காவிரியும், ஐபிஎல்லும்- மக்கள் பிரச்சனைக்காக மைதானத்தில் நடைபெற்ற 5 முக்கிய போராட்டங்கள்

படத்தின் காப்புரிமை Getty Images

தமிழகத்தை தற்போது பரபரப்பாக வைத்துள்ளது காவிரி விவகாரம். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள் முன்னிறுத்தப்பட்டு வரும் நிலையில், சென்னையில் ஐபிஎல் போட்டி நடத்தக்கூடாது என பல அமைப்புகளும் போராடி வருகின்றனர்.

அதன் ஒரு பங்காக சென்னையில் கிரிக்கெட் போட்டியில் வீர்ர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து விளையாட வேண்டும் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்திருந்தார். இது நடைமுறை சாத்தியமா என்பது ஒரு புறம் இருக்க, உலகம் முழுவதும் விளையாட்டு வீர்ர்கள் சமூக பிரச்சனைகளுக்கு தங்கள் பிரச்சனை குறித்து பறைசாற்ற மைதானங்களை இடமாக சில நேரங்களில் பயன்படுத்தியுள்ளனர் அதில் மிக முக்கியமாக கருதப்படும் ஐந்து நிகழ்வுகள் இங்கே.

வியட்நாம் போருக்கு எதிராக குரல் கொடுத்த முகமது அலி

படத்தின் காப்புரிமை Getty Images

வியட்நாம் போர் நடைபெறும் சமயத்தில் குத்துச் சண்டை வீரர் முகமது அலி அமெரிக்க ராணுவத்தில் சேர்ந்து வியாட்நாமுக்கு எதிராக போர் புரிய வேண்டும் என்று சிலர் கூறினர். இந்நிலையில், அமெரிக்காவில் சில நீக்ரோ இன மக்கள் நாய்களை போன்று நடத்தப்பட்டு வருகின்றனர், அவர்களுக்கு அடிப்படை மனித உரிமைகள் மறுக்கப்பட்டு வருகின்றன. அப்படி இருக்க நான் எதற்காக சீருடை அணிந்து கொண்டு வியட்நாமில் உள்ள மாநிற மக்கள் மீது குண்டு போட வேண்டும் என வியட்நாம் போருக்கு தன் எதிர்ப்பை முகமது அலி தெரிவித்தார்.

ஒலிம்பிக்கில் எதிர்ப்பு

படத்தின் காப்புரிமை AFP/Getty Images

அமெரிக்காவில் வசிக்கும் கருப்பின மக்களின் வறுமையை சுட்டிக்காட்டும் வகையில், 1968ஆம் ஆண்டில் மெக்சிகோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் நடைபெற்ற தங்கப்பதக்கம் வென்ற டாமி ஸ்மித்தும், வெண்கலப் பதக்கம் வென்ற ஜான் கர்லோஸும், அமெரிக்க தேசிய கீதம் வாசிக்கும்போது கருப்பு நிற கையுறை அணிந்து தங்கள் கைகளை தூக்கினர். இது விளையாட்டுத் துறையில் மிக முக்கிய சம்பவமாக கருதப்படுகிறது. மேலும் அவர்களின் அந்த புகைப்படம் இருபதாம் நூற்றாண்டில் மிகவும் பேசப்பட்ட ஒரு புகைப்படமாகும்.

மாஸ்கோ, லாஸ் ஏஞ்சலஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்கு எதிர்ப்பு

ஆப்கானிஸ்தானை ரஷ்யா ஆக்கிரமித்ததை எதிர்த்து 1980ஆம் ஆண்டு மாஸ்கோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளை அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் புறக்கணித்தது. அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் 1984ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சலஸில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியை ரஷ்யா மற்றும் அதன் நேச நாடுகள் புறக்கணித்தன.

ஜனநாயகத்துக்கு ஆதரவாக கிரிக்கெட் வீரர்கள்

ராபர்ட் முகாபே ஆட்சியை எதிர்த்து ஜிம்பாப்வே கிரிக்கெட் வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். `ப்ளாக் ஆர்ம் பேண்ட்'(Black armband protest) போராட்டம் என்னும் அப்போராட்டம் ஜிம்பாப்வே கிரிக்கெட் வீரர்கள் ஆண்டி ஃபிளவர் மற்றும் ஹென்றி ஒலங்காவால் 2003ஆம் ஆண்டு உலகப் போட்டியில் முன்னெடுக்கப்பட்டது. அவர்கள் இருவரும் தங்கள் கைகளில் கருப்பு நிற பேண்டை அணிய திட்டமிட்டனர். "ஜிம்பாப்வேயில்ஜனநாயகம் அழிந்து வருவதற்கு" வருத்தம் தெரிவிக்கும் வகையில் அவர்கள் இந்த போராட்டத்தை நடத்தினர்.

முட்டியிட்டு எதிர்ப்பு

படத்தின் காப்புரிமை Getty Images

அமெரிக்காவில் கருப்பின மக்கள் மீது போலிஸார் அடக்குமுறையை பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நோக்கில், 2016ஆம் ஆண்டு தேசிய கால்பந்து லீக் போட்டியில் கால்பந்து வீரர் கோலின் கேப்பர்னிக் தேசிய கீதம் பாடும்போது முட்டியிட்டு தனது எதிர்ப்பை தெரிவித்தார். அதை தொடர்ந்து பல நட்சத்திரங்களும் விளையாட்டு வீரர்களும், இனவாதம், அநீதி மற்றும் போலிஸாரின் அடுக்குமுறை ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த போராட்டத்தை முன்னெடுத்தனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்