சிஎஸ்கே 2.0 : மும்பை இந்தியன்ஸ் அணியை கடைசி 17 பந்துகளில் எப்படி வீழ்த்தியது சென்னை?

11-வது ஐ.பி.எல் சீசன்  நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கியது. முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. 

படத்தின் காப்புரிமை Getty Images

இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டு ஆண்டுகள் தடைக்கு பிறகு மீண்டும் ஐ.பி.எல் களத்தில் நுழைந்திருக்கும் சென்னை  அணி வெற்றியுடன்  கணக்கைத்  தொடங்கியுள்ளது.

நேற்று இரவு நடந்த போட்டியில் தோல்வியின் விளிம்பில் இருந்த சென்னை அணி கடைசி 17 பந்துகளில் அதிரடியாக 50 ரன்களை குவித்து மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

ஓராண்டு இடைவெளிக்கு பிறகு மீண்டும் அணித்தலைவராக வலம் வந்த  தோனி நேற்றைய  போட்டியில்  டாஸ் வென்றதும் சேஸிங்கை தேர்வு செய்தார்.

மும்பை இந்தியன்ஸ் அணித்தலைவர் ரோஹித் ஷர்மா துவக்க  வீரராக களம் இறங்கினார். பவர்பிளே ஓவர்களில் மும்பை அணியால் அதிகம் ரன்கள் குவிக்க முடியவில்லை.மேலும் இரண்டு விக்கெட்டுகளையும் இழந்தது.

மூன்றாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த இஷான் கிஷன் மற்றும் சூர்ய குமார் யாதவ் ஆகிய இருவரும் பொறுப்பாக ரன்கள் சேர்த்து அவுட் ஆயினர். அதன் பின்னர் பாண்ட்யா சகோதரர்கள் மும்பை ரசிகர்களுக்கு சிக்ஸர்களால்  வாண வேடிக்கை  காட்டத் துவங்கினர்.

சென்னை அணியைச் சேர்ந்த பிராவோ தனது கடைசி இரண்டு ஓவர்களை சிறப்பாக வீசியதால் மும்பை அணி கடைசி ஓவர்களில் அதிகளவு ரன்களை குவிக்க முடியவில்லை. இறுதியில் சென்னைக்கு 166 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

படத்தின் காப்புரிமை Getty Images

மும்பை அணி சார்பில் க்ரூனால் பாண்ட்யா 22 பந்துகளில் 5 பௌண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் உதவியுடன் 41 ரன்கள் குவித்தார். 

சென்னை அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. குறிப்பாக அறிமுக சுழற்பந்து வீச்சாளர் மார்கண்டே தோனி, ராயுடு ஆகியோரை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு நெருக்கடி கொடுத்தார்.

119/8 என்ற நிலையில் சென்னை பரிதவித்தபோது, தோனி தலைமை வகிக்கும் அந்த  அணி  18 பந்துகளில் 47 ரன்கள் எடுக்க வேண்டுமென்ற நிலை. 

ஆட்டத்தின் 18-வது ஓவரை  மெக்லனகன் வீசினார். முதல் பந்தில் தாஹிர் ஒரு ரன் எடுத்தார். இரண்டாவது மற்றும் மூன்றாவது பந்தை சிக்சருக்கு விரட்டினார் பிராவோ. 4-வது பந்தில் 2 ரன்களும்  ஐந்தாவது பந்தை பௌண்டரிக்கு விளாசி நான்கு ரன்களும் குவித்தார். 18-வது ஓவரின் இறுதி பந்தில் அவர் மேலும் ஒரு ரன் எடுத்தார். மொத்தம் 20 ரன்கள் அந்த ஓவரில் வந்தது.

கடைசி 2 ஓவர்களில் 27 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலை சென்னைக்கு. மும்பை இந்தியன்ஸ் அணி சார்பில் பும்ரா பந்துவீசினார். 19-வது ஓவரின் முதல்  இரண்டு பந்துகளையும் சிக்ஸர் விளாசினார் பிராவோ. 25 பந்துகளில் அரை சதம் கடந்த பிராவோ, பும்ராவின் அந்த ஓவரில் மூன்றாவது  பந்தில் இரண்டு ரன்கள் எடுத்தார்.

நான்காவது பந்தில் அதிர்ஷ்டவசமாக அவுட் ஆகாமல் பிழைத்த பிராவோ, ஐந்தாவது பந்தில்  மீண்டும் ஓர் சிக்ஸர் விளாசினார். ஆனால்  அதற்கடுத்த  பந்திலேயே அவுட் ஆனார். 19 - வது ஓவரில் சென்னை அணி 20 ரன்கள் குவித்தது.

படத்தின் காப்புரிமை Getty Images

ஆட்டத்தில் இறுதி ஓவரில் 7 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை சிஎஸ்கேவுக்கு. ஒரு விக்கெட் எடுத்தால் எளிதில் வெற்றி என்ற நிலை ரோஹித் அணிக்கு. கேதர் ஜாதவ் பேட்டிங்  முனையிலும்  முஸ்தபிசுர் ரஹ்மான் பௌலிங்  முனையிலும்  வந்தனர். 

இறுதி ஓவரின்  முதல் மூன்று பந்தில்  ரன்கள் இல்லை. நான்காவது  பந்தில் சிக்ஸர் மற்றும் ஐந்தாவது பந்தில் ஓர் பௌண்டரி அடித்து அணி வெற்றி பெற உதவினார் கேதர் ஜாதவ்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒரு விக்கெட்  வித்தியாசத்தில் வெல்வது ஐபிஎல் வரலாற்றில் இதுவே முதல் முறை. 

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்