பட்ட பெண்ணை தாயாக கொண்ட நான், விளையாட்டுத்துறையில் சிறுவர்களைப் போலவே சிறுமிகளும் ஈடுபடவேண்டும் என்று உணர்வது மிகவும் இயல்பானதே.

இப்போது அவர்கள் அந்த அளவுக்கு ஊக்குவிக்கப்படுவது இல்லை என்பது எனக்கு தெரியும். பதின்பருவத்திற்கு வந்தபிறகு பல பெண்கள் விளையாட்டைக் கைவிடுவதையும் பார்க்கிறேன்.

என் அம்மா, மாற்றங்கள் ஏற்படுத்துவதில் ஆர்வமானவர். சிறுமிகளுக்கு டென்னிஸ் விளையாட்டின் அடிப்படைகளை கற்றுக் கொடுக்கும் 'மிஸ் ஹிட்ஸ்' என்ற திட்டத்தை செயல்படுத்திவருகிறார். தற்போது விளையாட்டுத் துறையில் பெண்களின் பங்கேற்பு விகிதம் ஆண்களுடன் ஒப்பிடுகையில் நான்கில் ஒரு பங்காகவே இருக்கிறது.

என் அம்மா மாற்றத்தை ஏற்படுத்தி வகவருகிறார் , ஆனால், இன்னமும் விளையாட்டுத் துறையில் பெண் பயிற்சியாளர்களின் தேவை மிகவும் அதிகமாக இருக்கிறது. உண்மையான தாக்கத்தை ஏற்படுத்த, உயர்மட்டங்களில் இருந்து ஆதரவு கிடைக்கவேண்டும்.

படத்தின் காப்புரிமை The Murray family
Image caption மர்ரி சிறு வயதில் சிறுவர் மற்றும் சிறுமிகளுக்கு எதிராக விளையாடி டென்னிஸ் பயிற்சி பெற்றிருக்கிறார்

விளையாட்டுத் துறையில் ஆண்களுக்கு கிடைப்பதைப் போன்ற வாய்ப்புகள் பெண்களுக்கு கிடைப்பது அரிதே. மேலும் பெண்களுக்கு விளையாட்டுத்துறையில் வேலைவாய்ப்புகள் அதிகமாக கிடைப்பதில்லை என்றாலும், தற்போது நிலைமையில் சற்றே முன்னேற்றம் தென்படுகிறது.

அமெரிக்க ஓபன் பட்டப்போட்டிகளில் டென்னிஸ் வீரர்களுக்கு இணையாக வீராங்கனைகளுக்கும் ஊதியம் வழங்கும் வழக்கம் தொடங்கியதிலிருந்து, கடந்த 35 ஆண்டுகளாக டென்னிஸ் துறை மிக நீண்ட தொலைவு பயணித்து வந்திருக்கிறது.

அனைத்து தரப்பினருக்கும் ஒன்றுபோல் ஊதியம் வழங்கப்படுவது உண்மையிலுமே சிறப்பானது. டென்னிஸைத் தவிர வேறு எந்த விளையாட்டிலும் இந்த நடைமுறை இல்லை. பிற விளையாட்டுகளுக்கு வழிகாட்டியாக இருக்கும் டென்னிஸில் நானும் ஒரு அங்கமாக இருப்பதில் பெருமைப்படுகிறேன். பிற விளையாட்டுகளில் இந்த நடைமுறை செயல்படுத்தப்படவேண்டும் என்பதற்கு டென்னிஸ் அழுத்தம் கொடுக்கமுடியும்.

பிரிட்டனில், விளையாட்டில் பெண்களுக்கு சிறப்பான தளத்தை அமைத்துக் கொடுப்பதில் முக்கிய பங்காற்றியிருக்கிறது லண்டன் ஒலிம்பிக்ஸ். இந்த தலைமுறையினருக்கு உத்வேகம் அளிப்பதில் புத்திசாலித்தனமான முன்மாதிரிகளாக விளங்கும் கொ ஜெஸ் எனீஸ் ஹில், நிகோலா ஆடம்ஸ் போன்ற சிலர் சாதாரண பின்புலத்தில் இருந்து வந்தவர்கள்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption தாய் ஜூடியுடன் ஆண்டி மர்ரி

பாரம்பரியமாக ஆண்களின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும் விளையாட்டுகளில் தற்போது குறிப்பிடத்தக்க முக்கியமான மாற்றங்களை காண்கிறோம். அமெச்சூர் கிரிக்கெட்டில் பெண்கள் ஈடுபடுவதற்கு தேவையான முயற்சிகளில் சர்வதேச கிரிக்கெட் சம்மேளனம் ஐசிசி தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இங்கிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணி உலக கோப்பை கிரிக்கெட் கோப்பையை வென்றது பெண்கள் கிரிக்கெட்டை பிரபலப்படுத்தியது என்று சொல்ல்லாம்.

கால்பந்து விளையாட்டும் முன்னோக்கி செல்கிறது, பெண்கள் கால்பந்தாட்டப் போட்டிகள் தற்போது தொலைகாட்சியில் ஒலிபரப்பு செய்யப்படுவது மகிழ்சியளிக்கிறது.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
tennis

ரக்பி விளையாட்டின் '15-a-side game' இல் இருந்து இங்கிலாந்து பெண்கள் அணியின் ஒப்பந்தத்தை ரக்பி கூட்டமைப்பு முடிவுக்கு கொண்டுவந்தது வெட்கக்கேடான விஷயம். பெண்கள் பரவலாக விளையாடும் ரக்பி விளையாட்டிற்கு இதுவொரு ஒரு பின்னடைவு என்றே கருதுகிறேன்.

உலக அளவில் விளையாட்டுத் துறையில் உயர்மட்டத்தில் பெண்களின் பங்களிப்பு அதிகமாக இருந்தால், மேலும் அதிக பெண்கள் விளையாட்டுத் துறையில் ஈடுபட ஊக்கம் அளிக்கும் என்று நம்புகிறேன்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption டேம் ஜெசிக்கா எனீஸ் ஹில், சிறந்த முன்மாதிரி

பாரம்பரியமாக ஆண் ஆதிக்கம் உள்ள விளையாட்டுகளில் அதிக அளவு முதலீடு செய்யப்பட்டிருக்கும் நிலையில், அதில் உயர் தகுதி கொண்ட பெண்கள் பங்கேற்பது அதிக அளவிலான கூட்டத்தையும், தொலைகாட்சி மற்றும் பிற ஊடகங்களையும் ஈர்க்கும்.

அண்மைகாலங்களில் கால்பந்து, ஹாக்கி, கிரிக்கெட் மற்றும் ரக்பி உட்பட பல விளையாட்டுகளில் இதை பார்க்கமுடியும். இதனால் விளையாட்டுகளை பற்றி அதிகம் தெரிந்துக் கொள்ளமுடிகிறது. மேலும் அதிக பெண்கள் விளையாட்டுகளில் உயர்நிலைக்கு செல்வதை பார்ப்பது பிற பெண்களுக்கு உத்வேகம் அளிக்கும்.

ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது எதிர்காலம் ஆக்கபூர்வமானதாக இருக்கும் என்று தெரிகிறது. இதற்கு முன்னர் இருந்ததைவிட அதிக அளவிலான பெண்கள் முன்மாதிரிகளாக இருக்கிறார்கள். இதற்கு முன் இருந்ததைவிட தற்போது விளையாட்டுத் துறையில் அதிக அளவிலான பெண் வர்ணனையாளர்களை பார்க்கமுடிகிறது. அதேபோல், விளையாட்டுத் துறையில் பெண்களுக்கான உரிமைகள் பற்றியும் அதிக அளவில் பேசப்படுகிறது.

விஷயங்கள் அனைத்தும் நேர்மறையான திசையை நோக்கி பயணிக்கிறது. விளையாட்டுக்கான தளம் அனைவருக்கும் ஒரே நிலையில் இருக்கும் எதிர்காலத்தை பார்ப்பதில் நான் ஆவலாக இருக்கிறேன்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :