ராஜஸ்தான் ராயல்ஸ்: கேப்டன் பதவியிலிருந்து ஸ்மித் விலகல்; புதிய தலைவர் ரஹானே

படத்தின் காப்புரிமை AFP
Image caption ஸ்டீவ் ஸ்மித்

தென் ஆஃபிரிக்கா அணியுடனான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின்போது ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் பந்தை விதிமுறையை மீறி சேதப்படுத்தியது தொடர்பான விவகாரத்தில், அந்த அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்திற்கு ஒரு போட்டியில் விளையாடுவதற்கு தடையும், அபராதமும் விதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்)கிரிக்கெட் தொடரின் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் பதவிலிருந்தும் ஸ்மித் விலகியுள்ளார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் பதவியிலிருந்து ஸ்டீவ் ஸ்மித் விலகினாலும், அணியில் ஒரு வீரராக அவர் தொடர்ந்து நீடிப்பார் என்றும் அந்த அணியின் புதிய கேப்டனாக ரஹானே நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

"இந்த முறைகேடு பிரச்சனையால் ஏற்பட்டுள்ள கவனச்சிதறல்கள் ஏதுமின்றி தற்போது தொடங்கவுள்ள ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பங்கேற்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஸ்மித் கேப்டன் பதவி விலகியுள்ளார்" என்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை நிர்வாகியான ஸுபின் பாருச்சா தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை AFP
Image caption ரஹானே

கடந்த 2013 ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரின்போது ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளின் நிர்வாகிகள் முறைகேட்டில் ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து நடந்த விசாரணையின் முடிவில், அந்த அணிகள் இரண்டு வருடங்களுக்கு ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்பதற்கு விதிக்கப்பட்டிருந்த தடைக்காலம் முடிந்து, அடுத்த மாதம் தொடங்கவுள்ள ஐபிஎல் தொடரில் பங்கேற்கவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, தென் ஆஃபிரிக்காவுடனான டெஸ்ட் போட்டியில் பந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டதை அடுத்து இந்த போட்டிகளில் எஞ்சியுள்ள நாட்களில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் மற்றும் துணை கேப்டன் பதவியில் இருந்த ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் ஆகிய இருவரும் பதவி விலகினர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: