`ஒன்றரை கிலோ செய்திதாள், 250 ரூபாய் குடிநீர்’ - காமன்வெல்த் சுவாரஸ்யங்கள்

  • ரெஹான் ஃபஜல்
  • பிபிசி

மிராபாய் சானு. நான்கு அடி எட்டு அங்குலம்தான் இருக்கிறார். அவரது எடையும் 48 என்கிறார். ஆனால், நேரில் பார்ப்பதற்கு 40 கிலோ இருப்பார் என்று கூட தோன்றவில்லை. நான் அவரை காமன்வெல்த் போட்டிகள் நடைபெறும் கராரா மைதானத்தில் பார்த்தபோது, அவர் சட்டென்று என்னை அடையாளம் கண்டு கொண்டார்.

பட மூலாதாரம், DEAN MOUHTAROPOULOS / GETTY IMAGES

ஒரு நாளுக்கு முன்புதான் நான் அவரை, அவர் தங்கம் வென்ற மைதானத்தில் சந்தித்தேன்.

அங்கு நாங்கள் பேச அனுமதி இல்லை என்பதால், நான் அவரை மைதானத்திற்கு வெளியே அழைத்தேன். அவரும் என் அழைப்பை ஏற்று வந்தார்.

உங்களது வெற்றியை நீங்கள் எப்படி உணர்கிறீர்கள், எப்படி கொண்டாடுகிறீர்கள் என்று கேட்டதற்கு? அவர், "வீட்டிற்கு தொலைபேசியில் அழைத்து பேசினேன். வேறொன்றும் பெரிதாக கொண்டாடவில்லை. அனைத்து போட்டிகளும் முடிந்த பின்னர்தான் அனைத்து கொண்டாட்டங்களும். இப்போது மீதமுள்ள போட்டிகளில் விளையாட இருக்கும் போட்டியாளர்கள் குறித்து பதற்றம உள்ளது. " என்கிறார்.

'கையுடன் அரிசி'

மிராபாய் சானு ஒரு சுவாரஸ்யமான விஷயத்தை நம்மிடம் பகிரிந்துக் கொண்டார். அவர் எங்கு விளையாட சென்றாலும், கையுடன், அவருக்கு பிடித்தமான அரிசியையும் எடுத்து செல்வாராம். அதைதான் அவர் சமைத்து உண்பாராம்.

ரியோ ஒலிம்பிக்ஸில் அவரை பார்த்தபோது, அவர் மிகவும் பதற்றமாக காணப்பட்டார். கடைசி நேரத்தில் அவரால் சரியாக விளையாட முடியாமல் போய்விட்டது. ஆனால், இப்போது மிராபாய் சானுவை பார்க்கும் போது, அவர்தானா இவர் என்று நமக்கே சந்தேகமாக இருக்கிறது.

இப்போது தன்னம்பிக்கையுடன் காணப்படுகிறார். சிரித்தமுகமாக போட்டியை எதிர்கொள்கிறார்.

விளையாட்டு வீரர்களும், வேண்டுதல்களும்

பாகிஸ்தானை சேர்ந்த அபு சூஃபியான் பளு தூக்க மைதானத்தில் நுழையும் போது, வேகமாக இறைவனை வேண்டுகிறார். 'இறைவா என்னை கவனமாக பார்த்துக்கொள்' என்கிறார். மீண்டும் சத்தமாக இறவனை வேண்டுகிறார்.

அவரது பயிற்றுநரும் இறைவனை வேண்டுகிறார். அந்த சத்தம் எங்கும் கேட்கிறது. ஆனால், இறைவன் அவர்களுக்கு செவிமடுக்கவில்லை. அபுவால் அந்த எடையை தூக்க முடியவில்லை.

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு,

சஞ்சிதா சானு

இந்திய வீரர் சஞ்சிதா சானு அரங்கத்திற்குள் நுழையும் போது, இந்தியர்கள் கோயிலுக்குள் செல்லும் போது வாசலை தொடு வணங்குவது போல நிலத்தை தொட்டு வணங்குகிறார். பின் பார்வையாளர்கள் பக்கம் திரும்பி, குனிந்து அவர்களை வணங்குகிறார். அந்த எடையை தூக்குவதற்குமுன், அதனை முத்தமிடுகிறார்.

பின் சர்வசாதாரணமாக அந்த 112 கிலோ எடையை தூக்கி, இந்தியாவிற்கு ஒரு தங்கத்தை உறுதி செய்கிறார்.

கடந்த ஆண்டு அவர் தமக்கு அர்ஜுனா விருது தராததால் கடுமையான கோபத்தில் இருந்தார். அவரை அரங்கத்தில் சந்தித்தபோது, இம்முறை உங்களுக்கு அர்ஜுனா விருது தருவதை யார் தடுத்திட முடியும் என்றேன். அவர் சத்தமாக சிரித்து, நான் கூறுவதை ஆமோதித்தார்.

ஒன்றரை கிலோ செய்திதாள், 250 ரூபாய் குடிநீர்

காமன்வெல்த் போட்டி நடக்கும் கோல்ட் கோஸ்ட்டில் சில விஷயங்கள் என்னை தளர்ச்சி அடைய செய்கின்றன.

முதலாவது இங்குள்ள செய்திதாள்களின் எடை. ஆம் ஒவ்வொரு செய்திதாளும் நூறு பக்கங்கள் வரை இருக்கின்றன. ஒன்றரை கிலோ கனம் கனக்கிறது. அதை தூக்கி கையில் வைத்து படித்தால், கைகள் சுளுக்கி கொள்ளும்போல. பிறகு அதன் விலை, இந்திய மதிப்பில் அங்குள்ள செய்திதாள்களின் விலை ரூபாய் 200.

அடுத்து பேருந்துகளில் உள்ள 'சீட் பெல்ட்'. எனக்கு அது பிடிக்கவில்லை என்று அர்த்தம் அல்ல... நான் அதற்கு பழக்கப்படவில்லை. பயணிகள் அனைவரும் சீட் பெல்ட் அணியும் வரை இங்கு பேருந்துகள் நகராது.

மூன்றாவது பாட்டில் குடி தண்ணீரின் விலை. ஆம், 250 மி.லி தண்ணீரின் விலை இந்திய மதிப்பில் ரூபாய் 250.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: