காத்திருந்து சாதித்த தினேஷ் கார்த்திக்: தோனியின் இடத்தை நிரப்புவாரா?

தினேஷ் கார்த்திக்

கொழும்பு கிரிக்கெட் மைதானத்தில் நேற்று தினேஷ் கார்த்திக் மட்டையை சுழற்றியபோது, பிரம்மாண்ட மின்னணு திரையில் போட்டியை பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்கள் மட்டுமல்ல, களத்தில் இருந்த வீரர்களின் உணர்வுகளும் உச்சக்கட்டத்தை அடைந்தது.

2 ஓவர்களில் 34 ரன்கள் வெற்றிக்குத் தேவை என்ற கடினமான நிலையில் களம் இறங்கினார் தினேஷ்.

தோல்வியின் விளிம்பிலிருந்த இந்திய அணியை வெற்றிக்கொண்டு, இந்தியாவுக்கு எதிராக தனது முதல் தொடர் வெற்றியை வங்கதேச அணி பதிவு செய்யப்போகிறது என்ற முடிவுக்கு ஏறக்குறைய அனைவருமே வந்துவிட்டனர்.

ஆனால், தினேஷ் கார்த்திக் நிதாகஸ் கோப்பையை இந்திய அணி வென்றே தீரவேண்டும் என்ற இலக்குடன் களம் இறங்கினார். 19-ஆவது ஓவரின் முதல் பந்தில் சிக்ஸர், இரண்டாவது பந்தில் பவுண்டரி, மூன்றாவது பந்தில் மீண்டும் சிக்ஸர் என அதிரடியாக ரன் குவித்தார். நான்காவது பந்தில் ரன் ஏதும் எடுக்கவில்லை என்றாலும், ஐந்தாவது பந்தில் இரண்டு ரன்கள், ஆறாவது பந்தில் நான்கு ரன்கள் என அவரது மட்டை ரன் மழையை பொழிந்தது.

தினேஷ் கார்த்திக்கின் நம்ப முடியாத இன்னிங்ஸ்!

12 ரன்களில் 34 என்ற வெற்றி இலக்கு வியக்கத்தக்க வகையில் 6 பந்துகளில் 12 ரன்கள் என்று குறைந்ததும், ஆட்டத்தை பார்த்துக் கொண்டிருந்தவர்களின் மனம் தடதடக்கத் தொடங்கியது.

ஒருவேளை இந்தியா கோப்பையை கைநழுவவிட்டிருந்தால், அதற்கு காரணம் விஜய்ஷங்கர் மற்றும் தினேஷுக்கு முன் களத்தில் இருந்த ரோஹித் ஷர்மா என்று இன்று பேசிக்கொண்டிருப்போம்.

கடைசி ஓவரின் முதல் பந்து வைட் ஆக, அடுத்த பந்தில் ரன் எதுவும் எடுக்க முடியவில்லை. மீண்டும் வெற்றி எட்டாக்கனியாகும் என்று ரசிகர்கள் மனம் சோர்வுற, அடுத்த பந்தில் ரன் எடுத்தார் விஜய்ஷங்கர். இப்போது தினேஷ் மட்டை வீச வேண்டும். அடுத்த பந்தில் கார்த்திக் ஒரு ரன் எடுக்க மீண்டும் ஆட்டக்காரர்களின் இடம் மாறியது.

இப்போது மூன்று பந்துகளில் ஒன்பது ரன்கள் தேவை என்ற நிலை. தோல்விக்கு நெருக்கமாக இந்திய அணி செல்வதைப்போல் தோன்றியது. விஜய் ஷங்கர் மட்டை வீசி பவுண்ட்ரி அடித்தார். அடுத்த பந்தை கேலரி ஷாட் அடிக்க முயன்ற ஷங்கரின் முயற்சி வெற்றி பெறவில்லை. இப்போது வெற்றிக்கு 5 ரன்கள் தேவை, ஆனால், இருந்தது ஒரேயொரு பந்து.

வெற்றிக் கோப்பையை தந்த கடைசிப்பந்து

நான்கு ரன்கள் எடுத்தால் ஆட்டம் சூப்பர் ஓவராகிவிடும் குறைவானால் வங்கதேசம் கோப்பையைக் கைப்பற்றும் என்பது தினேஷ் கார்த்திக்குக்கு நன்றாகவே தெரியும்.

ஆனால், வங்கதேசத்துக்கு அதிர்ச்சியையும், இந்தியாவுக்கு ஆனந்தத்தையும் கொடுத்த அந்த கடைசி பந்தை ஆஃப் திசையில் சிக்ஸாராக அடித்த தினேஷ் கார்த்திக் வெற்றிக்கனியை தனது மட்டைவீச்சால் இந்தியாவுக்கு சமர்ப்பித்தார்.

பொதுவாக எந்தவொரு குழு விளையாட்டிலும் வெற்றி அல்லது தோல்விக்கு தனியொருவர் காரணம் கிடையாது என்றாலும், விதிவிலக்குகளும் உண்டு.

நிதஹாஸ் கோப்பைக்கான முத்தரப்பு இருபது ஓவர் இறுதிப் போட்டியில் தினேஷ் கார்த்திக்கின் கைவண்ணமே இந்திய அணிக்கு வெற்றியை தேடித்தந்தது என்பதை யாராலும் மறுக்க முடியாது.

தினேஷ் எதிர்கொண்ட கடைசி பந்து சிக்ஸரானதும், இந்திய அணியினர் ஆட்டக்களத்திற்குள் ஓடி வந்தனர். இலங்கை பார்வையாளர்களோ, தங்கள் அணியே கோப்பையை வென்றது போல் ஆரவரித்தனர்.

ஆனால் ஒன்பது பந்துகளில் ஆட்டத்தின் போக்கையே மாற்றிய தினேஷின் முகத்தில் புன்னகையை மட்டுமே காண முடிந்தது. மகேந்திர சிங் தோனியின் தலைமையில் அணி செயல்பட்டபோது இதே கார்த்திக்கின் திறமை குடத்தில் இட்ட விளக்காக இருந்தது.

தோனியின் அதிரடி

இந்த வியத்தகு வெற்றிக்கு பிறகும் தோனி மட்டும் பெரிய அளவு உற்சாகத்தை காட்டவில்லை. அவர் என்ன சொன்னார் தெரியுமா ''இந்த பெர்ஃபாமென்ஸால் எனக்கும் அணியினருக்கும் மிகவும் மகிழ்ச்சியே. இந்த போட்டித்தொடரில் நன்றாக விளையாடினோம், இறுதிப் போட்டியில் வெற்றி பெற மிகவும் போராட வேண்டியிருந்தது.''

''களத்திற்கு சென்றால் நன்றாக மட்டை வீசவேண்டும். அதற்காகத்தான் நான் பயிற்சி செய்கிறோம். இன்று அதிர்ஷ்டமும் துணை நின்றது."

ஆனால், ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டபோது கார்த்திக் பேசியது அவரின் மகிழ்ச்சிக்கு பின்னால் மறைந்திருந்த வருத்தத்தையும், வலியையும் வெளிப்படுத்துவதாக இருந்தது.

தினேஷ் சொன்னார், ''இந்திய அணிக்குள் நுழைவதே கடினமான ஒன்று என்ற நிலையில், வாய்ப்பு கிடைக்கும்போது அதை சரியாக பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.''

தினேஷ் கார்த்திக்கு இனிமேல் எப்படி வாய்ப்பு கிடைக்கும்?

தினேஷ் கார்த்திக்குக்கு எந்த அளவு வாய்ப்புகள் கிடைத்திருக்கவேண்டுமோ அந்த அளவு கிடைக்கவில்லை என்பது உண்மைதான். அவர் திறமையானவர் என்று அனைவரும் கருதினாலும், அது தேவைக்கு அதிகமானது என்றும் கருதப்பட்டது.

ஆனால் தற்போது அவரிடம் மாற்றம் காணப்படுகிறது. அந்த மாற்றத்தோடு முக்கிய தருணங்களில் ஆட்டத்தின் போக்கையே மாற்றும் கலையும் வெளிப்படுகிறது. இதைத்தான் ஆட்டத்தின் ஃப்னிஷரின் திறமை என்று சொல்வார்கள்.

இதுவரை மகேந்திர சிங் தோனி சிறந்த ஃப்னிஷர் என்று அழைக்கப்பட்டார், அவருக்கு முன்பு யுவராஜ் சிங். பல ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் விராட் கோலியும் ஃபினிஷராக பரிமளித்திருக்கிறார்.

ஆகாயத்தில் இரண்டு நட்சத்திரங்கள் ஒளிரும்போது, ஒன்றின் பிரகாசம் மற்றொன்றின் பிரகாசத்தை ஏதோ ஒரு விதத்தில் குறைத்துவிடும். தினேஷின் ஒளி, தோனியின் பிரகாசத்தில் மங்கிப்போனது.

தோனிக்கும் முன்னால் வந்தவர் கார்த்திக்

தோனிக்கு முன்னரே கிரிக்கெட் வாழ்க்கையை கார்த்திக் தொடங்கி இருந்தாலும், தோனியின் சிகையலங்காரமும் ஆக்ரோஷமான பேட்டிங்கும் அவரை பிரபலப்படுத்தியது, அணியின் கேப்டனகவும் உயர்த்தியது.

இது தோனியின் திறமைக்கு கிடைத்த பலன் என்றாலும், கார்த்திக்கின் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்காத்தற்கும், தோனிக்கும் என்ன சம்பந்தம்? தோனி சிறந்த விக்கெட் கீப்பர் என்பது, மற்றொரு விக்கெட் கீப்பரான கார்த்திக்குக்கு பின்னடைவாகிவிட்டது.

பல நல்ல இன்னிங்ஸ்களில் விளையாடி இருந்தாலும், விக்கெட் கீப்பிங்கில் சிறந்த திறமையை வெளிக்காட்டியிருந்தாலும், விக்கெட் கீப்பராக பார்க்கப்பட்ட கார்த்திக்குக்கு அணியில் தோனி இருக்கும்போது உரிய இடம் கிடைக்கவில்லை.

ஆனால், கார்த்திக்கின் சில சமீபத்திய இன்னிங்ஸ்கள் இப்போது பேசப்படுகிறது. 23 டெஸ்ட் போட்டிகளில், ஆயிரம் ரன்கள் எடுத்திருக்கிறார், சராசரியாக 28 ரன்கள் என்று சொல்லலாம். 79 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் 1496 ரன்கள் அடித்திருக்கிறார்.

ஒப்பீடு

மறுபுறம் மகேந்திர சிங் தோனி. 90 டெஸ்ட் போட்டிகளில் 4876 ரன்கள், 318 ஒருநாள் போட்டிகளில் 9967 ரன்கள் மற்றும் இருபது ஓவர் போட்டிகளில் 1444 ரன்கள் எடுத்துள்ளார்.

ஆனால், உண்மையில் இருவரின் பேட்டிங்கையோ விக்கெட் கீப்பிங்கையோ ஒப்பிடமுடியாது. இருவரும் பங்கு பெற்ற போட்டிகளுக்கு இடையில் மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம் உள்ளது. உண்மையில், தோனியின் திறமைக்கும், அவர் பெற்ற புகழுக்கும் முன் வேறு எதையும் ஒப்பீடு செய்ய முடிந்ததில்லை.

ஆனால் இப்போது நிலைமை மாறிவிட்டது. தோனியின் மட்டை வீச்சும் முன்புபோல் இல்லை, கேட்பன் என்ற பொறுப்போ கோலியிடம் சென்றுவிட்டது.

Twitter பதிவை கடந்து செல்ல, 1

Twitter பதிவின் முடிவு, 1

இத்தகைய சூழ்நிலையில், செயல்திறன் அடிப்படையில் மதிப்பிடப்பட்டால், தினேஷ் கார்த்திக், தோனிக்கு கடுமையான போட்டியாளராக இருப்பார்.

ஆனால், இப்போது முடிவெடுக்கும் பொறுப்பில் இருப்பவர் விராட் கோலி. கேப்டன் கோலி, தற்போது தோனியையே நம்புவதாக தோன்றுகிறது.

நிதாகஸ் கோப்பை இறுதிப்போட்டியில் தினேஷ் கார்த்திக்கின் அற்புதமான ஆட்டம், இந்திய கிரிக்கெட்டில் அவருக்கு உரிய இடத்தை பெற்றுத் தரும். தினேஷ் கார்த்திக்கை தவிர்ப்பது இனியும் சாத்தியமானதல்ல.

11 ஆண்டுகளில் 19 டி20 போட்டிகளில் மட்டுமே கார்த்திக்குக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. 14 ஆண்டுகளில் 79 ஒருநாள் போட்டிகளில் கார்த்திக் விளையாடியுள்ளார். ஆனால், தினேஷ் கார்த்திக்குக்கு இதைவிட அதிகமான வாய்ப்புகள் கிடைத்திருக்க வேண்டும் என்று பரவலாக பேசப்படுவதை கேப்டன் கோலியால் பரிசீலிக்காமல் இருக்கமுடியாது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: