பிபிசி தமிழ் ஸ்ட்ரீட் கிரிக்கெட்டில் அரை இறுதிக்கு தகுதி பெற்றது யார்?

தமிழகம் முழுவதும் பரவலாக விளையாடப்படுவது கிரிக்கெட். இடம், சூழ்நிலை, வீரர்களின் எண்ணிக்கை ஆகியவற்றை பொறுத்து சர்வதேச அளவில் விளையாடப்படும் கிரிக்கெட் விதிகளில் மாற்றங்கள் செய்து பல தரப்பினராலும் பல்வேறு இடங்களில் கிரிக்கெட் விளையாடப்படுகிறது.

படக்குறிப்பு,

பிபிசி தமிழ் ஸ்ட்ரீட் கிரிக்கெட்

தெருக்கள், காலி வகுப்பறைகள், ஆற்றங்கரையோரங்களில் கடற்கரை, மொட்டை மாடி என எங்கும் கிரிக்கெட் விளையாடப்படுகிறது. தமிழகத்தின் ஓர் அடையாளமாக மாறத் துவங்கியிருக்கும் வீதி கிரிக்கெட்டில் என்னென்ன வேடிக்கையான விதிகள் இருக்கிறதோ அதனை அடிப்படையாக கொண்டு பிபிசி தமிழ், பிரத்யேக தனித்துவ ஸ்ட்ரீட் கிரிக்கெட் விதிகளை தயாரித்துள்ளது.

அதனடிப்படையில் ஸ்ட்ரீட் கிரிக்கெட் தொடர் ஒன்று அறிவிக்கப்பட்டு கடந்த வாரம் லீக் சுற்று போட்டிகள் சென்னை, ஈரோடு, இராமநாதபுரம், திருச்சி ஆகிய பகுதிகளில் நடந்தன. ஒவ்வொரு மண்டலத்திலும் கிடைத்த முடிவுகளின் தொகுப்பு இங்கே.

சென்னை

ஆரணி, வில்லிவாக்கம், அயனாவரம் என மூன்று பகுதிகளைச் சேர்ந்த அணிகள் லீக் சுற்று போட்டியில் மோதின. லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்றொரு அணியுடன் ஒரு போட்டியில் மோத வேண்டும். வெற்றி பெற்றால் 4 புள்ளிகள், போனஸ் புள்ளிகளுடன் வென்றால் ஆறு புள்ளிகள் என்ற விதியின் அடிப்படையில் லீக் சுற்று துவங்கியது.

முதல் போட்டியில் மணி சேகர் தலைமையிலான ஆரணி அணியும் பிரசாந்த் தலைமையிலான வில்லிவாக்கம் அணியும் மோதின. முதலில் பேட் பிடித்த ஆரணி அணி, முதல் பவர்பிளே முடிவில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து 25 ரன்கள் எடுத்திருந்தது. ஆறாவது ஓவரின் முதல் பந்தில் ஐந்தாவது விக்கெட்டையும் இழந்தது. பிரசாந்த் தலைமையிலான அணிக்கு 40 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

படக்குறிப்பு,

பிபிசி தமிழ் ஸ்ட்ரீட் கிரிக்கெட்

பிரசாந்த் அணி தொடக்கத்தில் சிறப்பாக ஆடியது. எட்டாவது ஓவர் முடிவில் அணியின் ஸ்கோர் 37/3. மூன்று ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் ஒன்பதாவது ஓவரை வீசிய சந்தோஷின் பந்துகளில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர் வில்லிவாக்கம் வீரர்கள். இறுதியில் ஒரு ரன் வித்தியாசத்தில் வென்றதுடன் எதிரணியின் அனைத்து விக்கெட்டுகளையும் வீழ்த்தியதால் ஆரணி அணி போனஸ் புள்ளிகளோடு 6 புள்ளிகளை பெற்றது.

லீக் சுற்றின் இரண்டாவது போட்டியில் அன்பழகன் தலைமையிலான அயனாவரம் அணியுடன் பிரசாந்த் அணி மோதியது. பிபிசி தமிழ் ஸ்ட்ரீட் கிரிக்கெட் விதிகளை புரிந்துகொண்டு சரியான திட்டத்துடன் விளையாடாததால் ஆறாவது ஓவரில் மூன்றாவது பந்துடன் அன்பழகன் அணியின் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. அவரது அணி வெறும் 4 ரன்கள் மட்டுமே குவித்தது.

இதையடுத்து இன்னிங்ஸை துவங்கிய வில்லிவாக்கம் அணி முதல் பவர்பிளேவின் முதல் ஓவரிலேயே நான்காவது பந்தை எல்லைக் கோட்டிற்கு விளாசியது. எட்டு ரன்கள் ஒரே பந்தில் கிடைத்ததன் வாயிலாக வில்லிவாக்கம் அணி எளிதில் வென்றது. மேலும் போனஸ் புள்ளிகளும் கிடைத்தது.

படக்குறிப்பு,

பிபிசி தமிழ் ஸ்ட்ரீட் கிரிக்கெட்

லீக் சுற்றின் மூன்றாவது போட்டியில் மணி சேகர் அணியும் அன்பழகன் அணியும் மோதின. முதலில் பேட்டிங் செய்த மணி சேகர் அணி ஏழாவது ஓவரின் முதல் பந்தில் 32 ரன்களுக்கு இன்னிங்ஸை இழந்தது. அன்பழகன் அணி சேஸிங்கில் பவர்பிளே ஓவரின் விதிகளை சரியாக பயன்படுத்தியது. இரண்டாவது ஓவரின் மூன்றாவது பந்திலேயே இரண்டு விக்கெட்டுகளை இழந்து 33 ரன்களை எடுத்து போனஸ் புள்ளியுடன் ஆறு புள்ளிகளை பெற்றது.

மூன்று அணிகளும் ஆறு புள்ளிகளை பெற்றதையடுத்து சூப்பர் ஓவர் சுற்று கடைபிடிக்கப்பட்டது. மணி சேகர் Vs பிரசாந்த் அணி இடையிலான போட்டியில் மணி சேகர் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. அன்பழகன் அணியை பிரசாந்த் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் வென்றது.

அன்பழகன் Vs மணி சேகர் அணிக்கு இடையிலான போட்டியில் மணி சேகர் அணி சூப்பர் ஓவரில் ஒரு பௌண்டரியுடன் 10 ரன்கள் குவித்தாலும் ஒரு விக்கெட்டை இழந்ததால் பத்து ரன்கள் கழிக்கப்பட்டதையடுத்து (பிரத்யேக சூப்பர் ஓவர் விதி) அன்பழகன் அணியின் வெற்றிக்கு ஒரு ரன் மட்டுமே தேவைப்பட்டது. ஆனால் சூப்பர் ஓவரில் முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்து -10 ரன்களுடன் தொடர்ந்து விளையாடி ஆறு பந்துகள் முடிவில் ஐந்து ரன்களை எடுத்து ஒரு விக்கெட் வித்தியாசத்தில் மணி சேகர் அணியை வீழ்த்தியது அன்பழகன் அணி.

சூப்பர் ஓவர் சுற்றிலும் விடை கிடைக்காததையடுத்து மீண்டும் சூப்பர் ஓவர் சுற்று நடந்தது. இம்முறை ஆரணி Vs வில்லிவாக்கம் அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் பிரசாந்த் தலைமையிலான வில்லிவாக்கம் அணியும், வில்லிவாக்கம் Vs அயனாவரம் அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் அயனாவரம் (-8) ரன்களும் வில்லிவாக்கம் (-10) ரன்களும் எடுத்ததையடுத்து அயனாவரம் அணி போட்டியை வென்றது. அயனாவரம் மற்றும் ஆரணி அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் மணி சேகர் தலைமையிலான ஆரணி அணி வென்றது.

படக்குறிப்பு,

சென்னை மண்டலம் சார்பாக அரை இறுதிக்குத் தகுதி பெற்ற அன்பழகன் அணி

இரண்டாவது சூப்பர் ஓவர் சுற்றிலும் அரை இறுதிக்கு தகுதி பெறும் அணி எது என்பதில் முடிவு கிடைக்காததையடுத்து சில விதிகள் மாற்றப்பட்டு மூன்றாவது சூப்பர் ஓவர் சுற்று நடந்தது.முதல் போட்டியில் வில்லிவாக்கம் அணியும் அயனாவரம் அணியும் மோதின. அன்பழகன் தலைமையிலான அணி வென்றது.

இரண்டாவது போட்டியில் அயனாவரம் மற்றும் ஆரணி அணிகள் மோதின. இதில் அன்பழகன் அணிக்கு வெற்றி இலக்காக மூன்று ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது. சூப்பர் ஓவரின் கடைசி பந்தில் அயனாவரம் அணியின் வெற்றிக்கு இரண்டு ரன்கள் தேவை என்ற நிலையில் ஆரணி அணியின் கேப்டன் 'வைடு' வீசியதால் அன்பழகன் அணி வென்றது. மூன்றாவது சூப்பர் ஓவர் சுற்றில் தொடர்ச்சியாக இரண்டு போட்டிகளை வென்றதன் மூலம் அன்பழகன் அணி சென்னை மண்டலம் சார்பாக அரை இறுதிக்குத் தகுதி பெற்றது.

ஈரோடு மண்டலம்

மூன்று அணிகள் கலந்து கொண்ட லீக் சுற்றில் முதல் போட்டியில் ஃபயர் அணியும் ஸ்டார் அணியும் மோதின. இதில் ஸ்டார் அணி வென்றது. இரண்டாவது போட்டியில் ஈரோ அணியும் ஸ்டார் அணியும் மோதின. முதலில் பேட்டிங் செய்த ஈரோ அணி 26 ரன்களை குவித்தது. இலக்கை துரத்திய ஸ்டார் அணி பவர்பிளே முதல் ஓவரிலேயே மூன்று பௌண்டரிகளை விளாசியது. இரண்டாவது ஓவரிலேயே இலக்கை கடந்து 31 ரன்களை குவித்து ஸ்டார் அணி வென்றது.

படக்குறிப்பு,

அரை இறுதிக்கு தகுதி பெற்ற ஸ்டார் அணி

லீக் சுற்றில் அடுத்தடுத்து இரண்டு போட்டிகளை வென்று எட்டு புள்ளிகளை பெற்றதையடுத்து ஸ்டார் அணி நேரடியாக அரை இறுதிக்கு தகுதி பெற்றது.

ராமநாதபுரம் மண்டலம்

ராமநாதபுரம் மண்டலத்தில் கடந்த ஞாயிற்று கிழமை (25.03.2018) நடந்த லீக் சுற்றில் நான்கு அணிகள் விளையாடின. ஏ, பி, சி,டி என நான்கு அணிகள் மோதிய லீக் சுற்றில் முதல் போட்டியில் நம்புகுமார் தலைமையிலான 'ஏ' அணியுடன் 'சி' அணி மோதியது. நம்புகுமார் அணி 6.2 ஓவர்களில் 33 ரன்கள் எடுத்தது. சி அணி 3.3 ஓவரில் 12 ரன்களில் ஆட்டத்தை இழந்தது.

பி, டி அணிகளுக்கு இடையே நடைபெற்ற மற்றொரு போட்டியில் பாரதி தலைமையிலான 'டி' அணி 7.4 ஓவர்களில் 42 ரன்கள் எடுத்தது. 'பி' அணி 5.1 ஓவர்களில் 24 ரன்கள் மட்டுமே எடுத்தது.

படக்குறிப்பு,

நம்பு குமார் அணி ராமநாதபுரம் மண்டலம் சார்பாக அரை இறுதிக்குள் நுழைந்தது

இதையடுத்து அரை இறுதிக்குள் நுழையப்போவது யார் என நிர்ணயிக்கும் போட்டியில் நம்பு குமார் அணியும் பாரதி அணியும் மோதின. நம்பு குமார் அணி 8.3 ஓவர்கள் விளையாடி 48 ரன்கள் எடுத்தது. பின்னர் விளையாடிய பாரதி அணி 3.3 ஓவர்களில் 12 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. இதையடுத்து நம்பு குமார் அணி ராமநாதபுரம் மண்டலம் சார்பாக அரை இறுதிக்குள் நுழைந்தது.

திருச்சி மண்டலம்

மண்ணச்சநல்லூர், கலர் பாய்ஸ், நியூ பேட் பாய்ஸ். எம்.கே.டி பாய்ஸ் என நான்கு அணிகள் லீக் சுற்றில் மோதின. நாக் அவுட் முறையில் நடந்த லீக் சுற்றில் முதல் போட்டியில் மண்ணச்சல்லூர் பாய்ஸ் , கலர் பாய்ஸ் அணிகள் மோதின. கலர் பாய்ஸ் அணியினர் 4.1 ஓவர்களில் 29 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆயினர்.

பாரதிராஜா தலைமையிலான மண்ணச்சநல்லூர் அணி முதல் ஓவரிலேயே ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 30 ரன்களை எடுத்து வென்றது.

இரண்டாவது லீக் போட்டியில் எம் கே டி பாய்ஸ் அணி நிர்ணயித்த பத்து ரன்களை முதல் ஓவரிலேயே நியூ பேட் பாய்ஸ் அணி விரட்டி வென்றது.

அரை இறுதிக்கு தகுதிப் பெறப்போவது யார் என நிர்ணயித்த சுற்றில், பாரதிராஜா அணியும் கமல் தலைமையிலான நியூ பேட் பாய்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற பாரதிராஜா சேஸிங்கை தேர்ந்தெடுத்த்தார். கமல் அணி 5.5 ஓவர்கள் விளையாடி 31 ரன்கள் சேர்த்தது. 2.2 ஓவர்களிலேயே இலக்கை துரத்தி வென்று அரை இறுதிக்கு தகுதி பெற்றது மண்ணச்சநல்லூர் அணி.

படக்குறிப்பு,

அரை இறுதிக்கு தகுதி பெற்ற மண்ணச்சநல்லூர் அணி.

பிபிசி தமிழின் பிரத்யேக ஸ்ட்ரீட் கிரிக்கெட் விதிகளின்படி நடந்த இந்த லீக் சுற்றில் விளையாடிய வீரர்கள், இந்த விதிகள் சிறு வயதில் விளையாடிய கிரிக்கெட் போட்டிகளைப் போல வித்தியாசமானதாகவும் வேடிக்கையானதாகவும் தெருவில் கிரிக்கெட் விளையாடிய நாட்களை மீண்டும் நினைவுபடுத்தியதாகவும் பிபிசியிடம் தெரிவித்தனர்.

சென்னையில் வரும் ஞாயிற்றுக்கிழமை நடக்கவுள்ள அரை இறுதி போட்டிகளில் இந்த நான்கு அணிகள் மோதவுள்ளன. இதில் வெற்றி பெறும் அணி அன்றைய தினம் நடக்கும் இறுதி போட்டியில் விளையாடும்.

பிபிசி தமிழ் நேயர்களுக்காக இந்த போட்டிகள் பிபிசி தமிழ் பேஸ்புக் பக்கத்தில் நேரலை செய்யப்படும். மேலதிக தகவல்களை தெரிந்துகொள்ள பிபிசி தமிழுடன் இணைந்திருங்கள்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: