சாதித்த இளம்படை: 'சாம்பியன்' இந்தியா - 5 முக்கிய அம்சங்கள்

படத்தின் காப்புரிமை Getty Images

இலங்கை தலைநகர் கொழும்பில் நடைபெற்ற முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரின் இறுதியாட்டத்தில் வங்கதேச அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா, நிதாகஸ் கோப்பையை கைப்பற்றியது.

இந்தியா, இலங்கை மற்றும் வங்கதேசம் இடையேயான சர்வதேச முத்தரப்பு டி20 தொடர் கிரிக்கெட் போட்டி தொடர் இலங்கையில் கடந்த 6-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

முத்தரப்பு டி20 கிரிக்கெட்தொடரை இந்தியா வென்றதற்கு 5 முக்கிய காரணங்கள் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளது.

பயமறியாத இளங்கன்றுகள்

இந்திய அணியில், இந்த தொடரில் அணித்தலைவர் விராட் கோலி, முன்னாள் தலைவர் டோனி, வேகப்பந்து வீச்சாளர்கள் புவனேஸ்வர் குமார், முகமது ஷமி, ஹர்திக் பாண்ட்யா போன்றோர் இடம்பெறாத சூழலில் தொடரை இந்தியா வென்றதற்கு முக்கிய காரணம் இளம்வீரர்களே.

படத்தின் காப்புரிமை Getty Images

தனது முதல் சர்வதேச போட்டியில் விளையாடிய தமிழக வீரர் விஜய்சங்கர் மற்றும் மற்றொரு தமிழக வீரரான வாஷிங்டன் சுந்தர் ஆகிய இருவரும் சிறப்பாக விளையாடினர். சில போட்டிகளில் அதிக அளவு ரன்களை விட்டுக் கொடுத்தாலும் முக்கிய தருணங்களில் விக்கெட்டுகளை வீழ்த்தி அணிக்கு வெற்றியை பெற்றுத் தந்தனர்.

மிகவும் அழுத்தம் உள்ள சூழலில் இளம் வீரர்கள் சற்றும் பதற்றம் அடையாமல் சிறப்பாக விளையாடியது இந்தியா தொடரை வென்றதற்கு முக்கிய காரணம்.

கைகொடுத்த தவான் - ரோகித்தின் அனுபவம்

தொடரின் ஆரம்பத்தில் சிறப்பாக விளையாடாதபோதும், இறுதி லீக் போட்டியிலும், தொடரின் இறுதியாட்டத்தில் மிகவும் அதிரடியாக பேட்டிங் செய்த ரோகித் சர்மா இந்தியாவின் வெற்றிக்கு பெரிதும் உதவினார். இறுதியாட்டத்தில் ரோகித் விளாசிய 56 ரன்கள் இந்தியாவின் வெற்றியை உறுதி செய்தது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption அரைசதம் எடுத்த ரோகித்சர்மா

இதேபோல் ஷிகர் தவான் முதல் இரண்டு ஆட்டங்களில் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

சுழலில் மிரட்டிய சாஹல்

இந்த தொடரில் நட்சத்திர சுழல் பந்துவீச்சாளர் குல்தீப் விளையாடாத நிலையில், மற்றொரு சுழல் பந்துவீச்சாளர் சாஹல் மிக சிறப்பாக விளையாடினார்.

இறுதி போட்டியில் இவர் எடுத்த 3 விக்கெட்டுகள் ஆட்டத்தின் போக்கை வெகுவாக மாற்றியது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption சுழலில் மிரட்டிய சாஹல்

இதேபோல் வேகப்பந்துவீச்சாளர் தாக்கூர் பல போட்டிகளில் சிறப்பாக விளையாடினர்.

அதகளம் நடத்திய தினேஷ் கார்த்திக்

தொடரில் ஒரு லீக் போட்டியில் சிறப்பாக விளையாடிய அணியின் விக்கெட்கீப்பர் தினேஷ் கார்த்திக் , தனது மிக சிறப்பான ஆட்டத்தை இறுதி போட்டியில் வெளிப்படுத்தினார்.

19-ஆவது ஓவரில் தினேஷ் கார்த்திக் எடுத்த 22 ரன்கள் ஆட்டத்தின் போக்கை இந்தியாவின் வசம் திருப்பியது.

படத்தின் காப்புரிமை Getty Images

ஆட்டத்தின் கடைசி பந்தில் 5 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் சிக்ஸர் விளாசிய தினேஷ் கார்த்திக் வெற்றியையும், கோப்பையும் இந்தியாவுக்கு பெற்றுத் தந்தார்.

சோபிக்காத இலங்கை, இறுதிக்கட்டத்தில் தடுமாறிய வங்கதேசம்

இந்த தொடரில் உள்ளூர் அணியான இலங்கை , முதல் போட்டியை தவிர மற்ற போட்டிகளில் நன்றாக விளையாடவில்லை. அந்த அணி இறுதி போட்டிக்கும் தகுதி பெறவில்லை.

படத்தின் காப்புரிமை Getty Images

இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற வங்கதேசம் தனது பேட்டிங்கில் விரைவாக விக்கெட்டுகளை இழந்ததும், இறுதி கட்டங்களில்அந்த அணியின் பந்துவீச்சாளர்கள் பதட்டம் அடைந்ததும் தோல்விக்கு காரணமாக அமைந்தது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்