காமன்வெல்த் '18: இந்திய வீரர்கள் தங்கியுள்ள பகுதியில் கிடைத்த ஊசிகளும் மருந்து பாட்டில்களும்

  • ரெஹான் ஃபஜல்
  • பிபிசி

காமன்வெல்த் போட்டிகளில் கலந்துக் கொள்ளும் இந்திய அணியின் விக்ரம் சிசோடியாவை சந்தித்துவிட்டு திரும்பி வந்துக் கொண்டிருந்தபோது, அந்த செய்தி தெரியவந்தது. விளையாட்டு கிராமத்தில் இந்திய அணி தங்கியிருக்கும் இடத்தின் வெளியே ஒரு பாட்டிலும், சில ஊசி சிரிஞ்சுகளும் கிடைத்ததாக துப்புரவு தொழிலாளி ஒருவர் தெரிவித்தார்.

இந்தத் தகவல் கிடைத்த உடனேயே, காமன்வெல்த் கூட்டமைப்பு தலைவர் டேவிட் க்ரேவென்பெர்க் முழு விசாரணை நடத்த உத்தரவிட்டார்.

நள்ளிரவுவரை விக்ரம் சிசோடியாவை தொடர்பு கொள்ள முயற்சித்தேன், ஆனால் அவரை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முடியவில்லை. ஆனால் அவருக்கு அடுத்த நிலையில் பொறுப்பு வகிக்கும் அஜய் நாரங் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் இந்த விஷயத்தை மறுத்தார். மருந்து பாட்டில்கள் பற்றிய செய்தி தனக்கு தெரியவந்ததும், அந்த பாட்டில்களை திறக்காமல் அப்படியே காமன்வெல்த் அதிகாரிகளிடம் அனுப்பி வைத்ததாக கூறுகிறார்.

இந்திய அணிக்கும் அந்த பாட்டிலுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. தடை செய்யப்பட்ட மருந்துகள் தொடர்பாக விளையாட்டு கிராமத்தில் பின்பற்றப்படும் விதிகள் மிகவும் கடுமையானவை. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள வீரர்களும் அதிகாரிகளும் மட்டுமே விளையாட்டு கிராமத்திற்குள் சிரிஞ்சுகளை கொண்டுவரமுடியும். அதற்காக அவர்கள் உரிய அனுமதியையும் பெற வேண்டும்.

ரியோ ஒலிம்பிக் போட்டிகளின்போதும் இந்திய அணியின் குடியிருப்புக்கு அருகில் இருந்து இதேபோன்ற சிரிஞ்சுகள் கண்டெடுக்கப்பட்டன. இந்த முழு அத்தியாயமும் இரண்டு வெவ்வேறு கதைகளை சொல்கின்றன.

முதல் கதையின்படி, துப்புரவு தொழிலாளிக்கு முதலில் இந்த சிரிஞ்சுகள் பற்றி தெரியவந்தது என்றால், இரண்டாவது கதையிலோ நாரங் தானே நேரிடையாக சிரிஞ்சுகளை எடுத்துச் சென்று அதிகாரிகளிடம் கொடுத்ததாக சொல்கிறார். முழு விசாரணைக்குப் பின்னரே உண்மை வெளிவரும். ஆனால் விளையாட்டு போட்டிகள் தொடங்குவதற்கு முன்னரே அபாயகரமான வேடிக்கை-விளையாட்டுகள் தொடங்கிவிட்டன.

பிரிஸ்பேன் நகரில் ஒன்பது இந்திய பத்திரிகையாளர்கள் கைது செய்யப்பட்டனர்

போலி ஆவணங்கள் மூலம் ஆஸ்திரேலியா செல்ல முயன்றதான குற்றச்சாட்டில் இந்திய பத்திரிகையாளர்கள் ஒன்பது பேர் பிரிஸ்பேன் நகரில் கைது செய்யப்பட்டதாக வெளியான செய்திகள் இந்தியாவிற்கு களங்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன.

சிலர் போலி ஆவணங்களின் உதவியுடன் ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய முயற்சிக்கலாம் என்ற தகவல் ஏற்கனவே பாங்காக்கில் இருந்து வந்துவிட்டதாக ஆஸ்திரேலிய எல்லை பாதுகாவல் படை தெரிவித்தது.

எனவே தீவிரமான கண்காணிப்பின்போது, ஒருவரைத் தவிர, மற்ற அனைவரும் வெளிநாட்டு ஊடகங்களின் போலி அடையாள அட்டைகளை வைத்திருந்ததாக கண்டுபிடிக்கப்பட்டது. பத்திரிகையாளர் ராகேஷ் குமார் சர்மாவிடம் மட்டுமே உண்மையான அடையாள அட்டை இருந்தது, மற்ற எட்டு பேரும் அவரை அண்டி வந்திருந்தனர்.

ஷர்மாவிடம் ஆஸ்திரேலிய போலிஸ் விசாரணை செய்ய முயன்றபோது, தனக்கு ஆங்கிலம் தெரியாது என்று அவர் சொன்னார். எனவே அவருக்காக ஹிந்தி மொழிபெயர்ப்பாளரை போலிசார் ஏற்பாடு செய்கின்றனர். தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ள அவரது ஜாமீன் மனு ஏப்ரல் ஆறாம் தேதியன்று விசாரிக்கப்படும்.

போலி ஆவணங்களின் மூலம் ஆஸ்திரேலியாவிற்குள் நுழைய ஷர்மா முயன்றதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், அவருக்கு இருபது ஆண்டுகள் தண்டனை வழங்கப்படலாம்.

தொடக்க விழாவில் மழையின் சீற்றம்

தொடக்க விழா மற்றும் நீச்சல் போட்டி நாளுக்கு முதல் நாள், மழை பெய்யக்கூடும் என்ற வானிலை முன்னறிவிப்பு, மக்களிடையே சற்று ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

அங்குள்ள விளையாட்டு அரங்கில் ஒரு வித்தியாசமான விதிமுறை இருக்கிறது. அதன்படி, ஒருவர் அரங்கத்திற்குள் குடையை எடுத்துச் செல்லலாம், ஆனால் அதை திறக்கக்கூடாது.

அதாவது, மழை வந்துவிட்டால் கராரா அரங்கம் மற்றும் திறந்தவெளியில் அமைந்துள்ள கோல்ட் கோஸ்ட் அக்வாடிக் மையத்தில் உட்கார்ந்திருக்கும் பார்வையாளர்கள் மழையில் நனைந்துக் கொண்டே நிகழ்ச்சிகளை பார்க்க வேண்டியிருக்கும்.

மழை பெய்து போட்டிகளின் சுவராசியத்தை கெடுத்துவிடக்கூடாது என்று பிரார்த்தனை செய்துக் கொள்ளுமாறு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் தலைவர் பீட்டர் பேடி மக்களிடம் கேட்டுக்கொண்டார்.

ஐரிசில் புயல் தொடர்வதால், புதனன்று சுமார் 10 மில்லிமீட்டர் வரை மழை பெய்யும் வாய்ப்பு இருக்கிறது. போட்டியின் முதல் நாளில் அதாவது அதாவது ஏப்ரல் 6 ம் தேதி 6 மி.மீ மழை பெய்யக்கூடும்.

35,000 பார்வையாளர்கள் கொண்ட கராரா அரங்கத்தில் சுமார் 5,000 பேர் அமரக்கூடிய இடத்தில் மட்டுமே மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது, மீதமுள்ள முப்பதாயிரம் பேர் திறந்த வெளியில் அமர வேண்டியிருக்கும்.

இதேபோல், நீச்சல் போட்டி நடைபெறும் அரங்கில் 12,000 இருக்கைகள் திறந்தவெளியில் அமைக்கப்பட்டுள்ளன. செல்ஃபி எடுக்க உதவும் நீள கம்பி, ஓசை எழுப்பும் கருவிகள் என அரங்கிற்குள் கொண்டு செல்ல கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருக்கும் பொருட்களின் பட்டியலில் குடையும் இடம்பெற்றுள்ளது. மழை பெய்வதற்கான சாத்தியங்கள் வலுவானதாக இருப்பதால், குடை மீதான தடை விலக்கப்படுமா இல்லையா என்பது இன்னமும் தெரியவில்லை.

ஸ்டீவ் ஸ்மித் மற்றும் வார்னர் இடையே மோதல்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடந்த மூன்றாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் டேவிட் வார்னர் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் பந்தை சேதப்படுத்தியதாக சர்ச்சைகள் எழுந்த பிறகு இருவருக்கும் இடையே ஏற்பட்ட மனகசப்பால் இருவரும் வெவ்வேறு விமானங்களில் நாடு திரும்பினார்கள்.

பொதுவாக அயல்நாடுகளில் போட்டிகளில் கலந்துக் கொள்வதற்கான பயணங்களில் அணியினர் அனைவரும் ஒரே விமானத்திலேயே பயணிப்பார்கள். ஆனால் சிங்கப்பூர் வழியாக செல்லும் விமானத்தில் ஸ்மித் பயணிக்க, வார்னர் துபாய் மார்க்கமாக தாயகம் திரும்ப முடிவு செய்தார். இருவரும் ஒரே விமானத்தில் பயணித்தால், கைகலப்பு ஏற்படலாம் என்ற ஊகங்கள் நிலவின.

இந்த இருவருக்கும் இடையிலான உறவுகள் எந்த அளவு மோசமாகிவிட்டதாக கூறப்படுகிறது தெரியுமா? ஓராண்டில் இவர்கள் இருவரின் மீதான தடை அகன்றுவிட்டாலும், ஒருவர் மட்டுமே ஆஸ்திரேலிய அணியில் சேர்த்துக் கொள்ளப்படுவார். அது ஸ்டீவ் ஸ்மித்தாக இருக்கலாம் என்பதற்கான சாத்தியங்களே அதிகம்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து வார்னர், ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் வாட்ஸ் ஆப் குழுவில் இருந்து விலகிவிட்டார், மேலும் அவரது குழுவின் பிற உறுப்பினர்களுடான தொடர்பு கிட்டத்தட்ட முறிந்தே போய்விட்டது.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியில் பிளவு ஏற்படாமல் இருக்கத்தான் டேவிட் வார்னர் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டார் என்றும் பேச்சு அடிபடுகிறது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: