இனி என் நாட்டிற்காக விளையாடப் போவதில்லை: ஆஸ்திரேலிய வீரர் வார்னர்

வார்னர்

தென் ஆஃபிரிக்காவுக்கு எதிராக நடந்த கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் பந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் "இனி தாம் விளையாட முடியாது" என்பதை அறிந்து, தன் நாட்டுக்காக விளையாட போவதில்லை என்று அறிவித்துள்ளார்.

தென் ஆஃபிரிக்காவுக்கு எதிராக நடந்த மூன்றாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் பந்தை சேதப்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்ட பின்னர், டேவிட் வார்னர் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோருக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியமான 'கிரிக்கெட் ஆஸ்திரேலியா' அமைப்பு தடை விதித்தது.

இந்நிலையில் 31 வயதான டேவிட் வார்னர், "இந்த சம்பவத்தில் தம் பங்கிற்கு தாம் பொறுப்பேற்றுக் கொள்வதாகக் கூறி அதற்கு மன்னிப்புக் கோரினார்".

"கிரிக்கெட் விளையாடுவதன் மூலம் என் நாட்டுக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்றே நினைத்தேன்" என வார்னர் தெரிவித்தார்.

படக்குறிப்பு,

ஆஸ்திரேலியா திரும்பிய டேவிட் வார்னர்

"என் நாட்டின் மக்கள் அனைவருக்கும்… நீங்கள் கிரிக்கெட் ரசிகராக இருந்தாலும், இல்லை என்றாலும், நான் செய்த இந்த காரியத்திற்கு மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். இது என் நாட்டின் நற்பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தியதற்காக வருந்துகிறேன்" என்று உணர்ச்சிகரமாக கூறினார் வார்னர்.

"என் உயிர் உள்ளவரை இதற்காக வருந்துவேன்" என்றார் அவர்.

வார்னர் என்ன கூறினார்?

சம்பவம் நடந்த பின் முதன்முறையாக செய்தியாளர்களை சந்தித்த வார்னர்:

  • ஆஸ்திரேலியாவுக்கு மீண்டும் விளையாடுவோம் என்று சிறிய நம்பிக்கை இருந்ததாக குறிப்பிட்ட வார்னர், ஆனால் அது முடியாது என்ற உண்மையை அறிந்து தாம் விலகி விட்டதாக தெரிவித்தார்.
  • அவர் கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் மறுபரிசீலனையை தாம் முழுமையாக ஆதரித்ததாக கூறினார்.
  • தன் செயல்கள் மற்றும் அது ஏற்படுத்திய விளைவுகளுக்கு தாம் பொறுப்பேற்றுக் கொள்வதாக வார்னர் தெரிவித்தார்.

பந்தை சேதப்படுத்திய சம்பவத்தில் ஆஸ்திரேலிய அணியின் வேறு வீரர்கள் யாரேனும் ஈடுபட்டார்களா என்ற கேள்விக்கு வார்னர் நேரடியாக பதிலளிக்கவில்லை.

இது தொடர்பாக தனது ட்விட்டர் பதிவில், "உங்களின் பல கேள்விகளுக்கு நான் பதிலளிக்கவில்லை. சில காலம் கழித்து இந்த கேள்விகளுக்கு பதிலளிக்க முயற்சிக்கிறேன்" என்றார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: