கார்ட்டூன் புத்தக கதாநாயகனாக இந்தியாவின் கிரிக்கெட் "பெருஞ்சுவர்" டிராவிட்

இந்தியாவின் கிரிக்கெட் "பெருஞ்சுவர்" ராகுல் டிராவிட் பற்றி "த வால்" (The Wall) என்கிற கார்ட்டூன் புத்தகத்தை சென்னை தலைமையிடமாக கொண்டு செயல்படும் நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ளது.

புத்தகம்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், 19 வயதுக்கு கீழான இந்திய 'எ' அணியின் தற்போதைய தலைமை பயிற்சியாளருமான ராகுல் டிராவிட் பற்றிய இந்த கார்ட்டூன் புத்தகம், கிரிக்கெட் விளையாட்டு ரசிகர்களுக்கும், ராகுல் டிராவிட் ரசிகர்களுக்கும் பெரும் பரிசாக, டிராவிட்டின் 45வது பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது வெளிவந்துள்ளது.

இந்தப் புத்தகத்தை சென்னையிலுள்ள "ஸ்போட்வாக்" என்கிற நிறுவனம் இணையதளத்தில் தற்போது வெளியிட்டுள்ளது.

இந்தப் புத்தகம் பற்றியும், இதனை பதிப்பித்த நோக்கம் பற்றியும் இந்தப் புத்தகத்திலுள்ள கார்ட்டூன் படங்கள் அனைத்தையும் வரைந்துள்ளவரும், வரைகலை கலைஞரான (டிசைனர்) பொறியியலாளர் அதீதன் பிபிசி தமிழுடன் தன்னுடைய கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.

டிராவிடை பெருமைப்படுத்த எண்ணிய ரசிகர்கள்

"நானும், என்னுடைய இணை நிறுவனரான திவாகரும் டிராவிட்டின் ரசிகர்கள். எனவே, கிரிக்கெட் வீரர் டிராவிட்டை பெருமைப்படுத்தும் வகையில் ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது. ராகுல் டிராவிட் ரசிகர் மன்றத்தோடு கடந்த ஆண்டு கிடைத்த தொடர்பை பயன்படுத்தி எங்களுடைய கருத்தை நனவாக்கியுள்ளோம்" என்று அதீதன் தெரிவித்தார்.

கிரிக்கெட் வீரர் டிராவிடின் மிகவும் சிறந்த 15 நிகழ்வுகளை ஆய்வு செய்து தேர்ந்தெடுத்து, அவற்றை காமிக் வடிவில் இந்தப் புத்தகத்தில் வழங்கியுள்ளோம். டிராவிட்டின் முதல் கிரிக்கெட் போட்டி, முதல் சதம், மிகவும் முக்கிய கிரிக்கெட் ஆட்டங்கள் போன்ற முக்கிய நிகழ்வுகள் இடம்பெறுவதாக அவர் கூறினார்.

தென்னாப்ரிக்காவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆலன் டொனால்டிடம் பேசியது முதல், புகழ்பெற்ற ஈடன் கார்டன் மைதானத்தில் டிராவிட் நிகழ்த்திய சாதனைகள் வரை 15 பிரபல நிகழ்வுகளை இந்தப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன.

ஒவ்வொரு நிகழ்வுக்கும் ஒரு காட்ர்டூனையும், அந்த நிகழ்வு பற்றிய ஆங்கில விளக்கப் பகுதியை இந்தப் புத்தகம் கொண்டுள்ளது.

காமிக் வடிவில் விளையாட்டு

விளையாட்டை காமிக் வடிவில் சொன்னால், அதிக மக்களை சென்றடையும் என்று "ஸ்போட்ஸ்வாக்" நிறுவனம் நம்புகிறது என்று கூறிய அதீதன், இதனால்தான் டிராவிட் பற்றி காமிக் புத்தகமாக வெளியிடுவதற்கு முடிவெடுத்தாக மேலும் கூறினார்.

"விளையாட்டு புத்தகங்கள் அதிகம் உள்ளன. விளையாட்டை மிகவும் உற்சாகமாக எடுத்துச்சொல்ல, விவரிப்பது எப்படி என்று எண்ணியபோது உருவான யோசனைதான் இது. எனக்கு கார்ட்டூன் வரைவது மிகவும் பிடிக்கும். கார்ட்டூனையும், விளையாட்டையும் இணைத்து ஒரு படைப்பை உருவாக்கி உள்ளோம்" என்று அதீதன் விளக்கினார்.

இந்தப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள எல்லா கார்ட்டூன்களையும் முதலில் வரைந்துவிட்டு, பின்னர் டிஜிட்டல்மயமாக்குவதற்கு 'அடோப் இல்லஸ்டிரேட்டர்' மென்பொருளை பயன்படுத்தியதாக தெரிவித்தார் வரைகலை கலைஞர் அதீதன்.

டிராவிட்டை வரைகிறபோது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தாலும், அவரை கார்ட்டூனாக வரைவது சற்று கடினமாகவே இருந்தது என்கிறார்அதீதன்.

"சச்சின் தெண்டுல்கர் மற்றும் லாரா போன்றோரை, சில வடிவங்களை வரைந்து எளிதாக வரைந்து விடலாம், ஆனால், டிராவிட்டை கார்ட்டூனாக வரைவதற்கு சற்று கடினமாகவே இருந்தது" என்றார் அவர்.

தற்போது இணையதளம் மூலம் இந்தப் புத்தகத்தை ரூ. 199க்கு விற்பனை செய்து வருகின்ற நிலையில், கூடிய சீக்கிரம் இந்தியா முழுவதும் கிடைப்பதற்கு ஆவன செய்ய இருப்பதாக அவர் தெரிவித்தார்.

விளையாட்டை காமிக் வடிவில் வழங்குவதில் தீவிரமாக பணியாற்றி வருகின்ற "ஸ்போட்ஸ்வாக்" நிறுவனத்தின் முதலாவது வெளியீடு டிராவிட் பற்றிய "த வால்" (The Wall) என்கிற கார்ட்டூன் புத்தகம்தான்.

அடுத்து என்ன...?

அடுத்ததாக, மார்ன்செஸ்டன் கால்பந்து அணி பற்றிய பணித்திட்டத்தை தொடங்கவுள்ள இந்த நிறுவனம், 'சென்னை சூப்பர் கிங்ஸ்' ஐபிஎல் கிரிக்கெட் அணி பற்றியும், பிற கிரிக்கெட் வீரர்கள் பற்றியும் காமிக் வடிவில் புத்தகங்கள் வெளியிட திட்டம் வைத்திருப்பதாக அவர் தெரிவித்திருக்கிறார்.

அச்சு ஊடகத்தில் இருந்து, தற்போது எல்லாம் மின்னணு ஊடகம் என்று வளர்ந்துள்ள நிலையில், காமிக் புத்தகங்கள் மிகவும் குறைந்து விட்டன. மக்களை மீண்டும் அச்சு ஊடகங்களுக்கு அழைத்து வரும் எண்ணம் கொண்டிருப்பதாக தெரிவிக்கிறார் "த வால்" (The Wall) என்கிற புத்தகத்தின் கார்ட்டூனிஸ்ட் அதீதன்.

முன்னர் வெளிவந்த ராணி காமிக்ஸ் போன்றவை இப்போது வெளிவரவில்லை. வந்தாலும் அதனை வாங்கி வாசிப்போர் குறைவு.

எனவே, காமிக் புத்தகங்களை உற்சாகமாக பலரும் படிக்கும் வகையில் விளையாட்டை காமிக் வடிவில் சொல்லலாம் என்ற முயற்சியில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கிறார் அதீதன்.

ஜனவரி 20 ஆம் தேதி அடையாறு பேக் யாடில் இந்தப் புத்தகம் வெளியிடப்படவுள்ளது. இந்த நிகழ்வுக்கு டிராவிட் ரசிகர் மன்றத்திற்கு அழைப்பு விடுத்திருப்பதாகவும், அவர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொள்வார்கள் என்று நம்புவதாகவும் அதீதன் கூறினார்.

தனது அற்புத தடுப்பாட்டத்தால் 'வால்' (தடுப்புச் சுவர்) என்று கிரிக்கெட் ஆர்வலர்கள் மற்றும் விமர்சகர்களால் அழைக்கப்படும் முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டனான ராகுல் டிராவிட், ஜனவரி 11ம் தேதி வியாழக்கிழமை தனது 45-ஆவது பிறந்தநாளை கொண்டாடினார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :