இலங்கை வீரர்களை மிரட்டிய காற்று மாசு: டெல்லியில் கிரிக்கெட் போட்டியை நடத்தியது சரியா?

சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் பல்வேறு காரணங்களுக்காக இடைநிறுத்தப்பட்டுள்ளன. பொதுவாக மழை காரணமாக இடைநிறுத்தப்படுவதை நாம் அதிகமாக பார்த்திருந்தாலும். பனி, மின்னல், மற்றும் சூரிய கிரகணத்தால் இடைநிறுத்தப்பட்ட நிகழ்வுகள் உள்ளன.

படத்தின் காப்புரிமை SKY SPORTS

ஆனால், டிசம்பர் 4ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று இந்தியத் தலைநகர் டெல்லியில் நடைபெற்ற இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையிலான 3-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 2-ஆவது நாள் ஆட்டம் மாசுபாடு காரணமாக இடைநிறுத்தப்பட்டது.

காற்று மாசுபாடு காரணமாக ஒரு சர்வதேச கிரிக்கெட் போட்டி இடைநிறுத்தப்படுவது இதுவே முதல்முறை. உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரையின்படி பார்த்தால், ஞாயிற்றுக்கிழமையன்று காற்று மாசு மிகவும் மோசமாக இருந்துள்ளது.

மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இடையூறு ஏற்படுத்திய காற்று மாசுபாட்டை சமாளிக்க, இலங்கை வீரர்கள் முகமூடி அணிந்து விளையாடினர்.

காற்று மாசு பற்றி இலங்கை கிரிக்கெட் வீரர்கள் புகார் அளித்ததுடன், மூன்றுமுறை போட்டி நிறுத்தப்பட்டது.

இதுபற்றி பிபிசி தமிழிடம் பேசிய மூத்த பத்திரிக்கையாளர் விஜய் லோக்பாலி, ''விளையாட்டு இடைநிறுத்தப்பட்டது ஆரோக்கியமற்ற காற்று மாசுவால் ஏற்பட்டதாகும்'' என்று தெரிவித்தார்.

''இந்த ஆட்டத்தின்போது, ஆரோக்கியமற்ற காற்று மாசு குறித்து இலங்கை வீரர்கள் புகார் அளித்தனர். முகமூடி அணிந்து விளையாடினர்'' என்று அவர் மேலும் கூறினார்.

படத்தின் காப்புரிமை Getty Images

கடந்த சில நாட்களாக இந்தப் பிரச்சனையை டெல்லி சந்தித்து வருகிறது. இந்த பிரச்சனையால் நவம்பர் மாதத்தில் பள்ளிகள் மூடப்பட்டன.

"இலங்கை வீரர்கள் எவ்வாறு உணர்ந்தார்கள் என்று பார்க்க வேண்டியது முக்கியம். இத்தகைய காற்று மாசுபாட்டுக்கு அவர்கள் பழக்கப்பட்டவர்கள் அல்ல" என்று விஜய் லோக்பாலி குறிப்பிட்டார்.

''விளையாட்டு போட்டியின் காற்று மாசுபாட்டை சமாளிப்பதற்கு இதுவொரு பாடம். எதிர்காலத்தில் நவம்பர் மற்றும் டிசம்பரில் மாதங்களில் டெல்லியில் கிரிக்கெட் போட்டிகள் நடத்த திட்டமிடாமல் இருப்பதற்கு உதவும்'' என்று லோக்பாலி கூறினார்.

படத்தின் காப்புரிமை VIJAY LOKPALLY
Image caption விஜய் லோக்பாலி

இவ்வாறு ஆட்டத்தை இடைநிறுத்தி, இந்திய வீரர்கள் அதிக ரன்கள் எடுப்பதை மட்டுப்படுத்தும் நோக்கில் இலங்கை வீரர்கள் செயல்பட்டார்களா என்று கேட்டதற்கு, "அவ்வாறு இருக்க வாய்ப்பேயில்லை, ஊடகங்களிடம் பேசிய இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி காற்று மாசுபாடு இருந்ததை ஒப்புக் கொண்டுள்ளார். இதற்கு இந்திய வீர்ர்கள் பழக்கப்பட்டவர்கள். டெல்லியை சேர்ந்த ஷிகர் தவான் காற்று மாசுபாடு ஒரு பிரச்சனை என்பதை ஏற்றுக்கொண்டுள்ளார்" என்று விஜய் லோக்பாலி சுட்டிக்காட்டினார்.

படத்தின் காப்புரிமை TWITTER/ICC

மேலும், இலங்கை வீரர்களுக்கு தோல்வி பயம் என்று ஏளனம் செய்த இந்திய ரசிகர்கள் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டபோது, "கிரிக்கெட் ரசிகர்களை இந்திய கிரிக்கெட் விளையாட்டின் வேர்கள். இந்திய ரசிகர்கள் இந்தியாவுக்குதான் ஆதரவு தெரிவிப்பார்கள். கடைசி நாள் ஆட்டத்தில் அவர்கள் சிறப்பாக விளையாடினார்கள்" என்று தெரிவித்தார்.

இதுபற்றி முன்னாள் கிரிக்கெட் வீரர் சடகோபன் ரமேஷிடம் கேட்டபோது, ''இலங்கை வீர்ர்கள் மாசுபாடு பற்றி புகார் தெரிவித்திருந்தனர். கிரிக்கெட்டில் ஓடியாடி விளையாடும்போது, அதிக சக்தி தேவைப்படும். மூச்சு இரைக்கும். மைதானத்தில் இருக்கின்ற நடுவர்கள்தான் இதுபற்றி முடிவெடுக்க வேண்டும்'' என்று தெரிவித்தார்.

படத்தின் காப்புரிமை MAANVINARCISA

முதல்முறையாக டெல்லியில் இத்தகைய நிலை ஏற்பட்டுள்ளதால், நிர்வாக ரீதியாக திட்டமிடுவதற்கு உதவியாக இருக்கும் என்று அவர் கூறினார்.

இந்தியாவின் ரன் குவிப்பை மட்டுப்படுத்துவதற்காக இலங்கை வீர்ர்கள் இவ்வாறு செய்ததாக தெரியவில்லை. இலங்கை வீராகளில் இருவர் சதம் அடித்துள்ளனர். அவர்கள் மட்டைபிடித்து ஆடும்போது இந்த புகார் எழவில்லை என்று ரமேஷ் தெரிவித்தார்.

''ரசிகர்களுக்கு, கிரிக்கெட் விளையாட்டு ஒரு மதம். எனவே ரசிகர்கள் உணர்ச்சிவசப்பட்டு சொல்வது எதையும் நம்மால் தடுக்க முடியாது. இலங்கை வீரர்கள் யாரும் விளையாட்டை நிறுத்த வேண்டுமென கோரவில்லை'' என்று ரமேஷ் கூறினார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :