'இந்திய பெருஞ்சுவர்' ராகுல் டிராவிட் வாழ்க்கையின் சுவாரஸ்ய பக்கங்கள்! #HappyBirthdayDravid

  • சிவக்குமார் உலகநாதன்
  • பிபிசி தமிழ்
தன்னை சூப்பர் ஸ்டாராக கருதாத டிராவிட்

பட மூலாதாரம், Getty Images

1990களின் பிற்பகுதியிலும், 2000 முதல் 2011-ஆம் ஆண்டு வரையிலும், இந்திய கிரிக்கெட் அணி விளையாடிய போட்டிகளில் அணி தடுமாறிக் கொண்டிருக்கும்போது, பெரும்பாலானோர் கேட்கும் ஒரு முக்கிய கேள்வி, ராகுல் டிராவிட் இன்னமும் களத்தில் உள்ளாரா என்பதுதான்.

இந்திய அணியில் பல நட்சத்திர பேட்ஸ்மேன்கள், அதிரடி ஆட்டக்காரர்கள் இருந்தபோதிலும், இறுதிவரை ஆட்டமிழக்காமல் அணிக்கு வெற்றி தேடித்தருவது, டெஸ்ட் போட்டிகளில் தோல்விகளை தவிர்ப்பது ஆகியவை ராகுல் டிராவிட்டால் மட்டுமே சாத்தியம் என்ற திடமான நம்பிக்கையே இந்த கேள்வியின் பின்னணியாக இருந்தது.

டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகள் ஆகிய இரு வடிவங்களிலும் 10,000 ரன்களை கடந்தவர், டெஸ்ட் போட்டிகளில் அதிக அளவு கேட்ச்கள் (210) பிடித்தவர் என்று பல சாதனைகள் டிராவிட் வசம் உள்ளன.

தனது அற்புத தடுப்பாட்டத்தால் 'வால்' (தடுப்புச் சுவர்) என்று கிரிக்கெட் ஆர்வலர்கள் மற்றும் விமர்சகர்களால் அழைக்கப்படும் முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டனான ராகுல் டிராவிட், இன்று (வெள்ளிக்கிழமை) தனது 46-ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

ராகுல் டிராவிட்டின் ஆரம்ப நாட்கள் குறித்து பிபிசி தமிழிடம் நினைவுகூர்ந்த மூத்த பத்திரிக்கையாளரான விஜய் லோக்பாலி ''ஆரம்பத்தில் ஒரு நல்ல தடுப்பாளராக மட்டும் அறியப்பட்ட ராகுல் டிராவிட், தனது பேட்டிங் முறையில் பல மாற்றங்கள் செய்து ஒருநாள் போட்டிகளுக்கான உலக கோப்பையில் சிறந்த பங்களிப்பை அளித்தார். அணிக்காக பல போட்டிகளில் அவர் விக்கெட் கீப்பிங் பணியையும் மேற்கொண்டது மறக்கமுடியாது'' என்று கூறினார்.

பட மூலாதாரம், IAN KINGTON

'அணியின் நலனே எப்போதும் முக்கியம்'

''பலமுறைகள் தனது இயற்கையான பேட்டிங் முறையை மாற்றி அணிக்காக தியாகம் செய்தவர் டிராவிட். அவரது பல சிறப்பு அம்சங்களால் எந்த கேப்டனும் அவரை தனது அணியில் வைத்துக்கொள்ள விரும்புவார்'' என்று விஜய் லோக்பாலி தெரிவித்தார்.

இந்திய கிரிக்கெட் அணிக்காக ராகுல் டிராவிட் பல சாதனைகளும், தியாகங்களும் செய்திருந்தாலும், அவருக்கு கிடைக்க வேண்டிய அங்கீகாரம் கிடைத்ததா என்று கேட்டதற்கு ''இல்லை என்றுதான் கூற வேண்டும். ஓய்வுபெறும் முன்பு அவருக்கு முறையான பிரியாவிடை போட்டி கூட கிடைக்கவில்லை'' என்று அவர் கூறினார்.

''அவர் அதிரடி ஆட்டக்காரர் இல்லை என்று கருதப்பட்டதால் பல சமயங்களில் அவருக்கு கிடைக்க வேண்டிய அங்கீகாரங்கள் கிடைக்கவில்லை. ஆனால், அணியின் நலனை மட்டுமே முக்கியமாக கருதி விளையாடிய ஒரு தன்னலமற்ற வீரர் ராகுல்'' என்று அவர் மேலும் கூறினார்.

பட மூலாதாரம், AFP

டிராவிட் கேப்டன்ஷிப் மீதான விமர்சனம் ஏன்?

ராகுல் டிராவிட்டின் தலைமை பண்பு பற்றி பேசிய விஜய் லோக்பாலி கூறுகையில், ''ஆரம்பத்தில் வெளிநாட்டு பயணம் மற்றும் உள்நாட்டு தொடர்களில் ராகுலின் கேப்டன்ஷிப் சிறப்பாக இருந்ததாக கூறப்பட்டது. ஆனால், 2007 உலக கோப்பையில் இந்தியா தோல்வியுற்றவுடன் அவர் மீது எழுந்த குற்றச்சாட்டுகள் சரியல்ல'' என்று குறிப்பிட்டார்.

அணியின் தோல்விக்கு கேப்டன் மட்டுமே காரணம் என்று கூறமுடியாது என்று கூறிய அவர், பல போட்டிகளில் துணை கேப்டனாக டிராவிட் செயலாற்றினார் என்பதை மறக்கமுடியாது என்றும் தெரிவித்தார்.

எதிர்காலத்தில் இந்திய அணியின் பயிற்சியாளராக ராகுல் நியமிக்கப்படுவாரா என்று கேட்டதற்கு, ''அவ்வாறு நியமிக்கப்பட்டால் அவர் சிறப்பாக செயல்படுவர். பல இளம் வீரர்களுக்கு ரோல்மாடலாக செயல்படும் அவர் அணியை நன்கு வழிநடத்துவார்'' என்று விஜய் லோக்பாலி குறிப்பிட்டார்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

சக சாதனையாளர்களுடன் ராகுல் டிராவிட்

ரோலர்கோஸ்டரில் ஏற அஞ்சிய டிராவிட்

ராகுல் டிராவிட் உடன் கர்நாடகா மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகளில் இணைத்து நீண்ட காலம் விளையாடிய வெங்கடேஷ் பிரசாத் பிபிசி தமிழிடம் பேசுகையில் , ''மிகவும் தீவிர கிரிக்கெட் ஆர்வலரான டிராவிட், என்றும் தனது அணிக்காகவே விளையாடினார். அவரது முதல் டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடந்தது. சாதிக்க வேண்டும் என்ற உணர்வு அப்போதே அவரிடம் வெளிப்பட்டது,'' என்று தெரிவித்தார்.

''பொதுவாக அமைதியாக காணப்படும் டிராவிட், மற்றவர்கள் பேசுவதை உன்னிப்பாக கவனிப்பார். பேட்டிங் செய்யும்முன் நீண்ட பயிற்சி மேற்கொள்வார்'' என்று பிரசாத் தெரிவித்தார்.

''ஒரு வெளிநாட்டு பயணத்தின்போது ரோலர்கோஸ்டர் சாகச பயணத்தில் பங்கேற்க டிராவிட் அச்சம் கொண்டார். ஆலன் டொனால்ட் போன்ற வேகப்பந்துவீச்சாளர்களை சந்திப்பதுபோல் எண்ணிக் கொள்ளுங்கள் என்று கூறி அவரை சம்மதிக்க வைத்தேன்'' என்று வெங்கடேஷ் பிரசாத் நகைச்சுவையாக குறிப்பிட்டார்.

பட மூலாதாரம், TWITTER

படக்குறிப்பு,

குடும்பத்தினருடன் ராகுல் டிராவிட்

19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியின் பயிற்சியாளராக தற்போது செயல்பட்டு வரும் ராகுல் டிராவிட், இந்திய அரசால் வழங்கப்படும் பத்மஸ்ரீ மற்றும் பத்மபூஷன் போன்ற உயரிய விருதுகளை பெற்றுள்ளார்.

டிராவிட்டுடன் இளம் வயதில் விளையாடிவரும், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரருமான சுஜித் சோமசுந்தர் டிராவிட் குறித்து நினைவலைகளை நம்முடன் பகிர்ந்து கொண்டார்.

'' 15 மற்றும் 17 வயதுகுட்பட்டவர்களுக்கான கர்நாடகா மாநில அணிகளில் நானும், டிராவிடும் இணைந்து விளையாடியுள்ளோம். ஆரம்பம் முதலே அமைதியன சுபாவம் கொண்ட அவர், எப்போதும் கிரிக்கெட் ஆட்ட நுணுக்கங்கள் பற்றியே அவர் தீவிரமாக சிந்தித்துக் கொண்டிருப்பார்'' என்று ஆரம்ப நாட்களை நினைவு கூர்ந்தார்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

ஐவர் அணியில் மத்தியில் டிராவிட்

கன்னடம் அவருக்கு தாய்மொழி இல்லையென்பதால், டிராவிட்டுக்கு அந்த மொழியில் சரளமாக உரையாட வராது. நாளடைவில் அவர் சற்று கன்னடத்தில் உரையாட கற்றுக்கொண்டார் என்று சுஜித் சோமசுந்தர் குறிப்பிட்டார்.

''ஒரு சிறுவனாக நான் கிரிக்கெட் விளையாட கற்றுக் கொண்டபோது, என்னை மிகவும் கவர்ந்த வீரர் டிராவிட். பின்னர், 2011-இல் அவருடன் உரையாட எனக்கு வாய்ப்பு கிடைத்தது.. கிரிக்கெட் பற்றி பல விஷயங்களை அவருடன் எளிதாக ஆலோசிக்க முடியும் '' என்று டிராவிட் குறித்து இந்திய மற்றும் தமிழக கிரிக்கெட் வீரர் விஜய்சங்கர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

டிராவிட்டின் சிறந்த இன்னிங்ஸ் எது?

''2003-ஆண்டு நடந்த அடிலெய்ட் டெஸ்ட் போட்டியில் அணிக்கு வெற்றி தேடித்தந்த டிராவிட்டின் பேட்டிங் எனக்கு மிகவும் பிடித்தமான இன்னிங்க்ஸ்'' என்று இந்திய மற்றும் தமிழக கிரிக்கெட் வீரர் விஜய்சங்கர் தெரிவித்தார்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

கிரேக் சேப்பலுடன் ராகுல் டிராவிட்

''கொல்கத்தா டெஸ்ட் போட்டியில் விவிஎஸ் லக்ஷ்மனுடன் இணைந்து டிராவிட் ஆடிய இன்னிங்ஸ் மிக சிறப்பான இன்னிங்க்ஸ். இங்கிலாந்தில், 2011-ஆம் ஆண்டில் அனைத்து இந்திய வீரர்களும் தடுமாறி கொண்டிருந்த போது டிராவிட் மூன்று சதங்கள் எடுத்தது மறக்கமுடியாத ஒன்று'' என்று விஜய் லோக்பாலி தெரிவித்தார்.

''டிராவிட் ஆடிய பல சிறப்பான போட்டிகள் இருந்தாலும், அவர் தனது தொடக்க டெஸ்ட் போட்டியில் லார்ட்ஸ் மைத்தனத்தில் பேட்டிங் செய்ய கடினமான சூழலில் 95 ரன்கள் எடுத்தது அற்புதமான பங்களிப்பு'' என்று வெங்கடேஷ் பிரசாத் குறிப்பிட்டார்.

1999-ஆம் ஆண்டில் நியூஸிலாந்தில் டிராவிட்டின் பல டெஸ்ட் மற்றும் ஒருநாளில் போட்டி இன்னிங்க்ஸ்கள் அவருக்கு பெரும் புகழை பெற்றுத்தந்தது.

1999 உலக கோப்பையில் அதிக அளவு ரன்கள் குவித்தவர் என்று பெருமை ராகுல் டிராவிட் வசம் உள்ளது.

இவற்றை தவிர பல போட்டிகளில் சச்சின், கங்குலி, லக்ஷ்மன், சேவாக், யுவராஜ் சிங் என பல வீரர்களுடன் இணைந்து டிராவிட் அணிக்கு ஏராளமான ரன்கள் குவித்ததையும், நீண்ட பார்ட்னர்ஷிப்களை உருவாக்கியதையும் கிரிக்கெட் ஆர்வலர்கள் இன்றளவும் நினைவுகூர்கின்றனர்.

பட மூலாதாரம், Getty Images

கிரிக்கெட் தவிர வேறு என்ன பொழுதுபோக்கு?

ராகுல் டிராவிட்டின் சாதனைகள் மற்றும் விளையாட்டு பயணம் குறித்து Rahul Dravid: A Biography என்ற வாழ்க்கை வரலாறு புத்தகம் எழுதிய பத்திரிக்கையாளர் வேதம் ஜெய்சங்கர், ராகுல் டிராவிட் குறித்த சில சுவராஸ்யமான அம்சங்களை பிபிசி தமிழிடம் பகிர்ந்து கொண்டார்.

''கிரிக்கெட் தவிர புத்தகங்கள் படிப்பது ராகுல் டிராவிட்டின் மிகவும் விருப்பமான பொழுதுபோக்கு. குறிப்பாக சுயசரிதை புத்தகங்களை அவர் விரும்பி படிப்பார்'' என்று வேதம் ஜெய்சங்கர் குறிப்பிட்டார்.

''தனது குழந்தைகள் படிப்பதற்காக தன் வீட்டை அவர்கள் படிக்கும் பள்ளிக்கு அருகில் மாற்றிய டிராவிட் ஒரு நல்ல தந்தை மற்றும் சாதனையாளராக இருந்தபோதிலும் அவர் மிகவும் எளிய மனிதராக வாழ்ந்து வருகிறார்'' என்று அவர் தெரிவித்தார்.

''முன்பொரு முறை தனது மகனை பெங்களூருவில் நடந்த ஒரு அறிவியல் கண்காட்சிக்கு அழைத்து சென்ற டிராவிட், மக்களோடு மக்களாக வரிசையில் காத்திருந்தார். இது புகைப்படமாக வெளிவந்து பெரும் வியப்பை ஏற்படுத்தியது'' என்று வேதம் ஜெய்சங்கர் கூறினார்.

தன்னை சூப்பர் ஸ்டாராக கருதாத டிராவிட்

அவரை மற்றவர்கள் சூப்பர் ஸ்டாராக பார்த்தாலும், தன்னை அவர் ஒருபோதும் சூப்பர் ஸ்டாராக கருதியதில்லை என்று கூறிய வேதம் ஜெய்சங்கர், இளம் வீரர்களுக்கு ஆலோசனைகள் வழங்குவது, ஊக்குவிப்பது போன்றவற்றை மிகவும் ஆர்வமாக டிராவிட் செய்துவருவதை சுட்டிக்காட்டினார்.

''டிராவிட் குறித்த வாழ்க்கை வரலாறு புத்தகத்தை நான் எழுத போவதாக நான் கூறியவுடன், ஏன் என்னை வைத்து புத்தகம் எழுதவேண்டும் என்று தனது அதிர்ச்சியை டிராவிட் வெளிப்படுத்தினார் . பின்னர், அது குறித்து விளக்கியவுடன் சம்மதித்த அவர் எனக்கு மிகவும் நல்ல ஒத்துழைப்பு அளித்தார்'' என்று நினைவுகூர்ந்தார்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

விக்கெட் கீப்பிங் பணியை அணிக்காக மேற்கொண்ட டிராவிட்

194 ரன்களில் சச்சின்: டிக்ளேர் செய்த டிராவிட் - ஏன்?

''கேப்டனாக இருந்தபோது தன் மனதில் சரியென்று தோன்றியதை பல சமயங்களிலும் டிராவிட் துணிச்சலாக முடிவெடுத்தார். முல்தான் டெஸ்ட் போட்டியில் சச்சின் 194 ரன்களில் விளையாடிக் கொண்டிருந்தபோது அணியின் ஆட்டத்தை முடித்துக் கொள்வதாக அறிவித்ததும் அவ்வாறான துணிச்சலான மற்றும் அணியின் நலனை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட முடிவுதான்'' என்று வேதம் ஜெய்சங்கர் குறிப்பிட்டார்.

அதற்கான விளக்கத்தை பலமுறை டிராவிட் அளித்ததையும் அவர் நினைவுகூர்ந்தார்.

இளையவர்களின் ரோல்மாடல் ராகுல் டிராவிட்

பட மூலாதாரம், Getty Images

ரஹானே, சஞ்சு சாம்சன், கருண் நாயர், விஜய் சங்கர் என பல இளம் வீரர்கள் டிராவிட்டிடம் கிரிக்கெட் பயிற்சி மற்றும் ஆலோசனைகள் பெற்றுள்ளார்கள்.

இளைய வீரர்களுக்கு ரோல் மாடலாக விளங்கும் டிராவிட், ரிக்கி பாண்டிங், சச்சின் டெண்டுல்கர், யூனிஸ் கான் மற்றும் ஷேன் வாட்சன் போன்ற அனுபவம் வாய்ந்த மூத்த வீரர்களின் அபிமானத்தையும், பாராட்டுகளையும் வெகுவாக பெற்றுள்ளார்.

விமர்சனங்களை கடந்து வெற்றி பெற்ற டிராவிட்

ஆரம்ப நாட்களில் டிராவிட் ஒருநாள் போட்டிகளில் சிறந்த வீரராக கருதப்படவில்லை. அவரால் ரன்ரேட் விகிதத்தை அதிகரிக்க முடியாது என்றும், டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே அவரால் சோபிக்க முடியும் என்றும் சிலர் விமர்சனம் செய்தனர்.

ஆனால், நாளடைவில் இத்தகைய கருத்துகளை பொய்யாக்கிய ராகுல் டிராவிட் ஒருநாள் போட்டிகளில் 10,000 அதிகமான ரன்கள் குவித்ததும், ஐபிஎல் டி20 தொடர்களில் முக்கிய பங்காற்றியதும் அளப்பரிய சாதனைகளாகும்.

பட மூலாதாரம், PUNIT PARANJPE

தனது டெஸ்ட் வாழ்வில் மொத்தம் 31,258 பந்துகளை டிராவிட் எதிர்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கெளரவ டாக்டர் பட்டத்தை நிராகரித்த டிராவிட்

கடந்த ஆண்டு தனக்கு பெங்களூரு பல்கலைக்கழகம் கெளரவ டாக்டர் பட்டம் வழங்க முன் வந்ததை நிராகரித்த டிராவிட், தான் விளையாட்டுத் துறையில் இன்னும் ஏராளமான ஆராய்ச்சிகள் செய்த பின் டாக்டர் பட்டம் பெற்றுக் கொள்ளப் போவதாக தெரிவித்தார்.

அண்மையில் பெங்களூருவில் நடைபெற ஒரு நிகழ்ச்சியில் பேசிய ராகுல் டிராவிட், "தோல்வியைப் பற்றி பேச எனக்குத் தகுதியுள்ளது. நான் 604 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளேன். ஆனால் அதில் 410 போட்டிகளில், 50 ரன்களை தாண்டவில்லை.'' என்று தன்னடக்கத்துடன் குறிப்பிட்டார்.

இதுதான் ராகுல் டிராவிட். மிகச் சிறந்த தடுப்பாட்டம், மிளிரும் ஆட்ட நுணுக்கம், வசீகரமான பேட்டிங் பாணி, தலைமை பண்பு, தன்னலமற்ற ஆட்டபாணி, இவை மட்டுமல்ல , தன்னடக்கமும் டிராவிட்டை குறிக்கிறது என்று கூறுகிறார்கள் விளையாட்டு ஆர்வலர்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: