'பத்ம பூஷண்' மகேந்திர சிங் டோனிக்கு குவியும் வாழ்த்து - ஏன் இந்த விருது தெரியுமா?

'பத்ம பூஷண்' மகேந்திர சிங் டோனிக்கு குவியும் வாழ்த்து - ஏன் இந்த விருது தெரியுமா?

இந்திய நாட்டின் மிக உயரிய விருதுகளில் ஒன்றாக கருதப்படும் பத்ம பூஷண் விருது கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் டோனிக்கு நேற்றைய தினம் (திங்கட்கிழமை) குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந் வழங்கிய நிலையில், தோனிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

நாட்டு மக்களை கெளரவிக்க மத்திய அரசு சார்பில் வழங்கப்படும் விருதுகளில் நாட்டின் மூன்றாவது உயரிய விருதாக பத்ம பூஷண் கருதப்படுகிறது.

ஏழு ஆண்டுகளுக்குமுன் மும்பையில் நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதியாட்டத்தில் தோனி தலைமையிலான இந்திய அணி இலங்கையை வீழ்த்தி வெற்றி பெற்றது. அதனை கெளரவிக்கும் விதமாக தோனிக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டது.

டோனியுடன் பில்லியர்ட்ஸ் விளையாட்டின் உலக சாம்பியன் பங்கஜ் அத்வானியும் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்திடம் பத்ம பூஷண் விருதை பெற்று கொண்டார்.

பிராந்திய ராணுவ படையில் கெளரவ அதிகாரியாக பதவி வகித்து வருவதால் நேற்று நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் ராணுவ உடை அணிந்திருந்தார் எம்.எஸ். டோனி.

அரசியல் தலைவர்கள் மற்றும் டோனியின் சக வீரர்கள் அனைவரும் பத்ம பூஷண் டோனியை பாராட்டி வருகின்றனர்.

அதேசமயம், குடியரசு தலைவரிடம் விருதை வாங்க சென்ற டோனி ராணுவ வீரரை போன்று நடந்த விதமும், டோனியின் நடையை ரசித்த அவரது மனைவி சாக்‌ஷி குறித்த காணொளியும் இணையத்தில் லைக்குகளை குவித்து வருகிறது.

2011 ஆம் ஆண்டு ஏப்ரல் 2 ஆம் தேதி உலகக்கோப்பை போட்டியின் இறுதியாட்டத்தில் இந்தியா - இலங்கை அணிகள் மோதின. பரபரப்பான இறுதியாட்டத்தில் 277 ரன்கள் இலக்காக இந்திய அணிக்கு இலங்கை நிர்ணயித்திருந்தது. முதல் ஏழு ஓவர்களுக்குள் சேவாக் மற்றும் சச்சின் விக்கெட்கள் சரிய டோனி - காம்பீர் இணை 109 ரன்களை எடுத்து கோப்பையை கைப்பற்ற வித்திட்டனர். சரியாக ஏழு ஆண்டுகள் கழித்து 2018 ஆண்டு அதே நாளில் டோனிக்கு நாட்டின் உயரிய விருதான பத்ம பூஷண் வழங்கப்பட்டுள்ளது. 1983 ஆம் ஆண்டு கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி உலகக்கோப்பையை கைப்பற்றிய நிலையில், 24 ஆண்டுகளுக்கு பிறகு டோனி தலைமையிலான இந்திய அணி சாதித்து காட்டியது. இதனை குறிப்பிட்டு சமூக ஊடகங்களில் டோனியை இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்தியாவில் மிகவும் வெற்றிகரமான கிரிக்கெட் கேப்டன்களில் ஒருவராக கருதப்படுவர் டோனி.

வெற்றி பெற்ற போதும், தோல்வியை தழுவிய போதும் எப்போதும் நிதானத்துடன் செயல்பட்டதாகவும், தனக்கென ஒரு பாணியை கிரிக்கெட்டில் உருவாக்கி அதில் வெற்றிபெற்றதாகவும் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

அவரது தலைமையில் இந்திய கிரிக்கெட் அணி சில போட்டிகளில் பெற்ற வெற்றிகள் கிரிக்கெட் ரசிகர்களால் மறக்க முடியாத அழகிய நினைவுகள்.

2007 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக 20-20 போட்டியிலும், 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராஃபி போட்டியிலும் இந்திய அணியை வழிநடத்தி சென்றவர் டோனி என்பது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: