இந்திய பந்துவீச்சாளர் ஷமியின் புயலில் வீழ்ந்த தென் ஆஃப்ரிக்கா

இந்திய பந்துவீச்சாளர் ஷமியின் புயலில் வீழ்ந்த தென் ஆஃப்ரிக்கா படத்தின் காப்புரிமை Getty Images

இந்தியா- தென் ஆஃப்ரிக்க இடையிலான 3வது டெஸ்ட் போட்டியில் இந்தியா ஆறுதல் வெற்றி பெற்றுள்ளது.

மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், இந்தியா ஏற்கனவே இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்து தொடரை இழந்த நிலையில், இப்போட்டியில் 63 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தென் ஆஃப்ரிக்காவை வீழ்த்தியது.

இரண்டாம் இன்னிங்சில் தென் ஆஃப்ரிக்க அணியை 177 ரன்களில் இந்திய பந்து வீச்சாளர்கள் சுருக்கினர். முகமது ஷமி வெறும் 23 ரன்கள் கொடுத்து, ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்திய அணி தென் ஆஃப்ரிக்காவுக்கு 241 ரன்களை வெற்றி இலக்காக வைத்தது. இரண்டாம் விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த, டீன் எல்கர் மற்றும் ஹாஷிம் அம்லா 119 ரன்கள் எடுத்து தென் ஆஃப்ரிக்காவை வலுப்படுத்தினர்.

படத்தின் காப்புரிமை Getty Images

ஒரு கட்டத்தில் போட்டி முழுவதும் தென் ஆஃப்ரிக்காவின் கட்டுப்பாட்டுக்குச் சென்றது. 52 ரன்கள் எடுத்திருந்த ஹாஷிம் அம்லாவை இஷாந்த் சர்மா வீழ்த்தினார். அதன்பிறகு தென் ஆஃப்ரிக்காவின் விக்கெட்டுகள் தொடர்ந்து வீழ்ந்தன.

ஒரு பக்கம் தொடர்ந்து விக்கெட்டுகள் வீழ்ந்துகொண்டிருக்க, டீன் எல்கர் 86 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ஏ பி டி வில்லியர்ஸ், பாப் டு ப்ளசிஸ் போன்ற நட்சத்திர வீரர்கள் சொற்ப ரன்களில் வீழ்ந்தனர்.

இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் புவ்னேஷ்வர் குமார் மற்றும் , ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

படத்தின் காப்புரிமை Getty Images

இப்போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 187 ரன்கள் எடுத்தது. விராத் கோலி 54 மற்றும் புஜாரா 50 தவிர வேறு எந்த இந்திய பேட்ஸ்மேனும் சோபிக்கவில்லை. அடுத்த விளையாடிய தென் ஆஃப்ரிக்க இந்தியாவை விட கூடுதலாக 7 ரன்கள் எடுத்து 194 ரன்கள் பெற்றிருந்தது.

இரண்டாம் இன்னிங்சில் 247 ரன்கள் எடுத்த இந்திய அணி, தென் ஆஃப்ரிக்கவுக்கு 241 ரன்களை வெற்றி இலக்காக வைத்தது. ஆனால், தென் ஆஃப்ரிக்க அணி 177 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளை இழந்தது.

மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், கேப் டவுனில் நடந்த முதல் போட்டியில் 72 ரன்களிலும், செஞ்சூரியனில் நடந்த இரண்டாம் போட்டியில் 135 ரன்களில் இந்தியா தோல்வியை சந்தித்தது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்