இலங்கையுடனான டெஸ்ட் தொடரை வென்றது இந்தியா - 5 சுவாரஸ்யங்கள்

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி படத்தின் காப்புரிமை Getty Images

இலங்கை அணி இந்திய மண்ணில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா 1 -0 என்ற கணக்கில் வென்றுள்ளது.

டெல்லியில் நடந்த கடைசி டெஸ்ட் போட்டியில் தனஞ்சய டி சில்வா, ரோஷன் சில்வா ஆகியோரின் அபாரமான ஆட்டத்தால் இலங்கை அணி போட்டியை சமன் செய்தது. இந்த தொடரில் நடந்த சுவாரஸ்யமான ஐந்து முக்கிய தகவல்களை வாசகர்களுக்காக தொகுத்துத் தருகிறோம்.

1. இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்றதன் மூலம் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி கடந்த ஜூலை 2015 முதல் தொடர்ச்சியாக ஒன்பது டெஸ்ட் தொடர்களில் வென்று சரித்திர சாதனை படைத்துள்ளது. இந்திய அணி தொடர்ச்சியாக 9 முறை தொடரை வெல்வது இதுவே முதல் முறை.

2. இந்தியாவுக்கு எதிராக இந்திய மண்ணில் நான்காவது இன்னிங்ஸில் அதிக ரன்கள் குவித்த அணி என்ற பெருமையை இலங்கை பெற்றுள்ளது. இதற்கு முன்னதாக கடந்த 1987-ல் டெல்லியில் நடந்த டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி நான்காவது இன்னிங்சில் 276 ரன்கள் குவித்து போட்டியையும் வென்றது.

படத்தின் காப்புரிமை Getty Images

3. டெஸ்ட் அரங்கில் கேப்டனாக அதிக இரட்டைச் சதம் விளாசியவர் என்ற சாதனையை படைத்தார் விராட் கோலி. இதற்கு முன்னதாக வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் பிரையன் லாரா ஐந்து இரட்டைச் சதம் அடித்ததே சாதனையாக இருந்தது. கோலி ஆறு இரட்டைச் சதம் விளாசியிருக்கிறார்.

4. மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் ஐந்து இன்னிங்ஸ்களில் பேட்டிங் செய்த அஜின்க்யா ரஹானே ஒட்டுமொத்தமாக 17 ரன்கள் எடுத்துள்ளார். இதில் ஒரு இன்னிங்ஸில் அவர் எடுத்த அதிகபட்சம் பத்து ரன்கள்.

படத்தின் காப்புரிமை SKY SPORTS

5. இந்த டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் விராட் கோலி, சந்திமால், முரளி விஜய் ஆகியோர் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளனர். அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் பட்டியலில் அஷ்வின், ஜடேஜா, ஷமி என இந்திய வீரர்களே முதல் மூன்று இடங்களையும் பிடித்துள்ளனர்.

வலுவான நிலையில் இருந்த இந்திய அணி தொடரை வென்றாலும், கடைசி டெஸ்ட் போட்டியில் கடைசி நாளில் வெறும் இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தியது. இதனால் டெல்லி டெஸ்ட் போட்டியை வெல்லும் வாய்ப்பு கை நழுவியது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்