ஒரு தொலைக்காட்சித் தொடர் உருவாக்கிய துப்பாக்கி வீராங்கனை

தேசிய துப்பாக்கி சுடும் போட்டியில் 2017ல் எட்டு பதக்கங்களை வென்ற 17 வயது மெஹூலி கோஷ், மெக்சிகோவில் நடைபெற்ற உலகக் கோப்பைப் போட்டியில் இரண்டு பதக்கங்கள் வென்று சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் தடம் பதித்தார்.

மேற்கு வங்க மாநிலம் சீராம்புரைச் சேர்ந்த மெஹூலிக்கு துப்பாக்கி சுடுவதில் ஆர்வம் ஏற்பட்டதற்கு காரணம் சி.ஐ.டி என்ற தொலைகாட்சித் தொடரில் வரும் இன்ஸ்பெக்டர் தயா என்ற கதாபாத்திரம்தான்.

14 வயதில் துப்பாக்கி சுடும் பயிற்சி எடுத்துக்கொண்டிருந்த மெஹூலியின் துப்பாக்கியில் இருந்து வெளிப்பட்ட குண்டு இலக்கு தவறி ஒருவர் காயமடைந்ததால் இரண்டு ஆண்டுகால தடையை எதிர்கொண்டார்.

இந்த சம்பவத்தால் மனம் பாதிக்கப்பட்ட மெஹூலி, உளவியல் ஆலோசனை பெற்று மன அழுத்தத்தில் இருந்து வெளிவந்தார்.

மனச்சோர்வு மற்றும் அவநம்பிக்கையில் இருந்த மெஹூலியை, அவரது பெற்றோர் 2015ஆம் ஆண்டில் முன்னாள் ஒலிம்பிக் வீரர் ஜாய்தீப் கர்மாகரின் அகாடமியில் சேர்த்துவிட்டனர்.

மெஹூலியின் திறமையை அறிந்த கர்மாகர் எடுத்த முயற்சிகளும், மெஹூலியின் கடும் பயிற்சிகளுமே இன்று அவரை சாதனை நாயகியாக உயர்த்தியிருக்கிறது.

2016 மற்றும் 2017ஆம் ஆண்டுகளில் அவர் தேசிய அளவிலான போட்டிகளில் மெஹூலி பதக்கங்களை வென்றார்.

விளையாட்டின் நுணுக்கங்களை மட்டுமல்ல, மனதளவிலும், உடலளவிலும் வலுவாக இருக்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும் கர்மாகர் போதித்தார்.

மெஹூலி, பிற 17 வயது இளம்பெண்களைப்போல செல்பேசி வைத்திருந்தாலும், சமூக ஊடகங்களைப் பயன்படுத்த அனுமதிக்கப்படுவதில்லை.

காமன்வெல்த் போட்டிகளில் முதல் முறையாக இந்தியாவைப் பிரதிநிதித்துவம் செய்யும் மெஹூலி, கோல்ட் கோஸ்ட்டில் தங்கப் பதக்கத்தில் வெல்வார் என்ற எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.

2012 லண்டன் ஒலிம்பிக்கில் நான்காவது இடத்தைப் பிடித்த ஜெய்தீப் கர்மாகர், மயிரிழையில் வெண்கலப் பதக்கத்தை இழந்தார்.

தன்னுடைய வழிகாட்டி தவறவிட்ட பதக்கத்தை வெல்வதே இந்த இளம் வீராங்கனையின் அடுத்த இலக்கு.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்