ஹாக்கி: சுலபமான வெற்றியை பாகிஸ்தானிடம் கைநழுவவிட்ட இந்தியா

  • ரெஹான் ஃபஜல்
  • பிபிசி, கோல்ட் கோஸ்ட், ஆஸ்திரேலியா

கோல்ட் கோஸ்ட்டில் நடைபெற்றுவரும் காமன்வெல்த் போட்டிகளில் இந்தியா-பாகிஸ்தான் இடையிலான ஹாக்கி போட்டி தொடங்கியபோது, அது ஆஸ்திரேலியாவில் உள்ள மைதானம் அல்ல, ஜலந்தர் அல்லது தில்லியில் இருக்கும் மைதானம் என்றே தோன்றியது.

பட மூலாதாரம், Getty Images

முழு அரங்கமும் இந்திய பார்வையாளர்களால் நிரம்பி இருந்தது. 'சக் தே இந்தியா' என்ற புகழ்பெற்ற இந்தி திரைப்பட வசனமும், இந்தியாவே வெல்லும் என்ற முழக்கங்களும் இந்திய அணியை உற்சாகமூட்டும் வகையில் அரங்கத்தில் எதிரொலித்தன.

இந்த போட்டியை பார்ப்பதற்காக ஆஸ்திரேலியாவின் தொலைதூர பகுதிகளிலிருந்து இந்திய மக்கள் வந்திருந்தனர். விக்ரம் சட்டா என்ற ரசிகர், இந்திய-பாகிஸ்தான் ஹாக்கிப் போட்டியைக் நேரில் பார்ப்பதற்காக தாஸ்மேனியாவில் இருந்து வந்திருந்தார்.

கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு இடையே, அரங்கத்திற்கு உள்ளே சில இந்தியர்கள் டிரம்ஸ் கொண்டு வந்தனர். இந்திய வீரர்கள் வலுவான நிலையில் இருந்தபோது அவை உச்சகட்டத்தில் முழங்கப்பட்டன.

பட மூலாதாரம், Getty Images

இந்திய தேசியக்கொடிகள் அரங்கத்தில் நிறைந்து காணப்பட, பாகிஸ்தானின் கொடிகளை காணமுடியவில்லை. நுழைவுச்சீட்டு கிடைக்காமல் ஏமாற்றத்துடன் பல இந்தியர்கள் அரங்கத்திற்கு வெளியே நின்று கொண்டிருந்தனர். எப்படியாவது நுழைவுச்சீட்டு வாங்கிவிடமுடியும் என்ற நம்பிக்கையுடன் அவர்கள் வந்திருந்தனர்.

முதல் இரண்டு சுற்றுகளில், பாகிஸ்தான் அணியின்மீது இந்தியா ஆதிக்கம் செலுத்தியது. 2-0 என்ற நிலையில் முன்னணியில் இருந்த இந்தியா வெற்றி பெறும் என்றே தோன்றியது. ஆனால் மூன்றாவது சுற்றில் ஆட்டத்தின் போக்கு மாறி, பாகிஸ்தான் அணி இந்தியாவின் ஸ்கோரை சமன்செய்தது.

இந்திய வீரர்கள் முன்னணியில் இருப்பதற்கான முயற்சியில் விளையாடினார்கள். மூன்றாவது மற்றும் நான்காவது சுற்றில், பாகிஸ்தானின் 'டி' பகுதிக்குள் இந்திய வீரர்கள் இரண்டு முறை மட்டுமே நுழைய முடிந்தது.

போட்டியில் ஒரு சுவையான தகவல் பரிமாற்றத்தை காணமுடிந்தது. இரு தரப்பு வீரர்களும், விளையாடும்போது, தங்கள் அணியினருடன் உரக்க பேசிக் கொண்டிருந்தார்கள். குறிப்பாக, இந்திய கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ், இந்திய அணியின் கோல் போஸ்டில் இருந்தே உரத்தக் குரலில் தனது அணியினருடன் பேசினார்.

பட மூலாதாரம், Getty Images

ஆட்டத்தின் துவக்கத்தில், எனது அருகில் அமர்ந்திருந்த ஏ.எஃப்.பி பத்திரிகையாளர் செலாயி டிரம்ப், போட்டியின் முடிவைப் பற்றி எந்த சந்தேகமும் இல்லை என்று என்னிடம் கூறினார். இந்தியா அணி எத்தனை கோல்கள் வித்தியாசத்தில் வெற்றிபெறும் என்று சொல்லுங்கள் பார்ப்போம் என்று என்னிடம் கேட்டார்.

2-0 என்று நான் சொன்னதை மறுத்த செலாயி டிரம்ப் 3-1 என்ற கோல் கணக்கில் இந்தியா வெற்றிபெறும் என்றார். ஆனால் எங்கள் இருவரின் கணிப்பும் பொய்த்துப்போக, பாகிஸ்தான் 2-2 என்ற கோல் கணக்கில் போட்டியை சமன்செய்தது.

கடைசி நொடியில் ஹூட்டர் விசில் ஊதியபோது, இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தது. ஆனால் பாகிஸ்தான் அணி 'ரெஃப்ரல்' எடுத்தது, அவர்கள் தரப்புக்கு சாதகமாக, இந்திய அணியின் வெற்றி கைநழுவியது.

பாகிஸ்தானின் அலி முப்ஷர் கோல் போடுவதில் எந்த தவறும் செய்யவில்லை. போட்டி முடிந்தபிறகு, இந்திய அணியின் கேப்டனிடம் பேசியபோது, இந்தியா ஏன் இறுதி நொடிகளில் கோலை கோட்டை விடுகிறது என்று கேட்டேன். அப்படி எதுவும் இல்லை என்று சொன்ன அவர், கடந்த ஆறு மாதங்களில் கடைசி நொடிகளில் அப்படிப்பட்ட சம்பவம் எதாவது நடந்திருப்பதாக உதாரணம் காட்ட முடியுமா என்று எதிர்க்கேள்வி எழுப்பினார்.

பட மூலாதாரம், Getty Images

அப்படி எதாவது சம்பவம் நடந்திருந்தால்கூட, கடைசி வினாடிகளில் நாங்கள் கோல் அடித்திருக்கிறோம் என்பதையும் மறுக்கமுடியாது என்று அவர் உறுதியாக சொன்னார். இந்த போட்டி நிச்சயம் டிராவில் முடிவடைந்தது. ஆனால் 0-2 என்ற நிலையில் இருந்த பாகிஸ்தான் அணி, இந்தியாவைப் போன்ற கடினமான அணிக்கு எதிராக போட்டியை சமன் செய்தது, தார்மீக வெற்றி அவர்களுக்குதான் என்பதை உணர்த்துகிறது.

பாகிஸ்தான் ஹாக்கி அணியின் பயிற்சியாளராக மாறிய இந்திய பயிற்சியாளர்

கராரா ஹாக்கி மையத்தில் நான் நுழைந்தபோது, பாகிஸ்தான் ஹாக்கி அணிக்கு பயிற்சியளித்துக் கொண்டிருந்த முகம் பரிச்சயமானதாக தோன்றியது. அது யார் என்று மூளையை கசக்கியபோது, அவர் ஹாலந்தின் ரோலண்ட் ஓல்ட்மன்ஸ் என்பதும், சில மாதங்களுக்கு முன்னர் இந்திய ஹாக்கி அணியின் பயிற்சியாளராக இருந்தவர் என்பதும் நினைவுக்கு வந்தது.

போட்டி முடிந்த பிறகு ரோலண்ட்டிடம் நான் பேசியபோது, இந்திய வீரர்களின் நிறை-குறைகளை பற்றி பாகிஸ்தான் அணியினருக்கு நீங்கள் சொல்லியதுதான் இந்திய அணியின் பின்னடைவுக்கு காரணமா என்று கேட்டேன்.

ரோலண்ட் ஓல்ட்மன்ஸ் சிரித்துக்கொண்டே சொல்கிறார், 'அதுவும் காரணமாக இருக்கலாம். ஆனால் போட்டியின் முடிவை அது பாதிக்காது என்று சொன்னார். ஏனென்றால் எனது வியூகம் எப்படி இருக்கும் என்பதை இந்திய அணி கணிக்க முடியும் என்பதும் எனக்கு தெரியும். இதை எதிர்கொள்வதற்கான திட்டங்களையும் அவர்கள் யோசித்திருப்பார்கள்'.

இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் ரோலண்ட் ஓல்ட்மன்ஸ் இந்திய அணியின் பயிற்சியாளராக இருப்பதற்கு முன் பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளராக இருந்தார்.

பட மூலாதாரம், Getty Images

போட்டிக்கு செல்ல வேண்டிய இடத்தில் இருந்து 98 கி.மீ. தூரம் அழைத்துச் சென்ற பேருந்து ஓட்டுநர்

செல்ல வேண்டிய இடத்திற்கு போகும்போது பாதை மாறிப்போவது போன்ற தவறுகள் இந்தியாவில் மட்டுமே நடக்கும் என்று நினைக்காதீர்கள். ஆஸ்திரேலியா போன்ற வளர்ச்சியடைந்த நாடுகளிலும் இப்படி நடக்கும் என்பதற்கு கோல்ட் கோஸ்ட் விளையாட்டுப் போட்டிகளிலேயே ஒரு உதாரணம் இருக்கிறது.

கிரேனடாவின் மகளிர் பீச் வாலிபால் அணி, கூல்ங்கத்தா கடற்கரையில் ஸ்காட்லாந்து அணியுடன் விளையாட சென்றது. அப்போது அணியினரை அழைத்துச் சென்ற பேருந்து ஓட்டுநர், போட்டி நடைபெறும் இடத்தில் இருந்து 98 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பிரிஸ்பேன் மியர்ஸ் வேலோட்ரோமுக்கு சென்றுவிட்டார்.

இந்த தவறு எப்படி நிகழ்ந்தது? காரணம் என்ன தெரியுமா? காமன்வெல்த் விளையாட்டு நிர்வாகிகளின் அங்கீகாரம் பெறாத 'SAT Navigating device' என்பதை வாகன ஓட்டுநர் பயன்படுத்தியதுதான்.

தவறு கண்டறியப்பட்டவுடன், கிரேனடா அணியினர் போட்டி நடைபெறும் இடத்திற்கு காவல்துறையினரின் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த எதிர்பாராத குழப்பத்தினால் 12.45க்கு நடைபெற வேண்டிய போட்டிக்கு கிரேனடா அணியினர் தாமதமாக சென்றனர்.

ஸ்காட்லாண்ட் அணியுடனான போட்டியில், நேர் செட்களின் அவர்கள் தோற்றுப்போனார்கள். போட்டிக்கு முன் 'வார்ம்-அப்' பயிற்சிகளுக்கு போதுமான நேரம் கிடைக்கவில்லை என்று கிரேனடா அணியினர் கூறினார்கள்.

அதேபோல் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை முன்னிட்டு போதுமான போக்குவரத்து முன்னேற்பாடுகள் செய்யவில்லை என்றும் புகார்கள் எழுந்துள்ளன. முறையான பேருந்து ஏற்பாடுகள் செய்யப்படாததால், துவக்க விழாவின்போது, கராரா அரங்கில் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் சிக்கித் தவித்தனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: