"வாழ்வின் நம்ப முடியாத தருணம்" - தங்கம் வென்ற சதீஷ் பிபிசிக்கு பேட்டி

சதீஷ் குமார் சிவலிங்கம் படத்தின் காப்புரிமை Getty Images

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டிகளில், 77 கிலோ பளு தூக்கும் பிரிவில் தங்கம் வென்ற சதீஷ் குமார் சிவலிங்கம், ”இது தன் வாழ்வில் நம்ப முடியாத தருணம்” என்று பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தை சேர்ந்த சதீஷ், இரண்டாவது முறை தங்கம் வென்று இருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாக தெரிவித்தார்.

பளு தூக்குவதில் ஒரு பிரிவில் 144 கிலோவும், மற்றொரு பிரிவில் 173 கிலோவும் மொத்தம் 317 கிலோ எடை தூக்கி தங்கத்தை கைப்பற்றியுள்ளார் சதீஷ்.

தமிழகத்தின் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த இவர், உயரிய விருதுகளில் ஒன்றான அர்ஜுனா விருதை பெற்றுள்ளார்.

நடுத்தர குடும்பத்தை சேர்ந்த இவர் சிறு வயதிலிருந்தே பளு தூக்குவதில் ஆர்வம் காட்டி வந்தார்.

ஆஸ்திரேலியாவில் இருந்து பிபிசி தமிழ் செய்திகளுக்காக பேசிய அவர், இறுதி கட்டத்தில் தமக்கு பதட்டமாக இருந்தாலும், வெற்றி பெற்று விடுவேன் என்ற நம்பிக்கை இருந்ததாக குறிப்பிட்டார்.

படத்தின் காப்புரிமை Mark Metcalfe
Image caption சதீஷ் குமார் சிவலிங்கம்

இந்த பதக்கத்தை, தனது பயிற்சியாளர் மற்றும் பெற்றோருக்கு சமர்ப்பிப்பதாகவும் சதீஷ் கூறினார்.

உடலில் சில காயங்கள் உள்ளதால், வரும் ஆசிய போட்டிகளில் கலந்து கொள்வது குறித்து யோசிக்க உள்ளதாக அவர் தெரிவித்தார்.

2014 ஆம் ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் போட்டியிலும் தங்கம் வென்ற சதீஷ், பதக்கம் வென்றது தன் வாழ்வின் திருப்புமுனைத் தருணம் என்று அப்போது குறிப்பிட்டிருந்தார்.

இதுவரை காமன்வெல்த் போட்டிகளில் இந்தியா 3 தங்கப்பதக்கங்களையும் ஒரு வெள்ளிப் பதக்கத்தையும் வென்றுள்ளது.

இந்நிலையில், சதீஷ்குமார் தங்கப் பதக்கம் வென்றதற்கு இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption தங்கப் பதக்கம் வென்ற சதீஷ்

முன்னாள் ராணுவ வீரரான சதீஷ் குமாரின் தந்தையும் தேசிய அளவிலான பளுதூக்கும் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். ஆனால், அவரது பணி காரணமாக அவரால் இதில் பெரிய அளவில் வெற்றி பெறமுடியவில்லை.

படத்தின் காப்புரிமை Getty Images

எனவே, தன் மகனை பெரிய பளு தூக்கும் வீரராக்க வேண்டும் என்ற கனவில் சதீஷுக்கு 12 வயதிலிருந்தே பயிற்சி அளித்து வந்தார்.

அப்போதிலிருந்தே தினமும் கடும் பயிற்சி எடுத்து வந்த சதீஷ், 2006ஆம் ஆண்டில் மாவட்ட அளவிலான போட்டியில் கலந்து கொண்டு 50 கிலோ எடை தூக்கி முதலிடம் பெற்றார். பின்பு மாநில, தேசிய அளவில் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்ட இவர் பல பதக்கங்களை வென்றுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்