காஷ்மீர்: சமூக ஊடகத்தில் இந்திய, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் மோதல்

இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் காஷ்மீர் பிரச்சனை தொடர்பான மோதல் தற்போது இரு நாட்டு கிரிக்கெட் வீரர்களிடையிலான மோதலாக சமூக ஊடகத்தில் பிரதிபலிக்கிறது.

கௌதம் கம்பீர் மற்றும் அஃப்ரிடி

இந்தியாவும், பாகிஸ்தானும் மாறி மாறி உரிமைகோரி வருகின்ற காஷ்மீர் பகுதி தொடர்பாக டுவிட்டரில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் ஷாஹித் அஃப்ரிடியும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் கௌதம் கம்பீரும் வார்த்தைகளால் மோதியுள்ளனர்.

'இந்திய ஆக்கிரமிப்பு காஷ்மீரில்' நிலைமை பயங்கரமாக, கவலைக்குரியதாக உள்ளது என்று செவ்வாய்க்கிழமை அஃப்ரிடி டுவிட்டரில் பதிவிட்டிருந்தார். சுய நிர்ணய உரிமை மற்றும் விடுதலைக்கான குரலை ஒடுக்குவதற்காக, ஆதிக்க அரசினால் அப்பாவிகள் சுட்டு வீழ்த்தப்படுவதாகவும் அந்தப் பதிவில் அவர் குறிப்பிட்டிருந்தார். ஐ.நா. போன்ற சர்வதேச அமைப்புகள் ஏன் ரத்தக்களரியை நிறுத்த முயற்சி எடுக்கவில்லை என்றும் அவர் கேட்டிருந்தார்.

இதற்குப் பதில் அளித்து ட்வீட் செய்த இந்திய கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர், அஃப்ரிடி ஐ.நா.வைத் தேடுகிறார். அவரது குறைபாடுள்ள அகராதியில் யு.என். என்பதற்கு 'அன்டர் நைன்டீன்' (19 வயதுக்கு கீழுள்ளவர்கள்) என்று பொருள் என்றும், அது அஃப்ரிடியின் வயதைக் குறிப்பதாகவும் கிண்டல் செய்துள்ளார். நோ பாலில் அவுட் செய்துவிட்டு கொண்டாட்டத்தில் உள்ளார் அஃப்ரிடி என்றும் அவர் தமது ட்வீட்டில் குறிப்பிட்டுள்ளார்.

60 ஆண்டுகளுக்கு மேலான காஷ்மீர் பிரச்சனை வன்முறையை உருவாக்குவதாக இருந்து வருகிறது. இது தொடர்பாக இரு நாடுகளும் இரண்டு போர்களை நடத்தியுள்ளன.

ஸ்ரீநகரின் தென் பகுதியில் நடைபெற்ற துப்பாக்கி சண்டைகளில் இந்தியப் படையினர் குறைந்தது 3 பேரும், தீவிரவாதிகள் என்று சந்தேகப்படும் 13 பேரும் ஞாயிற்றுக்கிழமை கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த மோதல்களால் ஏற்பட்ட போராட்டங்களில் குடிமக்கள் 4 பேர் பலியாகியுள்ளனர், 200க்கு மேலானோர் காயமடைந்துள்ளனர்.

காஷ்மீரிலுள்ள நிலைமை பற்றிய அஃப்ரிடியின் புரிதலை கம்பீர் நிராகரித்துள்ளார்.

இன்னொரு ட்வீட் மூலம் அஃப்ரிடி பதிலளித்துள்ளார். இந்திய கிரிக்கெட் ரசிகர்களோடு அஃப்ரிடி நின்று எடுத்திருந்த புகைப்படத்தோடு இந்த முறை பதில் வந்தது. நாம் எல்லோரையும் மதிக்கிறோம். இது (புகைப்படம்) விளையாட்டு வீரராக ஓர் எடுத்துக்காட்டு. ஆனால், மனித உரிமை என்று வரும்போது (இதுபோன்ற ஆதரவை) அப்பாவி காஷ்மீரிகளுக்கும் எதிர்பார்க்கிறோம் என்று அவர் பதிலளித்தார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களில் காஷ்மீர் பற்றி சமீபத்தில் டுவிட்டரில் பதிவிட்டவர் அஃப்ரிடி மட்டுமல்ல. அரசியல்வாதியாக மாறிய கிரிக்கெட் வீரர் இம்ரான்கானும் ஐக்கிய நாடுகள் அவை தலையிட வேண்டும் என்று வலியுறுத்தி திங்கள்கிழமை ட்வீட் செய்திருந்தார்.

காஷ்மீர் பிரச்சினை இந்தியர்களுக்கும், பாகிஸ்தானியருக்கும் இடையில் கடும் எதிர்வினைகளை உருவாக்குகிறது.

1980களின் பிந்தைய ஆண்டுகள் தொடங்கி, இந்திய ஆட்சிக்கு எதிராக பிரிவினைவாதிகள் வன்முறை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் நடைபெறுகின்ற மோதல்களால் ஆயிரக்கணக்கானோர் பலியாகியுள்ளனர்.

போராட்டக்காரர்களுக்கு எதிராக அதீதமான பலப்பிரயோகம் செய்யப்படுவதாக இந்தியப் பாதுகாப்புப் படைகள் அடிக்கடி குற்றஞ்சாட்டப்படுகின்றன. இதை இந்திய அரசு மறுத்து வருகிறது.

காஷ்மீர் பிரச்சினை

1947ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிரிட்டனிடம் இருந்து இந்தியா சுதந்திரம் வாங்குவதற்கு முன்னரே, காஷ்மீர் சர்ச்சைக்குரிய பகுதியாகவே இருந்தது.

இந்திய சுதந்திர சட்டத்தின்படி வழங்கப்பட்டுள்ள பிரிவினை திட்டத்தின் கீழ், இந்தியா அல்லது பாகிஸ்தானோடு இணைவதற்கான சுதந்திரம் காஷ்மீருக்கு இருந்தது.

காஷ்மீரை ஆண்டு வந்த மகாராஜா ஹரி சிங் இந்தியாவோடு இணைய முடிவு செய்தார். இதையடுத்து யுத்தம் மூண்டு இரண்டாண்டுகள் நடந்தன.

1965ம் ஆண்டு இன்னொரு போர் நடைபெற்றது. 1999ம் ஆண்டு பாகிஸ்தானின் ஆதரவு பெற்ற படைப்பிரிவுகளோடு சிறிய, ஆனால் கசப்பான போரை இந்தியா நடத்தியுள்ளது.

இதனிடையே, இந்தியாவும், பாகிஸ்தானும் தங்களை அணு ஆயுத சக்திகளாக அறிவித்துக்கொண்டுள்ளன.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: