கிரிக்கெட் ஆடுபவரா நீங்கள்? இந்த 25 விதிகளின்படி ஆட்டத்தில் உங்களால் ஜெயிக்க இயலுமா?

பிபிசி தமிழ் ஸ்ட்ரீட் கிரிக்கெட் விதிகள்

பிபிசி தமிழ் உருவாக்கியுள்ள தனித்துவமான ஸ்ட்ரீட் கிரிக்கெட் விதிகளை அடிப்படையாக கொண்டு வேடிக்கை நிறைந்த ஒரு கிரிக்கெட் தொடரை நடத்தி வருகிறது. வரும் ஞாயிற்றுக் கிழமை அரை இறுதி மற்றும் இறுதி போட்டிகள் சென்னையில் நடக்கவுள்ளது. இவை பிபிசி பக்கத்தில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளன.

பிபிசி தமிழின் தனித்துவமான ஸ்ட்ரீட் கிரிக்கெட் விதிகள் இவை. நீங்களும் இந்த விதிகளின் படி விளையாடி பார்க்கலாமே.

1. போட்டியில் டென்னிஸ் பந்து மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்

2. இது பத்து ஓவர்கள் கொண்ட போட்டி. சுவர், மரம், பிளாஸ்டிக், கட்டை அல்லது கல் என எந்த பொருள் வேண்டுமானாலும் ஸ்டம்ப்பாக இருக்கலாம். ஸ்டம்ப் உயரம் 75 செ.மீயை விட அதிகமாக இருக்கக் கூடாது அல்லது குறிப்பிட்ட போட்டியில் விளையாடும் வீரர்களின் பெரும்பாலானவர்களின் உயரத்தின் இடுப்பு அளவுக்கு மட்டுமே இருக்க வேண்டும்.

3. ஒரு முனையில் இருந்து மட்டுமே பந்து வீச அனுமதி. அதிகபட்சம் மூன்று அடிகள் ஓடிவந்து மட்டுமே பௌளர்கள் பந்து வீசலாம். கையைச் சுழற்றியோ, சுழற்றாமல் அண்டர் ஆர்ம் முறையிலும் பந்து வீசலாம்.

4. எல்.பி.டபிள்யூ முறையில் அவுட் கிடையாது.

5. ஒவ்வொரு அணியிலும் ஐந்து பேர் மட்டுமே இருக்க முடியும். மாற்று வீரர்களுக்கு அனுமதி இல்லை.

6. கடைசி விக்கெட்டுக்கு எதிர் முனையில் பேட்ஸ்மேன் இல்லாமல் ஒரு பேட்ஸ்மேன் விளையாட அனுமதி உண்டு.

7. கடைசி பேட்ஸ்மேன் ரன் எடுக்க ஓடும்போது ஃபீல்டர்கள் ரன் அவுட் செய்யும் பொருட்டு எந்த முனையில் உள்ள விக்கெட்டை வேண்டுமானாலும் வீழ்த்தலாம்.

8. பேட்ஸ்மேனுக்கு முன்னால் இருக்கும் பகுதிகளில் மட்டுமே ரன்கள் உண்டு. ஸ்டம்புக்கு பின்புறமோ, தேர்ட் மேன், கல்லி, லெக் கல்லி, டீப் ஃபைன் லெக், லாங் லெக், லாங் ஸ்டாப் உள்ளிட்ட பேட்ஸ்மேனுக்கு பிந்தைய பகுதிகள் எதிலும் ரன்கள் கிடையாது. ஆனால் இந்த பகுதியில் பேட்ஸ்மேன் பந்தை அடித்து ஃபீல்டர் கேட்ச் பிடித்தால் அவுட் கொடுக்கப்படும்.

9. ஃபீல்டிங் செய்யும் அணி இரண்டு வாளிகள் அல்லது அது சார்ந்த பொருட்களை களத்தில் நிறுத்தி வைக்கலாம். இவை கூடுதலான ஃபீல்டராக கருதப்படும். பேட்ஸ்மேன் அடிக்கும் பந்து வேறு எங்கும் படாமல் நேரடியாக இந்த பொருட்களின் மேல் பட்டால் பேட்ஸ்மேனுக்கு அவுட் கொடுக்கப்படும்.

10. ஒரு பௌலர் தொடர்ந்து மூன்று பந்துகளை வைடு அல்லது நோ பால் வீசினால் பேட்டிங் பிடிக்கும் அணிக்கு அந்த ஒவ்வொரு பந்துக்கும் ஒரு ரன்கள் கூடுதலாக வழங்கப்படும். மேலும் நான்கு உதிரி ரன்களும் வழங்கப்படும்.

ஆகவே ஒரு பௌலர் மூன்று வைடு/ நோ பால் வீசினால் எதிரணிக்கு ஏழு ரன்கள் கிடைக்கும். ஒரே பௌலர் தொடர்ந்து ஆறு வைடு/நோ பால் வீசினால் எதிரணிக்கு 14 ரன்கள் வழங்கப்படும். அந்த ஓவரை முடிக்க கேப்டன் வேறு எந்த வீரரையும் அழைக்கலாம்.

11. சிக்ஸ் அடிச்சா அவுட் என்ற விதி இங்கு பொருந்தும். பேட்ஸ்மேன் அடிக்கும் பந்து பௌண்டரி லைனுக்கு அப்பால் நேரடியாக விழுந்தால் பேட்டிங் பிடித்த அணிக்கு ஆறு ரன்கள் கிடைக்கும். ஆனால் பேட்ஸ்மேன் 'அவுட்' ஆக கருதப்படுவார்.

12. பௌன்சர்கள் வீச அனுமதியில்லை. போட்டி நடுவர் ஒரு பந்து பௌன்சரா இல்லையா என்பதை அறிவிக்க அனுமதி உண்டு. பேட்டிங் பிடிக்கும் அணி ஒவ்வொரு பௌன்சருக்கும் ஒரு ரன்னை கூடுதலாக பெறும். பௌன்சரை பேட்ஸ்மேன் விளாசும் பட்சத்தில் அதனால் கிடைக்கும் ரன்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். அதே சமயம் அந்த பந்து கேட்ச் பிடிக்கப்பட்டால் அவுட் தரப்படும்.

13. ஒரு பௌலர் அதிகபட்சம் மூன்று ஓவர்கள் பந்து வீசலாம். ஒரு பௌலர் ஒருவரை மெய்டனாக வீசினாலோ அல்லது அந்த ஓவரில் விக்கெட் எடுத்தாலோ, அவரே தொடர்ந்து அடுத்த ஓவரையும் வீச அனுமதியுண்டு. பந்துவீசும் அணியின் கேப்டன் தொடர்ந்து அதே பௌலரை பந்துவீச அனுமதிக்கலாமா இல்லையா என்பதை முடிவு செய்யும் அதிகாரம் படைத்தவராவார்.

14. ஆடுகளத்தின் நீளம், பௌண்டரிக்கான பரப்பளவு ஆகியவற்றை நடுவர் தான் நிர்ணயிக்க வேண்டும். போட்டியின் தொடக்கத்திலேயே இவை நிர்ணயிக்கப்பட வேண்டும்.

15. 'டெட்' பால் குறித்த முடிவுகளை எடுக்கும் முழு அதிகாரமும் நடுவருக்கு உண்டு. ஒவ்வொரு டெட் பாலுக்கும் ஒரு ரன் பேட்டிங் அணிக்கு கிடைக்கும். டெட் பால் செல்லத்தகாத பந்தாகவே கருதப்படும்.

16. ஒன் பிட்ச் கேட்ச் என்ற விதி செல்லும். பேட்ஸ்மேன் அடித்த பந்து தரையில் ஒரு முறை பட்டு எழும்பியதும் அதனை ஃபீல்டர் ஒற்றை கையால் கேட்ச் பிடித்தால் பேட்ஸ்மேன் களத்தை விட்டு வெளியேற வேண்டியதுதான். ஒரு ஃபீல்டர் நேரடியாக பந்தை கேட்ச் பிடிக்க முயன்று தவறவிட்டு அதன் பிறகு பந்து தரையில் ஒரு முறை பட்டபிறகு மீண்டும் ஒற்றை கையால் கேட்ச் பிடித்தால் அவுட் வழங்கப்பட மாட்டாது. சுவர்,மரம் என மற்ற எந்த பொருட்களில் பந்து பட்டு கேட்ச் பிடித்தாலும் அவற்றுக்கு அவுட் வழங்கப்பட மாட்டாது.

17. ஃபீல்டிங் செய்யும் அணி தங்களுக்கு விக்கெட் கீப்பர் வேண்டுமா இல்லையா என்பதை முடிவு செய்துகொள்ளலாம். தங்களுக்கு விக்கெட் கீப்பர் தேவை இல்லை என முடிவு செய்தால் பேட்டிங் அணியில் இருந்து ஒருவர் விக்கெட் கீப்பர் பணியை செய்ய வேண்டும். ஆனால் பேட்டிங் அணியின் கீப்பர் கேட்ச் பிடித்தாலோ, ரன் அவுட் செய்தாலோ அவை அவுட் என கருதப்படாது.

18. நடுவர் எடுக்கும் எந்த முடிவும் இறுதியானது. வீரர்கள் ஒழுங்கீனமாக நடுவரிடம் நடந்து கொண்டால் சம்பந்தப்பட்ட வீரரை நடுவர் போட்டியில் இருந்து இடை நீக்கம் செய்யவும் அல்லது சம்பந்தப்பட்ட அணி தோல்வியுற்றதாகவும் அறிவிக்க அனைத்து அதிகாரமும் உண்டு.

19. பேட்டிங் செய்யும் அணி சொந்தமாக பேட் கொண்டு வரவேண்டும்.

20. போட்டி நடக்கும்போது எந்த வீரருக்காவது உடல்நலம் குன்றினால், மாற்று வீரர் அவருக்கு பதிலாக களமிறங்க அனுமதிக்கப்படமாட்டார்.

21. ஒரு பேட்ஸ்மேன் தனக்கு ரன்னர் வேண்டுமா இல்லையா என்பதை தீர்மானிக்கலாம். எப்படியாயினும் ஒரு இன்னிங்சில் ஒரு முறை மட்டுமே ரன்னர் வசதியை பேட்டிங் செய்யும் அணி பயன்படுத்த முடியும்.

22. இரண்டு பவர்பிளே ஆட்டத்தில் உண்டு. முதல் பவர்பிளே இரண்டு ஓவர்களை கொண்டதாக இருக்கும். ஆட்டத்தின் முதல் இரண்டு ஓவர்கள் முதல் பவர்பிளேவாக கருதப்படும். இரண்டாவது பவர் பிளே ஒரு ஓவர் கொண்டதாக இருக்கும். பேட்டிங் பிடிக்கும் அணியின் கேப்டன், ஆறாவது ஓவர் முதல் பத்தாவது ஓவருக்கு இடையில் எப்போது வேண்டுமானாலும் இந்த பவர்பிளே எடுத்துக் கொள்ளலாம்.

பவர்பிளேவில் பேட்ஸ்மேன் பௌண்டரி அடித்தால் எட்டு ரன்கள் வழங்கப்படும். பௌண்டரிக்கு அப்பால் நேரடியாக பந்து விழுமாறு விளாசினால் 12 ரன்கள் வழங்கப்படும். ஆனால் போட்டி துவங்கும் முன்பே நிர்ணயிக்கப்பட்ட மைதானத்தின் எல்லையை தாண்டி பந்து விழுந்தால் ரன்கள் கிடையாது மேலும் பேட்ஸ்மேன் 'அவுட்' என அறிவிக்கப்படும்.

23. பேட்ஸ்மேனை உள்நோக்கத்துடன் பந்துவீச்சாளர் தனது பந்து மூலம் தாக்கினால் நடுவர் முதலில் எச்சரிக்கை விடுப்பார். இந்த செயல் தொடர்ந்தால் குறிப்பிட்ட பந்துவீச்சாளரை போட்டியில் இருந்து இடை நீக்கம் செய்ய நடுவருக்கு முழு அதிகாரமும் உண்டு. அதே போல பேட்ஸ்மேனை கடுமையாக தாக்கவேண்டும் என்ற உள்நோக்கத்துடன் வீசப்படும் பந்து செல்லுமா செல்லாதா என்பதையும் நடுவர் அறிவிப்பார்.

24. ஒரு பேட்ஸ்மேன் தொடர்ந்து மூன்று பந்துகளை தனது பேட் மூலம் தொடக் கூட முடியாத வகையில் சந்தித்தால் பேட்டிங் செய்யும் அணிக்கு மூன்று ரன்கள் கழிக்கப்படும். அதே பேட்ஸ்மேன் தொடர்ந்து இதே நிலைமையை ஒரு இன்னிங்சில் இரண்டாவது முறையாக சந்தித்தால் அந்த பேட்ஸ்மேனுக்கு அவுட் கொடுக்கப்படும். அதே சமயம் மீண்டும் மூன்று ரன்கள் அணியின் மொத்த ரன்களில் இருந்து கழித்துக் கொள்ளப்படும்.

25. ஒரு போட்டி 'டை'யில் முடிந்தால் 'சூப்பர் ஓவர்' முறை மூலம் வெற்றியாளர் யார் என்பது தீர்மானிக்கப்படும். மூன்று பேட்ஸ்மேன்கள் சூப்பர் ஓவரில் பேட்டிங் செய்ய அனுமதி உண்டு. ஆனால் ஒரு பௌலர் தான் சூப்பர் ஓவரில் உள்ள ஆறு பந்துகளையும் வீச வேண்டும்.

சூப்பர் ஓவரில் பேட்ஸ்மேன் பௌண்டரிக்கு பந்தை விளாசினால், பேட்டிங் அணிக்கு 6 ரன்கள் கிடைக்கும். பேட்ஸ்மேன் எல்லைக் கோட்டிற்கு அப்பால் நேரடியாக அடித்தால் 10 ரன்கள் கிடைக்கும் ஆனால் பேட்ஸ்மேன் அவுட்.

எல்லைக்கோட்டிற்கு அப்பால் அடித்ததை தாண்டி வேறு ஏதாவது முறையில் பேட்ஸ்மேன் அவுட் ஆனால் பேட்டிங் செய்யும் அணியின் மொத்த ரன்களில் 10 ரன்கள் கழிக்கப்படும்.

இரண்டு அணிகளும் நிச்சயம் ஆறு பந்துகளையும் எதிர்கொள்ள வேண்டும். ஒரு வேளை மூன்று விக்கெட்டுகளும் விரைவில் வீழ்ந்துவிட்டால் ஆறு பந்துகளை பேட்டிங் அணி எதிர்கொள்ள முடியாது. ஒரு அணியின் இறுதி ஸ்கோர் என்பது ஆறு பந்துகள் சந்தித்த பின்னரே முழுமையாக கணக்கிடப்படும். அதன் அடிப்படையிலேயே வெற்றியாளர் யார் என்பது தெரியும்.

ஒரு வேளை சூப்பர் ஓவரில் முடிவு கிடைக்காத பட்சத்தில் முடிவு கிடைக்கும் வரை மீண்டும் சூப்பர் ஓவர் நடத்தப்படும்.

*இவை தவிர களத்தில் சம்பந்தப்பட்ட சூழ்நிலைக்கேற்ப விதிகளில் மாற்றம் செய்ய நடுவருக்கு அதிகாரம் உண்டு. நடுவரின் எந்த வித தீர்ப்பும் இறுதியானது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: