சதமடிப்பதில் கங்குலி சாதனையை விஞ்சிய கோலி - புள்ளிவிவர தகவல்கள்

  • 7 பிப்ரவரி 2018

இந்தியா - தென் ஆஃப்ரிக்கா இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியில் விராட் கோலி சதமடித்துள்ளார். இது அவருக்கு 34-வது சதமாகும்.

படத்தின் காப்புரிமை Gallo Images

இந்திய அணி தென் ஆஃப்ரிக்கா மண்ணில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தென் ஆஃப்ரிக்கா 2-1 என்ற கணக்கில் தொடரை வென்றது.

இதையடுத்து ஆறு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இரண்டு ஒருநாள் போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றுள்ள நிலையில் மூன்றாவது ஒருநாள் போட்டி தென் ஆஃப்ரிக்காவின் கேப்டவுன் நகரத்தில் நடைபெற்று வருகிறது.

தண்ணீர் தானம் தந்து கேப் டவுன் 'ஜீரோ' நாளை தள்ளிப்போட்ட விவசாயிகள்

டாஸ் வென்ற தென் தென் ஆஃப்ரிக்கா பந்துவீச்சை தேர்வு செய்தது. முதல் ஓவரிலேயே ரன் எதுவும் எடுக்காமல் ரோஹித் ஷர்மா அவுட் ஆனார். இதையடுத்து கோலி - தவான் இணை இணைந்து பொறுப்பாகவும் அதிரடியாகவும் ரன்கள் சேர்த்தது.

தவான் 76 ரன்களில் ஆட்டமிழந்தார். கோலி - தவான் இணை பிரிந்தபிறகு மற்ற இந்திய வீரர்கள் சீரான இடைவெளிகளில் ஆட்டமிழந்தனர். விராட் கோலி மட்டும் இறுதி வரை களத்தில் நின்று 159 பந்துகளில் 12 பௌண்டரிகள் இரண்டு சிக்ஸர்கள் உதவியுடன் 160 ரன்கள் எடுத்தார்.

இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் ஆறு விக்கெட்டுகளை இழந்து 303 ரன்களை குவிந்திருந்தது.

விராட் கோலி இந்த ஆட்டத்தில் சதம் கண்டதன் மூலம் பல சாதனைகளை படைத்துள்ளார். தென் ஆஃப்ரிக்கா மண்ணில் அந்த அணிக்கு எதிராக ஒருநாள் போட்டியொன்றில் அதிகபட்ச ரன்கள் குவித்த இந்திய பேட்ஸ்மேன்களில் முதலிடத்தை பிடித்திருக்கிறார் கோலி.

முன்னதாக 2001-ஆம் ஆண்டு தென் ஆஃப்ரிக்கா அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த ஒருநாள் போட்டியில் சவுரவ் கங்குலி 127 ரன்கள் குவித்திருந்தார். அதுவே இந்திய வீரர் ஒருவரின் அதிகபட்சமாகும். அந்தச் சாதனையை இன்றைய தினம் கோலி முறியடித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Gallo Images

அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட் பார்மெட்டுகளிலும் சேர்த்து அதிக சதங்கள் விளாசியவர் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் நூறு சதங்களுடன் முதலிடத்தில் இருக்கிறார். இரண்டாவது இடத்தில் 71 சதங்களோடு ரிக்கி பாண்டிங் உள்ளார். மூன்றாவது இடத்தில் சங்கக்காரா 63 சதங்களுடனும், நான்காவது இடத்தில் காலிஸ் 62 சதங்களுடன் உள்ளனர். தற்போது ஐந்தாவது இடத்தில் 56 சதங்களுடன் கோலி இருக்கிறார்.

முன்னதாக ஹாஷிம் ஆம்லா, ஜெயவர்த்தனே, கோலி ஆகியோர் 55 சதங்களுடன் ஐந்தாவது இடத்தில் இருந்தனர்.

ஒருநாள் போட்டிகளில் அதிக முறை 150 ரன்களுக்கு மேல் எடுத்த இந்திய வீரர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் ஐந்து முறையுடன் முதலிடத்தில் உள்ளார். மூன்றாவது முறையாக 150 ரன்களை கடந்துள்ள கோலி, பட்டியலில் தற்போது இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

ஒருநாள் போட்டியில் அதிக சதம் விளாசிய இந்திய கேப்டன்கள் பட்டியலில் சவுரவ் கங்குலியை விஞ்சி தற்போது கோலி முதலிடம் பிடித்துள்ளார்.

முகமது அசாருதீன் 162 போட்டிகளில் நான்கு சதமும், தோனி (171) டெண்டுல்கர் (70) போட்டிகளில் ஆறு சதங்களும் எடுத்து முறையே நான்காவது மற்றும் மூன்றாவது இடத்தில் உள்ளனர்

சவுரவ் கங்குலி 142 போட்டிகளில் இந்திய அணிக்கு தலைமை தாங்கிய சமயங்களில் 11 சதங்களை விளாசியுள்ளார். விராட் கோலி கேப்டனாக விளையாடிய 43 போட்டிகளில் 12 சதங்களை விளாசி முதலிடம் பிடித்துள்ளார்.

விராட் கோலி ஒருநாள் தரவரிசையில் தற்போது முதலிடத்தில் உள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்