கிரிக்கெட்: 'என் வாழ்நாள் முழுவதும் வருந்தும் செயல்' : கண்ணீர் மல்க மன்னிப்பு கோரிய ஸ்மித்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடந்த கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் கேமரன் பேன்கிராஃப்ட் பந்தை சேதப்படுத்தியதாக கூறப்பட்ட குற்றச்சாட்டில் தனது பங்கு குறித்து மன்னிப்பு கோரிய முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் கண்ணீர் சிந்தினார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption மன்னிப்பு கோரிய ஸ்டீவ் ஸ்மித்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடந்த மூன்றாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் பந்தை சேதப்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்ட பின்னர், டேவிட் வார்னர் மற்றும் கேமரன் பேன்கிராஃப்ட் ஆகியோருக்கு கிரிக்கெட் ஆஸ்திரேலியா அமைப்பு தடை விதித்தது.

ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னருக்கு கிரிக்கெட் ஆஸ்திரேலியா 12 மாதங்கள் தடை விதித்துள்ளது.

அதேவேளையில், பந்தை சேதப்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்ட வேக பந்து வீச்சாளர் கேமரன் பேன்கிராஃப்ட்டுக்கு 9 மாதங்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சிட்னியில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ஸ்டீவ் ஸ்மித், ''எனது தலைமை பொறுப்புக்கு கிடைத்த தோல்வி இது'' என்று கூறினார்.

படத்தின் காப்புரிமை Getty Images

டேவிட் வார்னர் மற்றும் கேமரன் பேன்கிராஃப்ட் ஆகியோரும் தங்கள் செயலுக்கு வருத்தம் தெரிவித்தனர்.

''நடந்ததற்கு நான் மிகவும் வருந்துகிறேன். கிரிக்கெட் விளையாட்டை நான் மிகவும் நேசிக்கிறேன். நான் நேசிக்கும் இந்த அற்புதமான விளையாட்டை குழந்தைகள் விரும்பி விளையாடுவதை நான் எப்போதும் விரும்புவேன்'' என்று ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்தார்.

செய்தியாளர்களிடம் மேலும் பேசிய ஸ்மித், ''எனது அணி சகாக்கள் மற்றும் உலகெங்கும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள், மற்றும் நடந்த செயலுக்காக எங்கள் மீது கோபமும், ஏமாற்றமும் அடைந்துள்ள அனைத்து ஆஸ்திரேலியர்களிடமும் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். ஆஸ்திரேலிய கேப்டனாக நடந்த சம்பவத்துக்கு நான் முழு பொறுப்பேற்கிறேன்'' என்று குறிப்பிட்டார்.

''இது குறித்து என் வாழ்நாள் முழுவதும் வருந்துவேன் என்பது எனக்கு தெரியும். சிறிது காலத்தில் இழந்த மரியாதையை பெறுவேன் என்றும், எனக்கு மன்னிப்பு கிடைக்கும் என்றும் நம்புகிறேன்'' என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இதே போல், தனது டிவிட்டர் வலைதளத்தில் முன்னாள் துணை கேப்டன் டேவிட் வார்னரும், ஆஸ்திரேலியா மற்றும் உலகெங்கும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களிடம் தனது செயலுக்கு மன்னிப்பு கோரினார்,

பிபிசி தமிழின் பிரத்யேக தெரு கிரிக்கெட் விதிகள் - 25

லீமன் விலகல்?

இதற்கிடையே, ஆஸ்திரேலியாவின் தலைமை பயிற்சியாளரான டேரன் லீமன் தனது பதவியில் இருந்து விலக உள்ளதாக கூறப்படுகிறது.

தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக வரும் வெள்ளிக்கிழமையன்று தொடங்கவுள்ள 4-ஆவது டெஸ்ட் முடிந்ததும் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து லீமன் விலக உள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images

ஸ்மித், வார்னருக்கு ஓராண்டு தடை

முன்னதாக, பந்தை விதிமுறையை மீறி சேதப்படுத்தியது தொடர்பான விவகாரத்தில், அந்த அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் துணை கேப்டன் டேவிட் வார்னருக்கு கிரிக்கெட் ஆஸ்திரேலியா 12 மாதங்கள் தடை விதித்தது.

இதனையடுத்து, வரவிருக்கும் 2018 ஐபிஎல் தொடரிலும் இந்த இரண்டு வீரர்களும் பங்கேற்க பிசிசிஐ (இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியம்) தடை விதித்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

தென் ஆஃபிரிக்காவுடனான டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் கேமரன் பேன்கிராஃப்ட் பந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டதை அடுத்து இந்த போட்டிகளில் எஞ்சியுள்ள நாட்களில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் மற்றும் துணை கேப்டன் பதவியில் இருந்த ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் ஆகிய இருவரும் பதவி விலகினர்.

வேக பந்து வீச்சாளர் கேமரன் பேன்கிராஃப்ட் பந்தை சேதப்படுத்தியது தொடர்பான விசாரணை தொடங்கிய நிலையில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் உடனடியாக பதவி விலக வேண்டும் என அந்நாட்டு அரசின் அமைப்பான ஆஸ்திரேலிய விளையாட்டு ஆணையம் வலியுறுத்தி இருந்தது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :