துப்பாக்கிச் சூட்டில் கலக்கிய இரு இந்திய பெண்கள் - தங்கம், வெள்ளியை கைப்பற்றினர் #CWG

மனு பேகர் மற்றும் ஹீனா சித்து
படக்குறிப்பு,

தங்கம் வென்ற மனு பாகர் (வலது) மற்றும் வெள்ளி வென்ற ஹீனா சித்து (இடது)

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த்தில், துப்பாக்கி சுடுதல் போட்டியில் 16 வயதான மனு பாகர் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். இதே போட்டியில் இந்தியாவை சேர்ந்த ஹீனா சித்து வெள்ளியை கைப்பற்றி உள்ளார்.

மனு பாகர்: கொரியாவில் இருந்து கோல்ட்கோஸ்ட் வரை

பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் தங்கம் வென்றுள்ள 16 வயதான மனு, ஹரியானா மாநிலத்தில் கொரியா என்ற கிராமத்தை சேர்ந்தவர் ஆவார். மருத்துவ படிப்பு படிப்பதற்காக தன்னை தயார்படுத்திக் கொண்டிருக்கிறார்.

16 வயதான மனு, சமீபத்தில் சீனியர் உலக கோப்பை போட்டியில் இரண்டு பதக்கங்களை வென்றுள்ளார்.

குத்துச்சண்டை, நீச்சல் போன்ற பல விளையாட்டுகளை பள்ளியில் முயற்சி செய்தாலும், காயம் ஏற்பட்டதால் குத்துச்சண்டை விளையாடுவதை நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.

ஆனால், மணிப்பூரி மார்ஷியல் ஆர்ட்ஸான தங் தா மீது ஆர்வம் காட்டினார் மனு.

இந்நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக, மனுவின் பள்ளியில் சில மாணவர்கள் துப்பாக்கி சுடும் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்ததை பார்த்தார் மனுவின் தந்தை ராம்கிஷன்.

அதில் கலந்து கொண்ட சில நாட்களிலேயே மனு சிறப்பாக விளையாடினார். மேலும், தேசிய மற்றும் மாநில அளவு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி கண்டார்.

இந்தப் பயணம்தான் அவரை காமன்வெல்த் போட்டியில் தங்கம் பெற உதவியது.

இந்த வெற்றிக்காக மனு கடுமையாக போராடியுள்ளார். ஆனால், இதில் அவரது பெற்றோரும் முக்கிய பங்கு வகித்துள்ளனர்.

மனுவின் தந்தை கடல் பொறியாளராக பணியாற்றி வந்தார். ஆனால், விளையாட்டில் மனுவிற்கு இருந்த எதிர்காலத்தை பார்த்து தன் பணியை விட்டு, மனுவிற்கு உதவியாக இருந்தார்.

அனைத்து வீரர்களும் ஏதாவது ஒரு கஷ்டத்தை தங்கள் வெற்றிப் பாதையில் சந்திக்க நேரிடும். மனுவுக்கும் அப்படித்தான். பொது போக்குவரத்து வாகனங்களில் பயணிக்கும் போது துப்பாக்கியை எடுத்து செல்வது என்பது கடினமாக இருந்தது.

எனவே, மனு எங்கு சென்றாலும் அவரது தந்தையும் உடன் செல்வார்.

துப்பாக்கி சுடுதலில் தேர்ச்சி பெற மன அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருப்பது அவசியம். மன அமைதிக்காக யோகா மற்றும் தியானம் செய்து வந்தார் மனு.

ஹரியானாவில் உள்ள ஒரு கிராமத்தில் இருந்து வந்த மனு மீது பலரும் பெரும் நம்பிக்கை வைத்திருக்கும் நேரத்தில் தற்போதே 2020ஆம் ஆண்டு நடைபெற ஒலிம்பிக்ஸ் குறித்து யோசிக்க தொடங்கிவிட்டார் மனு பாகர்.

துப்பாக்கித் தாரகை ஹீனா சித்து

இரானில், கடந்த 2016இல் நடந்த விளையாட்டுப் போட்டிகளில், ஹிஜாப் அணிந்து கொண்டுதான் விளையாட வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டதால், அப்போட்டிகளில் கலந்துகொள்ள மறுத்து வெளியேறியபோது துப்பாக்கி சுடும் வீராங்கனை ஹீனா சித்து பரவலாக அறியப்பட்டார்.

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் 1989இல் பிறந்த அவர் பல் மருத்துவத்தில் பட்டம் பெற்றிருந்தாலும், அவர் தந்தையைப் போலவே துப்பாக்கி சுடுதலில் ஆர்வம் கொண்டார்.

நரம்பியல் நிபுணராக விரும்பிய அவர், தனது மருத்துவ நுழைவுத் தேர்வுகளுக்கு கடுமையாக தயார் செய்து கொண்டிருந்தார்.

அந்த மன அழுத்தத்தில் இருந்து விடுபடும் நோக்கில், துப்பாக்கி செய்பவரான தனது உறவினர் ஒருவர் மூலம் துப்பாக்கி சுடக் கற்றுக்கொண்டார். அதுவே அவருக்கு துப்பாக்கி சுடுதலில் ஈர்ப்பை உண்டாக்கியது.

தனது கல்லூரிக் காலங்களிலேயே பதக்கங்களை வெல்லத் தொடங்கிய அவர் 19ஆம் வயதில் துப்பாக்கி சுடுதலில் ஹங்கேரி ஓபன் பட்டத்தை வென்றார். 2009இல் நடந்த உலகக் கோப்பையில் வெண்கலம் வென்றார். தனது பயிற்சியாளர் ராணக் பண்டிட்டை மணந்துகொண்டார்.

2013இல் நடந்த உலகக் கோப்பை போட்டியில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் தங்கம் வென்றபோது, அதற்கு முந்தைய உலக சாதனையை முறியடித்தார். அத்துடன் உலகத் தர வரிசையில் முதலிடமும் பெற்றார்.

அவர் பங்கேற்கும் போட்டிகள் உடல்திறனை அதிகம் சார்ந்திராதபோதிலும் அவரது உணவு முறையில் அதிகம் கவனம் செலுத்துகிறார்.

கடந்த ஆண்டு அவருக்கு விரலில் உண்டான காயம் துப்பாக்கி சுடும்போது அதிக அளவில் வலியை ஏற்படுத்தினாலும், முறையான சிகிச்சைகளுக்கு பிறகு தற்போது முழுமையாக குணமடைந்துள்ளார்.

அவரைப்பற்றி இன்னும் அதிகமாக அறிந்துகொள்ள அவரது வலைத்தளத்திற்கு சென்றேன். ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் வெண்கலம், அதே பிரிவில் கடந்த ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் ஷூட்டிங் சாம்பியன்ஷிப் போட்டிகளில் தங்கம் ஆகியவற்றை அவர் வென்றுள்ளார்.

10 மீட்டர் ஏர் பிஸ்டல் குழு போட்டிகளில், ஜித்து ராயுடன் இணைந்து கடந்த ஆண்டு உலகக் கோப்பை போட்டிகளில் தங்கம் வென்றார்.

துப்பாக்கி சுடுவதை தவிர்த்து வாசித்தல், பயணம் ஆகியவற்றில் அதிகம் ஆர்வத்துடன் உள்ளார் ஹீனா.

ஹீனாவின் கைகள் துப்பாக்கி சுடுவதில் மட்டுமல்ல, ஓவியம் வரைவதிலும், வர்ணம் தீட்டுவதிலும் வல்லமை மிக்கவை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: