RR Vs SRH: ஆர்ச்சர் பந்தில் ஹாட்ரிக் பவுண்டரி: யார் இந்த விஜய் சங்கர்?

  • சிவக்குமார் உலகநாதன்
  • பிபிசி தமிழ்
விஜய் சங்கர்

பட மூலாதாரம், BCCI/IPL

ஐபிஎல் தொடரில் நேற்றை போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ஐதராபாத் சன் ரைஸர்ஸ் அணிகளும் மோதின.

நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற சன் ரைஸர்ஸ் அணி சேஸிங்கை தேர்வு செய்து வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் ஐந்தாவது இடத்திற்கு முன்னேறி சென்றுள்ளது.

இதில் தமிழக வீரர் விஜய் சங்கர் ஆர்ச்சர் வீசிய பந்தில் ஹாட்ரிக் பவுண்டரிகளை விளாசி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

விஜய் சங்கர் பந்துவீச்சின்போதும் 3 ஓவர்களில் 15 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து முக்கிய கட்டத்தில் ஜோஸ் பட்லரின் விக்கெட்டையும் வீழ்த்தினார்.

முதல் மூன்று ஓவர்களில் வார்னர் மற்றும் பேர்ஸ்டோவ் விக்கெட்டுகளை இழந்த சன் ரைஸர்ஸ் அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றது மணிஷ் பாண்டே மற்றும் விஜய் சங்கர் இணை.

நிதானமாக விளையாடி ரன்களை சேர்தத்தில் மனிஷ் பாண்டே 8 சிக்ஸர்களை அடித்து 83 ரன்களை எடுத்தார்.

தொடக்கத்தில் பெரிதும் அதிரடி காட்டாத விஜய் சங்கர் 16 ஆவது ஓவரில் ஆர்ச்சர் வீசிய பந்தில் ஹாட்ரிக் பவுண்டரிகளை வீசிய அரை சதம் கண்டார்.

இந்நிலையில் விஜய் சங்கர் உலகக் கோப்பை போட்டிகளுக்காக இந்திய அணிக்காக தேர்வு ஆகியபோது பிபிசி தமிழிடம் பகிர்ந்து கொண்ட கருத்துக்களை இங்கே வழங்குகிறோம்.

யார் இந்த விஜய் சங்கர்?

பட மூலாதாரம், FACEBOOK

தமிழக ரஞ்சி கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டரான 26 வயதாகும் விஜய் சங்கர், திருநெல்வேலியில் பிறந்தவர். சிறுவயது முதல் அவர் சென்னையில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

"சிறுவயதில் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்தபோதே இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாட வேண்டும் என்பதே எனது கனவாக இருந்தது'' என்று தெரிவித்தார்.

வீட்டு மொட்டை மாடியில் கிரிக்கெட் பயிற்சி

இந்திய அணிக்கு விளையாட தேர்ந்தெடுக்கப்பட்டது ஒரு மகிழ்ச்சியான மற்றும் பெருமையான தருணம் என்று கூறிய விஜய் சங்கர், ஐபிஎல் அணிக்காக முன்னர் தேர்வானது மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால், இந்திய அணியில் விளையாட தேர்வாகியுள்ளது குறித்து விவரிக்க வார்த்தைகள் இல்லை என்று அவர் கூறினார்.

''என் குடும்பம்தான் சிறு வயதில் இருந்தே என்னை கிரிக்கெட்டில் ஊக்குவித்தது. எங்கள் வீட்டு மொட்டைமாடியில் நான் நெட் பிராக்டிஸ் செய்வதற்கு என் பெற்றோர் வசதி ஏற்படுத்தி தந்தார்கள்'' என்று விஜய் சங்கர் மேலும் கூறினார்.

தனது பயிற்சியாளர் எஸ் பாலாஜியும் தனது கிரிக்கெட் வளர்ச்சிக்கு பெரும் உதவியாக இருப்பதாக குறிப்பிட்ட விஜய் சங்கர், இந்திய அணியில் இடம்பெற வேண்டும் என்பது தனது கனவின் முதல்படிதான் என்றும் அணியில் சிறப்பாக பங்களிப்பதும், நீண்ட காலம் நீடிப்பதும்தான் தனது மிகப்பெரிய கனவு என்று மேலும் தெரிவித்தார்.

'அணிக்கு தேர்வானது எதிர்பாராத இன்ப அதிர்ச்சி'

விஜய் சங்கர் இந்திய அணியில் விளையாட தேர்வானது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவரது தந்தை ஹரிஹரன் சங்கர், ''எங்கள் குடும்பத்தின் ஒட்டுமொத்த கனவும், விஜய் இந்திய அணியில் இடம்பெறுவதும், அவர் மேலும் சிறப்பாக கிரிக்கெட்டில் பங்களிப்பதும்தான்'' என்று கூறினார்.

விஜய் இந்திய அணியில் விளையாட தேர்வான செய்தி, தனது குடும்பத்தினர் அனைவருக்கும் எதிர்பாராத ஒரு செய்தி என்று குறிப்பிட்ட ஹரிஹரன் சங்கர், ''நானும் முன்பு கிரிக்கெட் விளையாடியுள்ளேன். அக்காலகட்டத்தில் பொருளாதார வசதிகள் இல்லாததால் என்னால் தொடர்ந்து விளையாட முடியவில்லை'' என்று நினைவுகூர்ந்தார்.

''அதே நேரத்தில், விஜய் பள்ளியில் படிக்கும்போது கிரிக்கெட் அகாடமியில் சேர வேண்டும் என்று கூறியவுடன், நான் உடனே அதற்கு ஏற்பாடு செய்தேன்'' என்று தெரிவித்தார்.

படக்குறிப்பு,

இந்திய அணியில் விளையாட தேர்வாகியுள்ள விஜய் சங்கர்

சிறுவயதில் படிப்பு மற்றும் விளையாட்டு ஆகிய இரண்டிலும் விஜய் நன்றாக செயல்பட்டதாக தெரிவித்த ஹரிஹரன் சங்கர், ''விஜய்க்கு 17 வயதானபோது கிரிக்கெட்டா ,படிப்பா எதை தொடர விருப்பம் என்று கேட்டேன். அதற்கு விஜய் கிரிக்கெட்டை தொடரவே விருப்பம் என்று தெரிவித்தார்'' என்று நினைவுகூர்ந்தார்.

விஜய்க்கு உதவும் வகையில் எங்களால் முடிந்த அளவு உதவிகள் செய்து தந்தோம் என்று குறிப்பிட்ட அவரது தந்தை, ''பேட்டிங், பந்துவீச்சு ஆகிய இரண்டிலும் சிறப்பாக செயல்படும் விஜய், ஃபீல்டிங்கிலும் நன்றாக செயல்படக்கூடியவர்'' என்று கூறினார்.

சுழல் பந்துவீச்சாளர் மித வேகப்பந்துவீச்சுக்கு மாறியது ஏன்?

விஜய் சங்கருக்கு 12 ஆண்டுகள் கிரிக்கெட் பயிற்சி அளித்துவரும் அவரது பயிற்சியாளர் எஸ் பாலாஜி, விஜய் சங்கரின் கிரிக்கெட் பயணம் குறித்த நினைவுகளை பிபிசி தமிழுடன் பகிர்ந்து கொண்டார்.

''உன்னிப்பாக ஆட்ட நுணுக்கங்களை கணிக்கும் ஆர்வம் மிக்க விஜய் சங்கர், ஆரம்பத்தில் சுழல் பந்துவீச்சாளராக இருந்தார். பின்னர், எனது ஆலோசனையின்பேரில் அவர் மித வேகப்பந்துவீச்சுக்கு மாறினார். மற்றவர்களுடன் தனது பேட்டிங், பந்துவீச்சு குறித்து விவாதிப்பார் விஜய். பின்னர் தேவையான மாற்றங்களை ஆலோசித்து இருவரும் மேற்கொள்வோம்'' என்று பாலாஜி தெரிவித்தார்.

படக்குறிப்பு,

பயிற்சியாளர் பாலாஜி

இந்தியா ஏ சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது பயிற்சியாளரும், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரருமான ராகுல் டிராவிட்டை தனது திறமையால் பெரிதும் ஈர்த்தார் விஜய். இவரது ஆட்ட நுணுக்கம் மற்றும் திறமைகளை தேர்வாளர்களிடம் டிராவிட் எடுத்துக் கூறியிருக்கலாம் என்று பாலாஜி குறிப்பிட்டார்.

''விஜயின் கிரிக்கெட் பயணத்தில் இது ஆரம்பம்தான். கடின உழைப்பு மற்றும் திறமையால் அவர் நீண்டதூரம் பயணிக்கமுடியும்'' என்று பாலாஜி மேலும் தெரிவித்தார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :