இந்தியாவின் தங்க மங்கை ‘மிராபாய்’ - அவர் செய்த தியாகங்கள் என்ன?

  • வந்தனா
  • ஆசிரியர், பிபிசி
மிராபாய் சானு

23 வயது பளுதூக்கும் வீராங்கனையான மிராபாய் சானு கடந்த வருடம் 48 கிலோ எடைப்பிரிவில் உலக சாம்பியன் பட்டத்தை வென்றார் ஆனால் ரியோ ஒலிம்பிக்கில் போட்டியை முடிக்காமல் வெளியே வந்தவர் என்ற பட்டியலில் அவரது பெயர் இடம்பெற்றிருந்தது.

ரியோ ஒலிம்பிக்கில் அவர் பளுதூக்கும் முயற்சியில் முற்றிலுமாக தோற்றுப் போயிருந்தார். வழக்கமாக பயிற்சி செய்யும்போது அத்தகைய எடையை தூக்கிவந்தவர், போட்டி நடந்த அன்று கைகள் உறைந்ததில் அவர் எவ்வளவு முயற்சித்தும் குறிப்பிட்ட அந்த பளுவை அவரால் தூக்க இயலவில்லை. அப்போது இந்தியாவில் இரவு நேரம். அவர் தோல்வி அடைந்ததை தொலைக்காட்சியில் சிலர் பார்த்திருந்தனர்.

படக்குறிப்பு,

மிராபாய் சானு

இந்தியர்கள் மறுநாள் காலை கண்விழித்ததும், மிராபாய் இந்திய விளையாட்டு ரசிகர்களுக்கு வில்லனாக தெரிந்தார். அவர் சமூக வலைத்தளங்களில் நகைச்சுவைக்கு உள்ளானார். இதையடுத்து மிராபாய் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு, மன நல ஆலோசனையும் நாடினார்.

கடுமையான அந்தத் தோல்விக்கு பிறகு, இனிமேல் விளையாட்டை விட்டுவிடலாம் என்ற முடிவுக்கு வந்திருந்தார். ஆனால் அவரது குடும்பம் மற்றும் பயிற்சியாளர்கள் ஆகியோரிடம் இருந்து கிடைத்த உதவிகளால் அவர் மெல்ல மீண்டார்.'

கடந்த வருடம் மிரா மிகச்சிறந்த வெற்றியுடன் தன்னை நிரூபித்து காட்டினார். அவரது எடையை விட நான்கு மடங்கு அதிகமாக, அதாவது 194 கிலோ எடையை தூக்கி கடந்த ஆண்டின் (2017) உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றார் .

உலக சாம்பியன்ஷிப்பில் வெற்றி பெற்ற போது அவரது கண்களில் இருந்து வெளிவந்த கண்ணீர் ஒலிம்பிக்கில் தோல்வியடைந்ததில் இருந்து அனுபவித்த வலிக்கு சாட்சியாக இருந்தது.

மீரா தனது எடையை கட்டுக்குள் வைக்க உணவுகளை தியாகம் செய்தார். உலக சாம்பியன்ஷிப்புக்காக தயாராவதா அல்லது தங்கையின் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்வதா என்ற கேள்வி வந்தபோது தங்கையின் திருமண நிகழ்வில் கலந்து கொள்வதை தியாகம் செய்தார். அந்த தியாகங்களுக்கு பலனாக தங்கப்பதக்கமும் ஒருநாள் உலக சாம்பியன்ஷிப் பட்டமும் அவருக்கு கிடைத்தது.

மணிப்பூரில் இம்பாலில் இருந்து 200 கிமீ தொலைவில் உள்ள ஒரு சிறு கிராமத்தில் 1994 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8 அன்று பிறந்தார் மிராபாய். குழந்தையாக இருக்கும்போதே இந்திய பளுதூக்கு வீராங்கனை குஞ்சுராணி தேவியின் மிகப்பெரிய ரசிகையாகவும் இருந்திருக்கிறார்.

ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் குஞ்சுராணி தேவி இந்தியா சார்பாக பங்கேற்றது அவரது மூளையில் நன்றாக பதிந்தது, அவரும் பளுதூக்கும் வீரராக வேண்டும் என முடிவு செய்தார்.

ஆரம்பத்தில் அவருக்கு பயிற்சி செய்ய தகுந்த இரும்பு பொருட்கள் இல்லை. இதனால் மூங்கில் கட்டைகளை வைத்து பயிற்சி செய்தார். அருகிலுள்ள பயிற்சி மையத்திற்கு செல்வதற்காக சுமார் 50 -60 கிலோமீட்டர் நடந்து சென்றுள்ளார்.

அவருக்கு அன்றாடம் பால் மற்றும் கோழிக்கறி தேவைப்பட்டபோது அவரது பெற்றோர்களால் அதனை மிராவுக்கு அளிக்கமுடியாத நிலையில் இருந்தனர். ஆனால் இவை எல்லாம் மிராவின் பயணத்தை தடைபோடவில்லை.

பதினைந்து வயத்துக்குட்பட்டோருக்கான போட்டிகளில் மிரா சாம்பியன் பட்டம் வென்றபோது அவருக்கு வயது 11, ஜுனியர் சாம்பியன் பட்டத்தை வென்றபோது வயது 17. கடந்த 2016-ம் ஆண்டில் தனது முன்மாதிரியான குஞ்சுராணியின் 12 வருட சாதனையை 192 கிலோ எடையை தூக்கியதன் மூலம் தகர்த்தெறிந்தார்.

இன்னமும் மிராபாய்க்கு வருமானம் என்பது பிரச்சனையாகவே இருக்கிறது. அடுத்து வரவுள்ள ஒலிம்பிக்கிற்கு அவர் தகுதி பெற்றால் மட்டுமே அவர் பளுதூக்குதலில் தொடர்ந்து ஈடுபடுவார். இல்லையெனில் அதனை விட்டுவிடுவார்.

ஆனால் ஒலிம்பிக்கில் தகுதி பெறுவது இன்னும் மிகச் சிக்கலான காரியமாகிவிடவில்லை. கடந்த ஆண்டு உலகசாம்பியன் வென்ற மிரா கடந்த 2014-ல் ஏற்கனவே கிளாஸ்கோ காமன்வெல்த்தில் வெள்ளிப் பதக்கமும் வென்றுள்ளார். ஆனால் இந்த முறை தங்கப்பதக்கத்தை வெல்லும் முனைப்போடு இருக்கிறார்.

பளுதூக்குதலுக்கு அப்பால் மிராபாய் நாட்டியத்தில் விருப்பமுடையவரார். பிபிசி பேட்டியொன்றில் அவர் சிரித்து கொண்டே '' சில சமயங்களில் நான் கதவைச் சாத்திவிட்டு எனது மனம் போன போக்கில் நடனமாடுவேன். எனக்கு சல்மான்கான் படங்கள் என்றால் பிடிக்கும்'' என்றார்.

காமன்வெல்த் போட்டிகள் மட்டுமின்றி அவர் ஆசிய போட்டிகள் மற்றும் 2020 டோக்கியோ ஒலிம்பிக் ஆகியவற்றின் மீதும் முழு கவனம் செலுத்தி வருகிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: