ஓய்வு பெறும் நெஹ்ரா: உடல் தகுதி பிரச்சனைகளை தாண்டி நிகழ்த்திய அசாத்திய சாதனைகள்

  • சிவக்குமார் உலகநாதன்
  • பிபிசி தமிழ்

டெல்லியில் இன்று (புதன்கிழமை) இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடக்கும் முதல் டி20 போட்டியுடன் இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஆஷிஷ் நெஹ்ரா சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஒய்வு பெறுகிறார்.

பட மூலாதாரம், AFP

படக்குறிப்பு,

ஓய்வு பெறும் நெஹ்ரா

1999-ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமான நெஹ்ராவின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை 18 ஆண்டுகள் கழித்து இன்றோடு முடிவடைகிறது.

2003 மற்றும் 2011-ஆம் ஆண்டுகளில் நடந்த உலகக் கோப்பை போட்டிகளில் இந்திய அணியில் இடம்பெற்ற நெஹ்ரா, பல போட்டிகளில் அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.

டெஸ்ட் போட்டிகளில் 44 விக்கெட்டுகளையும், ஒருநாள் போட்டிகளில் 157 விக்கெட்டுகளையும், டி20 போட்டிகளில் 34 விக்கெட்டுகளையும் நெஹ்ரா எடுத்துள்ளார்.

'நெஹ்ரா ஒரு நம்பிக்கை நட்சத்திரம்'

நெஹ்ராவின் பந்துவீச்சு மற்றும் அவரது சாதனைகள் குறித்து முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும் , முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி தேர்வாளருமான மதன்லால் பிபிசி தமிழிடம் பேசினார்.

''நெஹ்ராவின் பந்துவீச்சு நுணுக்கங்கள் மற்றும் வேகம் ஆகியவை எப்போதுமே பாராட்டுக்களை பெற்றுள்ளன. ஆரம்பத்தில் இந்திய அணியில் விளையாட நாங்கள் அவரை தேர்ந்தெடுத்தபோதே அவர் அணிக்கு ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்தார்'' என்று மதன்லால் கூறினார்.

பட மூலாதாரம், Getty Images

டெஸ்ட் போட்டிகளை தவிர்த்து, ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20 போட்டிகளில் மட்டும் கவனம் செலுத்தி தனது உடல்தகுதி பிரச்சனைகளை மீறி நெஹ்ராவால் நீண்ட காலம் விளையாட முடிந்தது என்று மதன்லால் மேலும் தெரிவித்தார்.

''2003 உலக கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிராக 6 விக்கெட்டுகளை வீழ்த்திய நெஹ்ரா அணிக்கு வெற்றி தேடித் தந்தார். 2011 உலக கோப்பையிலும் அவரது பந்துவீச்சு சிறப்பாக இருந்தது. அதே போல் பல டெஸ்ட் போட்டிகளிலும் அவர் சிறப்பாக பந்துவீசியுள்ளார்'' என்று மதன்லால் மேலும் கூறினார்.

மட்டைவீச்சாளர்களை அச்சுறுத்திய நெஹ்ரா - ஜாஹீர் இணை

''ஒரு நல்ல இடது கை வேகப்பந்துவீச்சாளருக்கான தேடலில் இந்தியா ஈடுபட்டபோது அணியில் நெஹ்ரா முதன்முதலில் இடம்பெற்றார்.ஜாஹீர் கான் இந்திய அணியில் இடம்பெறுவதற்கு 2 ஆண்டுகளுக்கு முன்பாகவே இந்தியாவுக்காக நெஹ்ரா விளையாடி வருகிறார்'' என்று நெஹ்ரா குறித்த நினைவுகளை மூத்த பத்திரிக்கையாளரான விஜய் லோக்பாலி பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

உடல் தகுதி பிரச்சனைகளை தாண்டி அசாத்திய சாதனைகள் நிகழ்த்திய நெஹ்ரா

1999-ஆம் ஆண்டு முதல் இந்தியாவுக்காக விளையாடி வரும் நெஹ்ரா, பல போட்டிகளில் இந்தியாவுக்கு வெற்றியை தேடித் தந்துள்ளார். டர்பனில் இங்கிலாந்து அணிக்கு எதிராக 2003-ஆம் ஆண்டு நடந்த போட்டியில் நெஹ்ராவின் மிக சிறப்பான பந்துவீச்சை யாரும் மறக்க இயலாது என்று விஜய் லோக்பாலி மேலும் கூறினார்.

நெஹ்ரா மற்றும் ஜாஹீர் ஆகிய இருவரும் இணைந்து பல போட்டிகளில் சிறப்பாக பந்துவீசியுள்ளனர். 2011 உலக கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான அரையிறுதி போட்டியில், நெஹ்ராவின் சிறப்பான பந்துவீச்சு இந்திய அணிக்கு வெற்றியை தேடித்தந்தது என்று விஜய் லோக்பாலி மேலும் கூறினார்.

நெஹ்ராவின் அசாத்திய சாதனை

''சிறந்த ஃபீல்டர் இல்லை, அதே போல் உடல் தகுதி குறித்த பிரச்சனைகளை அதிகம் சந்தித்தவர் என்பது போன்ற பல விமர்சனங்கள் நெஹ்ரா மீது வைக்கப்பட்டாலும், தான் விளையாடிய அனைத்து அணிகளின் கேப்டன்களுக்கும் விருப்பமானவராகவே நெஹ்ரா திகழ்ந்தார்'' என்று அவர் மேலும் கூறினார்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

சிறந்த இடது கை வேகப்பந்துவீச்சாளராக ஜொலித்த நெஹ்ரா

டெஸ்ட் போட்டிகளில் நெஹ்ரா அதிகம் விளையாடதது இந்தியாவுக்கு இழப்பு என்று குறிப்பிட்ட விஜய் லோக்பாலி, ''தான் செய்துகொண்ட பல அறுவை சிகிச்சைகளையும் தாண்டி 18 ஆண்டுகள் சர்வதேச கிரிக்கெட்டில் நெஹ்ரா விளையாடியதே மிகப் பெரிய சாதனை'' என்று தெரிவித்தார்.

''அண்மைக்காலமாக இளம் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு நெஹ்ரா அளித்து வரும் ஆலோசனைகள் மற்றும் ஊக்கம் மிகவும் பாராட்டுக்கு உரியது'' என்று அவர் குறிப்பிட்டார்.

1999-ஆம் ஆண்டு, இந்திய அணியில் முதன்முதலில் நெஹ்ரா விளையாடியபோது உடன் விளையாடியவர்கள் அனைவரும் ஏற்கனவே ஒய்வு பெற்றுவிட்ட நிலையில், தற்போது வரை சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி வரும் நெஹ்ராவின் சாதனைகள் மற்றும் போராட்டம் போற்றுதலுக்குரியது என்பது கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களின் கருத்தாக உள்ளது.

பட மூலாதாரம், Getty Images

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :