பிபிசி சாம்பியன் கோப்பையை வென்ற ராமநாதபுரம் சீ ரைடர்ஸ் #BBCStreetCricket

பிபிசி சாம்பியன் கோப்பையை வென்ற ராமநாதபுரம் சீ ரைடர்ஸ் #BBCStreetCricket

பிபிசி தமிழின் ஸ்ட்ரீட் கிரிக்கெட் #BBCStreetCricket போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஈரோடு அணியை வீழ்த்திய ராமநாதபுரம் சீ ரைடர்ஸ் அணி கோப்பையை கைப்பற்றியுள்ளது.

விறுவிறுப்பான இறுதிப் போட்டியில், முதலில் பேட் செய்த ராமநாதபுரம் அணி 99 ரன்கள் எடுத்தது. 100 ரன்களை இலக்காக வைத்து ஆடத்தொடங்கிய ஈரோடு அணி, முதலில் அதிக சிக்சர்கள் அடித்து, அதிக ரன்களை குவிக்கத் தொடங்கியது.

ஆனால், இக்கட்டான நேரத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததால் நான்காவது ஓவரிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 81 ரன்களில் சுருண்டது.

19 ரன்கள் வித்தியாசத்தில் சாம்பியன் கோப்பையை கைப்பற்றிய ராமநாதபுரம் சீ ரைடர்ஸ் அணி, தாங்கள் வெற்றி பெற்றது பெரும் உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் அளிப்பதாக தெரிவித்தனர்.

500 கிலோ மீட்டர்கள் கடந்து வந்து, பல அணிகளுடன் மோதி வெற்றி பெற்றுள்ளது ராமநாதபுரம் சீ ரைடர்ஸ் .

பிபிசி தமிழ் நடத்திய ஸ்ட்ரீட் கிரிக்கெட் போட்டிகள் சென்னை மந்தைவெளியில் நடைபெற்றன. இரண்டு அரை இறுதி போட்டிகளும், அதனைத் தொடர்ந்து இறுதி போட்டியும் நடைபெற்றது.

முதல் அரை இறுதி போட்டி

முதல் அரை இறுதிப் போட்டியில், சென்னை சூப்பர் வாரியர்ஸ் அணியும், ராமநாதபுரம் சீ ரைடர்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற சென்னை அணி ராமநாதபுரம் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.

படத்தின் காப்புரிமை facebook.com/trusharbarot

சிறப்பாக பேட்டிங் செய்த ராமநாதபுரம் அணி, 102 ரன்கள் குவித்தது. 103 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு களமிறங்கியது சென்னை சூப்பர் வாரியர்ஸ் அணி.

முதலாவது ஓவர் முடிவிலேயே, முதல் விக்கெட்டை இழந்ததோடு, அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்த வண்ணம் இருந்தன.

43 ரன்களில், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து சென்னை அணி தோல்வியை தழுவியது.

இரண்டாவது அரை இறுதிப் போட்டி

திருச்சி சிங்கம் மற்றும் ஈரோடு ஸ்டார்ஸ் இடையேயான இரண்டாவது அரை இறுதி போட்டி மதியம் 1:30 மணியளவில் தொடங்கியது.

டாஸ் வென்ற திருச்சி அணி, பந்து வீச்சை தேர்வு செய்தது.

சிறப்பாக பேட்டிங் செய்த ஈரோடு அணி, முதல் ஓவரிலேயே 40 ரன்களை குவித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

பொறுமையாக விளையாடி, ஒரு கட்டத்தில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த ஈரோடு அணி ஆட்ட இறுதியில் 138 ரன்களை குவித்தது.

139 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு களமிறங்கிய திருச்சி அணியால் முதல் ஓவரில் மூன்று ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

பவர் ப்ளே ஓவர்களை சரியாக பயன்படுத்தினாலும், ஆட்ட இறுதியில் திருச்சி அணியால் 117 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

ஸ்ட்ரீட் கிரிக்கெட்டுக்கு பெயர் போன தமிழகம்

தமிழகம் முழுவதும் பரவலாக விளையாடப்படுவது கிரிக்கெட். இடம், சூழ்நிலை, வீரர்களின் எண்ணிக்கை ஆகியவற்றை பொறுத்து சர்வதேச அளவில் விளையாடப்படும் கிரிக்கெட் விதிகளில் மாற்றங்கள் செய்து பல தரப்பினராலும் பல்வேறு இடங்களில் கிரிக்கெட் விளையாடப்படுகிறது.

அவ்வளவு ஏன்? ஐ பி எல்லில் ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிக்காக விளையாடும் தமிழகத்தைச் சேர்ந்த நடராஜன் முதல் பல வீரர்கள் ஸ்ட்ரீட் கிரிக்கெட்டில் இருந்துதான் தங்களது பயணத்தை துவங்கியிருக்கிறார்கள்.

தெருக்கள், காலி வகுப்பறைகள், ஆற்றங்கரையோரங்களில் கடற்கரை, மொட்டை மாடி என எங்கும் கிரிக்கெட் விளையாடப்படுகிறது. தமிழகத்தின் ஓர் அடையாளமாக மாறத் துவங்கியிருக்கும் வீதி கிரிக்கெட்டில் என்னென்ன வேடிக்கையான விதிகள் இருக்கிறதோ அதனை அடிப்படையாக கொண்டு பிபிசி தமிழ், பிரத்யேக தனித்துவ ஸ்ட்ரீட் கிரிக்கெட் விதிகளை தயாரித்து போட்டிகளை நடத்தி முடித்தது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்